தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/‘டாஸ்மாக்’ கடைகள் திறக்க முறைகேடாக அனுமதி தரும் அதிகாரி!

‘டாஸ்மாக்’ கடைகள் திறக்க முறைகேடாக அனுமதி தரும் அதிகாரி!

‘டாஸ்மாக்’ கடைகள் திறக்க முறைகேடாக அனுமதி தரும் அதிகாரி!


PUBLISHED ON : அக் 05, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 05, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டீ யை கையில் வாங்கியபடியே, “ரேஷன் கடை ஊழியர்களை பாடா படுத்துதாங்க வே...” என, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“சென்னை சோழிங்கநல்லுார் தாலுகாவுல, கஸ்துாரிபாய் மகளிர் கூட்டுறவு சங்கம் சார்பில் ஏழு ரேஷன் கடைகள் இருக்கு... இந்த கடைகளுக்கு, கூட்டுறவு சங்க பெண் அதிகாரி தான் முதலாளி மாதிரி இருக்காங்க வே...

“இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் அம்மா மருந்தகம் ஒண்ணும் இருக்கு... அது, பல வருஷமா நஷ்டத்துல தான் ஓடுது... அந்த நஷ்டத்தை ஈடுகட்ட, ஒவ்வொரு ரேஷன் கடையிலும் மாசம்தோறும் தலா 4,000 ரூபாய் வசூல் பண்ணுதாங்க வே...

“இது போதாதுன்னு ரேஷன் கடை ஊழியர்கள்ல இருந்து, ஆறு மாசத்துக்கு ஒருத்தர்னு மருந்தகத்துல வேலை பார்க்க அனுப்பிடுதாங்க... ஏழு ரேஷன் கடைகளுக்கும், 14 ஊழியர்கள் தேவைப்படுற இடத்துல, 10 பேர் தான் இருக்காவ வே. ..

“அதுலயும் ஒருத்தரை மருந்தகத்துக்கு அனுப்பிடுறதால, ரேஷன் பொருட்களை எடை போட்டு வழங்க, 500 ரூபாய் தினக்கூலிக்கு ஆள் வச்சு சமாளிக்காவ... பெண் அதிகாரியிடம் யாராவது எதிர்த்து கேள்வி கேட்டா, ‘ சஸ்பெண்ட்’ மிரட்டல் விடுக்காங்க வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

தன் மொபைல் போனை பார்த்து, “கெஜலட்சுமி மேடம், ‘மெசேஜ்’ பண்ணியிருக்காங்க...” என முணுமுணுத்த குப்பண்ணாவே, “கூடாத கூட்டத்தால தனுஷ் ஏமாந்து போயிட்டார் ஓய்...” என்றார்.

“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“நடிகர் தனுஷ், அரசியலுக்கு வர ஆழம் பார்த்துண்டு இருக்காரோல்லியோ... இவரது புதிய படத்தின் தொடக்க விழா, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பண்ணசாமி கோவில்ல சமீபத்துல நடந்துது ஓய்...

“இங்க ரசிகர்கள் சந்திப்புடன், அவாளுக்கு அசைவ விருந்துன்னு பிரமாண்ட ஏற்பாடுகள் பண்ணியிருந்தா... 5,000 பேர் வருவான்னு எதிர்பார்த்த சூழல்ல, 1,000 பேர் கூட வரல ஓய்...

“இத்தனைக்கும் தனுஷ், நடிகை பிரீத்தி முகுந்தன், வடிவேலுன்னு பலர் வந்தும், ரசிகர்கள் நிறைய பேர் வரல... ‘ரசிகர்களுடன் போட்டோ ஷூட் இருக்கும்’னு அறிவிச்சிருந்த சூழல்ல, கூட்டம் இல்லாததால விரக்தியான தனுஷ், வி.ஐ.பி.,க்களுடன் மட்டும் போட்டோ எடுத்துண்டு கிளம்பிட்டார்... இவரது கூட்டத்துக்கு வந்தவா எண்ணிக்கையை உளவுப்பிரிவு போலீசாரும் துல்லியமா கணக்கெடுத்து, மேலிடத்துக்கு அனுப்பிட்டா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“மூடிய கடைகளை திறக்க பார்க்கிறாருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

“த.வெ.க., அரசு வந்ததும், பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை, பள்ளிகளை ஒட்டியிருந்த 717 ‘டாஸ்மாக்’ மது கடைகளை மூடுனாங்களே... துாத்துக்குடி மாவட்டத்திலும் 29 கடைகளை மூடிட்டாங்க...

“இந்த சூழல்ல, மாவட்டத்துல புதுசா அஞ்சு மதுபான கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கு... மாவட்ட டாஸ்மாக் அதிகாரி, தனியார் பார் உரிமையாளர்களிடம், ‘கட்டிங்’ வாங்கிட்டு, இந்த கடைகளுக்கு அனுமதி தந்திருக்காருங்க...

“புதிய கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, அந்தந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்துறாங்க... ‘இதனால, அரசுக்கு தான் கெட்ட பெயர் வருது’ன்னு, த.வெ.க.,வினர் புலம்பிட்டு இருக்காங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.

“அய்யப்பன், போலாமா பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us