/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பயிர் கடனை புதுப்பிக்க ரூ.5,000 கேட்கும் அதிகாரிகள்!
/
பயிர் கடனை புதுப்பிக்க ரூ.5,000 கேட்கும் அதிகாரிகள்!
பயிர் கடனை புதுப்பிக்க ரூ.5,000 கேட்கும் அதிகாரிகள்!
பயிர் கடனை புதுப்பிக்க ரூ.5,000 கேட்கும் அதிகாரிகள்!
PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''புது கூட்டணிக்கு பேச்சு நடத்தியது தெரிஞ்சதும் தான், அவசர அவசரமா கூட்டணியை உறுதி பண்ணியிருக்காங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை சொல்றீங்களா பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... அ.தி.மு.க., தலைமையில், நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர், வி.சி., ஆகிய நான்கு கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்க, த.வெ.க., மாநில நிர்வாகி ஒருத்தர் ஏற்பாடு பண்ணியிருக்காருங்க... இதுக்காக, அவர் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் சூழல்ல இருந்துச்சு...
''லண்டன்ல கூட்டணி பேச்சுக்கு இறுதி வடிவம் கொடுக்கவும் திட்டமிட்டிருந்தாங்க... இது, மத்திய உளவுத்துறை மூலமா, உள்துறை அமைச்சர் அமித் ஷா காதுக்கும் போயிருக்குதுங்க...
''அதனால, தேர்தல் நேரத்துல கூட்டணி பற்றி முடிவு எடுத்துக்கலாம்னு இருந்தா சரியா வராதுன்னு, அவசர அவசரமா அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை அமித் ஷாவே நேர்ல வந்து உறுதி பண்ணிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''பொது தேர்வு மையத்தின் கண்காணிப்பு பணி, விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணி ஒதுக்கீடு சம்பந்தமா, கோவை மாவட்ட ஆசிரியர் சங்கங்கள் வச்ச நியாயமான கோரிக்கைகள் எதையும், மாவட்ட கல்வி அதிகாரி கண்டுக்கல...
''விடைத்தாள் திருத்துறது சம்பந்தமா அரசு தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவையும் மீறி, ஆசிரியர்களை கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களுக்கு மாற்றி, மாற்றி பந்தாடி சிரமப்படுத்துறாரு பா...
''மீடியாகாரங்க ஏதாவது தகவல் கேட்க, அதிகாரியை கூப்பிட்டாலும், போனையே எடுக்கிறது இல்ல... சரின்னு நேர்ல போனாலும், ஆபீசுக்குள்ள இருந்துட்டே, 'வெளியில போயிட்டார்'னு ஊழியர்களை விட்டு சொல்ல வைக்கிறாரு... 'ரெண்டு வருஷமா இவர்கிட்ட மாட்டிட்டு படாதபாடு படுறோம்'னு ஆசிரியர்கள் எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
டீ கடை ரேடியோவில் ஒலித்த பாலமுரளி கிருஷ்ணாவின், 'ஒரு நாள் போதுமா... இன்றொரு நாள் போதுமா...' என்ற பாடலை சில நிமிடங்கள் கண் மூடி ரசித்த குப்பண்ணா, ''கடனை புதுப்பிக்க கட்டிங் கேக்கறா ஓய்...'' என்றார்.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி பகுதியில், ஒன்பது கூட்டுறவு கடன் சங்கங்கள் இருக்கு... இந்த சங்கங்கள்ல, 1,500 முதல், 3,000 வரை உறுப்பினர்கள் இருக்கா ஓய்...
''கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை வருஷத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கணும்... இதுக்கு, அவங்க நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன், வி.ஏ.ஓ., சான்றிதழையும் இணைச்சு விண்ணப்பிக்கணும் ஓய்...
''இந்த கடனை புதுப்பிக்க, ஒரு விவசாயிக்கு தலா 5,000 ரூபாய் வரை, 'கட்டிங்' வசூலிக்கறா... இதுல, வி.ஏ.ஓ.,வுக்கு, 1,000 ரூபாய் போக, மீத தொகையை புரோக்கர்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பிரிச்சுக்கறா ஓய்...
''ஒவ்வொரு கூட்டுறவு கடன் சங்க ஏரியாவுக்கும் ஒரு புரோக்கர் இருக்காரு... இவர் வழியா போனா தான், கடனை புதுப்பிக்க முடியும்... நேரடியா போனா காரியம் நடக்காது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.