/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.75 கோடி நிலம் ஆக்கிரமிப்பில் அதிகாரிகள் அலட்சியம்!
/
ரூ.75 கோடி நிலம் ஆக்கிரமிப்பில் அதிகாரிகள் அலட்சியம்!
ரூ.75 கோடி நிலம் ஆக்கிரமிப்பில் அதிகாரிகள் அலட்சியம்!
ரூ.75 கோடி நிலம் ஆக்கிரமிப்பில் அதிகாரிகள் அலட்சியம்!
PUBLISHED ON : ஏப் 09, 2025 12:00 AM

''பெண்களுக்கு அதிகாரம் எல்லாம் வெறும் பேச்சுதான் வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டத்தின், பிரபல சுற்றுலா தல நகராட்சியில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண்தான் தலைவரா இருக்காங்க... ஆளுங்கட்சி முக்கியப் புள்ளியின் வாரிசு, துணைத் தலைவரா இருக்காரு வே...
''பெண் தலைவரை டம்மியாக்கிட்டு, துணைதான் நகராட்சியில் நாட்டாமை பண்ணுதாரு... நகராட்சி கூட்டங்கள்லயும் தலைவரை பேசவிடாம, அவர் மட்டும் பேசிட்டே இருக்காரு வே...
''அவர் சொல்ற இடத்துல, பெண் தலைவர் கையெழுத்து போடணும்... துணைத் தலைவரின் ஆதிக்கத்தை வெளியில சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம பெண் தலைவர் தவிக்காங்க வே...'' என்றார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், ''யாரு வேணும், குன்னுார் வாசிம் ராஜாவா... ராங் நம்பர்...'' என வைத்துவிட்டு, ''என்கிட்டயும் ஆளுங்கட்சி தகவல் ஒண்ணு இருக்கு பா...'' என்றபடியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகர தி.மு.க.,வில் முக்கிய புள்ளியா இருக்கிறவர், நகராட்சி கவுன்சிலராகவும் இருக்காரு... நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தை 2019ல ஏலம் விட்டாங்க பா...
''இதுல கடைகளை குத்தகைக்கு எடுத்தவர், கவுன்சிலரின் பினாமிதான்... குத்தகைக்கு எடுத்த கட்டடத்தை உள்வாடகைக்கு விட்டது உட்பட பல்வேறு விதிமீறல்கள்ல ஈடுபட்டாரு பா...
''இதனால, 2021ல் இவரது குத்தகையை அதிகாரிகள் ரத்து செஞ்சு உத்தரவு போட்டாங்க... ஆனா, அந்த உத்தரவு நாலு வருஷமா அமலுக்கு வரவே இல்ல... 'உள்ளூர் அமைச்சர் சாமிநாதனுக்கு கவுன்சிலர் நெருக்கமா இருக்கிறதுதான் இதுக்கு காரணம்'னு நகராட்சி வட்டாரங்கள்ல முணுமுணுக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கமலக்கண்ணன் இந்த பேப்பரை அங்க வையும்...'' என, நண்பரை ஏவிய குப்பண்ணா, ''75 கோடி ரூபாய் இடத்தை ஆக்கிரமிச்சுட்டு இருக்கா ஓய்...'' என்றார்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டத்தின், பிரபல முருகன் கோவில் ஊர்ல, அரசுக்கு சொந்தமா, 82,150 சதுர மீட்டர் பாறை புறம்போக்கு நிலம் இருந்துது... 2020ல் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அந்த கட்சியின் முக்கியப் புள்ளிகள், வருவாய்த் துறையினர் உதவியுடன், இந்த நிலத்தை கிராம நத்தமா வகைப்படுத்தி, 'பிளாட்' போட்டு 175 பேரிடம் ஒரு மனையின் விலை, 3 லட்சம் ரூபாய்னு வித்துட்டா ஓய்...
''அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலருக்கு பல லட்சங்களை கொடுத்து, இலவச பட்டாவும் வாங்கிக் குடுத்துட்டா... தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2022ல் இதை கண்டுபிடிச்சு, 175 பேரின் இலவச பட்டாக்களை ரத்து பண்ணிட்டா ஓய்...
''அந்த இடத்துல, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்க முடிவு பண்ணா... இதுக்கு, அ.தி.மு.க.,வினர் கோர்ட்ல தற்காலிக தடை வாங்கியிருக்கா ஓய்...
''இப்ப, அந்த இடத்துல வீடுகள், கடைகள் கட்டி பலர் ஆக்கிரமிச்சுண்டு இருக்கா... இந்த நிலத்தின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு, 75 கோடி ரூபாய்... இதைத் தடுக்க வேண்டிய வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டும் காணாம இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
'இந்த பாடலை விரும்பிக் கேட்ட நேயர்கள் தீபா, மலர்விழி...' என, டீ கடை ரேடியோவில் அறிவிப்பு வெளியாக, பெரியவர்கள் கிளம்பினர்.