தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பெண் ஊழியர்களுக்கு 'வலை' வீசும் அதிகாரி!

 பெண் ஊழியர்களுக்கு 'வலை' வீசும் அதிகாரி!

 பெண் ஊழியர்களுக்கு 'வலை' வீசும் அதிகாரி!


PUBLISHED ON : மார் 30, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 30, 2026 03:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''மாமூல் வசூல்ல தீவிரமா இருக்காரு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குள்ள கோவிந்தநல்லுார் கிராமம் வருது... இங்க ஓடுற அர்ஜுனா நதியில், மூணு வருஷத்துக்கும் மேலா, ஒருத்தர் மணல் திருட்டுல ஈடுபடுறாரு பா...

''டிராக்டர், லாரிகள்ல, ராத்திரி முதல் அதிகாலை வரை மணலை அள்ளி, கட்டுமான நிறுவனங்களுக்கு விற்பனை பண்றாரு... இதை கண்டுக்காம இருக்க, இந்த ஏரியா தனிப்பிரிவு ஏட்டுக்கு மாசா மாசம் மாமூல் குடுத்துடுறாரு பா...

''சமீபத்துல, ராத்திரி, 10:00 மணிக்கு மேல மது விற்பனையில் ஈடுபட்ட பார்கள்ல இருந்த மது பாட்டில்களை வச்சக்காரப்பட்டி போலீஸ் அதிகாரி பறிமுதல் செஞ்சாரு... இந்த பார்கள்லயும் தனிப்பிரிவு ஏட்டு மாமூல் வாங்குறாரு பா...

''ஒரு கட்டத்தில, 'நீங்க, பார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதுக்கு முன்னாடி எனக்கு தகவல் தரணும்... அப்ப தான் நான் எஸ்.பி.,க்கு தகவல் தர முடியும்'னு போலீஸ் அதிகாரியிடம் அந்த ஏட்டு சொல்ல, ரெண்டு தரப்புக்கும் வாய் தகராறு வந்துடுச்சு...

''ஏட்டு, எல்லா இடங்கள்லயும் மாமூல்ல புகுந்து விளையாடுறதால, ஸ்டேஷன் போலீசார் எதுவும் செய்ய முடியாம தவிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''ஈஸ்வரன், இப்படி உட்காரும்...'' என்ற குப்பண்ணாவே, ''பொருட்களை வாங்கிட்டு பணம் தராம இழுத்தடிக்கறா ஓய்...'' என்றார்.

''எந்த அலுவலகத்துல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா ஆபீஸ்ல தான்... இந்த தாலுகாவுல, 42 கிராமங்கள் இருக்கு ஓய்...

''இந்த தாலுகா ஆபீஸ்ல, பட்டா மாறுதல் மற்றும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிச்சா, 'புரோக்கர்'களை கவனிச்சா மட்டுமே காரியம் நடக்கும்... அவாளை மீறி ஒரு அணுவும் அசையாது ஓய்...

''இது ஒரு பக்கம் இருக்க, தேர்தல் பணிக்கான, அத்தியாவசிய பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் வாங்கியிருக்கா...

''அதுக்குரிய பணத்தை, அந்த தனியார் நிறுவனங்கள் கேட்டா, 'நீங்க கலெக்டர் ஆபீஸ்ல போய் கேளுங்கோ'ன்னு தாலுகா ஆபீஸ் அதிகாரிகள் கையை காட்டறா... இதனால, பொருட்களை சப்ளை பண்ணவா வெறுத்து போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ஆபாசமா பேசுதாரு வே...'' என்ற, பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''துாத்துக்குடி அரசு மருத்துவ கல்லுாரி நிர்வாக பிரிவில், ஒரு அதிகாரி இருக்காரு... இவரது கட்டுப்பாட்டில், 20க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் வேலை பாக்காவ வே...

''இவங்களுக்கு, அதிகாரி தினமும், மொபைல் போன்ல இருக்குற 'வாட்ஸாப்' செயலில ஆபாச தகவல்களை அனுப்பிட்டு இருக்காரு... ஒப்பந்த பெண் ஊழியர்களிடம் ஆபாசமா பேசி, 'வெளியூர், 'டூர்' போலாமா... எல்லா செலவையும் நானே பாத்துக்கிடுதேன்'னு வலை வீசுதாரு வே...

''கணவரை இழந்த பெண் ஒருத்தருக்கு இப்படி வலை வீச, அவரது பேச்சை அந்த பெண், மொபைல் போன்ல பதிவு பண்ணிட்டாங்க... இந்த ஆடியோ பதிவை, உயர் அதிகாரிகள் இருக்கும், குரூப்லயும் பதிவிட வைச்சிட்டாங்க வே...

''ஆனா, சில நிமிடங்கள்லயே அந்த பதிவை யாரோ அழிச்சிட்டாவ... ஆனாலும், அந்த அதிகாரியிடம் இது சம்பந்தமா இதுவரைக்கும் எந்த விசாரணையும் நடத்தல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''சேவியர் தங்ககுமார் வரார்... சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us