'கட்டிங்' வசூலுக்கு புது வியாக்கியானம் தரும் அதிகாரிகள்!
'கட்டிங்' வசூலுக்கு புது வியாக்கியானம் தரும் அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜூலை 18, 2026 12:57 AM

“வெளிநாடு போன ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வந்துடுச்சு பா...” என்ற பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார் அன்வர்பாய்.
“யாரு வே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“த.வெ.க., அரசின் அமைச்சர்கள் ரெண்டு பேர், அரசு முறை பயணமா சமீபத்துல வெளிநாடு போயிட்டு வந்தாங்களே... அவங்களுடன், ரெண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் போயிருந்தாங்க பா...
“அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு போறதா இருந்தா, மத்திய அரசின் உள்துறை மற்றும் வெளியுறவுத் துறையிடம் அனுமதி வாங்கணும்... தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைச்சு, மத்திய அரசு வழங்கும், 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்'டை பயன்படுத்தி தான் வெளிநாடுகளுக்கு போகணும் பா...
“ஆனா, ரெண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் மத்திய அரசிடம் எந்த அனுமதியும் வாங்காம, வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்துட்டாங்க... இப்ப, அந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்குது பா...” என்றார் அன்வர்பாய்.
“முறைகேடு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்னு கேக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்ல இருந்த ஒரு ஊழியர், 2019ல கோவிலுக்கு வாங்கிய மளிகை பொருட்கள்ல முறைகேடு பண்ணிட்டதாகவும், கொரோனா காலத்துல பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கியதுல பொய் கணக்கு காட்டியதாகவும், தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கா ஓய்...
“அது மட்டுமில்லாம, கோவில்ல திருவிழா காலங்கள்ல போடப்படும் பந்தல், வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்களுக்கு வழங்கும் இலவச லட்டு பிரசாதத்துல எல்லாம் மோசடி பண்ணியிருக்கார்... இவரது முறைகேடுகளுக்கும், திருவல்லிக்கேணி தி.மு.க., முக்கிய புள்ளிக்கும் தொடர்பு உண்டாம் ஓய்...
“இதனாலயே, ஊழியருக்கு அடுத்தடுத்து இரண்டு பதவி உயர்வு குடுத்து அதிகாரியாக்கிட்டா... 'இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்'னு, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், அறநிலையத் துறை துணை கமிஷனருக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“ராஜசேகர், காமராஜ் கொஞ்சம் இருங்க... சேர்ந்து போகலாம்...” என நண்பர்களை நிறுத்திய அந்தோணிசாமியே, “அதிகாரிகளின் நுாதன வியாக்கியானத்தை கேளுங்க...” என்றபடியே தொடர்ந்தார்...
“அரசு துறைகள்ல லஞ்சத்தை ஒழிக்கணும்னு, முதல்வர் விஜய் உத்தரவு போட்டிருக்காரே... இதன்படி, தி.மு.க., ஆட்சியின் கடைசி காலத்துல விடப்பட்ட பல, 'டெண்டர்'களை ரத்து பண்ணியிருக்காங்க...
“அதோட, பொதுப்பணி உட்பட பல துறைகள்ல , கடந்த ஆட்சியில் முடிஞ்ச பணிகளை எல்லாம் ஆய்வு பண்ணிட்டு, அப்புறமா, 'பில்' தொகையை தரலாம்னு நிறுத்தி வச்சிருக்காங்க... ஆனாலும், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்ல கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட இளம் அதிகாரிகள், இன்னும் அதே இடங்கள்ல நீடிக்கிறாங்க...
“இவங்க, கடந்த ஆட்சியில் முடிச்ச பணிகளுக்கு, 'கட்டிங்' வாங்கிட்டு, பில் தொகையை வழங்கிட்டு இருக்காங்க... இது சம்பந்தமா அவங்களிடம் கேட்டா, 'த.வெ.க., ஆட்சியில் இனிமே செய்யப் போற பணிகளுக்கு கமிஷன் வாங்க மாட்டோம்... இது, கடந்த ஆட்சியில் செஞ்ச பணிகள் என்பதால, கமிஷன் வாங்குறோம்'னு வில்லங்கமா விளக்கம் தர்றாங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
