/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கழிவு இரும்பிலும் லட்சங்களை பார்த்த அதிகாரிகள்!
/
கழிவு இரும்பிலும் லட்சங்களை பார்த்த அதிகாரிகள்!
PUBLISHED ON : அக் 05, 2024 12:00 AM

''கூட இருந்தே குழிபறிக்கிறவருக்கு வாய்ப்புகிடைக்காதுங்க...'' என,பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''இது, பக்கத்து ஸ்டேட் விவகாரம்... கர்நாடகாவுல நடக்கிற காங்., ஆட்சியில், முதல்வரா சித்தராமையா இருக்காரே... இவரது மனைவிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கிய விவகாரத்துல, இவர் மேல லோக் ஆயுக்தா, அமலாக்க துறையினர் வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க...
''இதனால, சித்தராமையா ராஜினாமா செய்யணும்னு, அங்க பிரதான எதிர்க்கட்சியா இருக்கிற பா.ஜ.,வினர் போராடிட்டு இருக்காங்க... இதுல வேடிக்கை என்னன்னா, இதன் பின்னணியில இருக்கிறதேஅந்த மாநில மூத்த அமைச்சர் ஒருத்தர் தானாம்...
''அவருக்கும் முதல்வர்பதவி மேல ஒரு கண்ணு...இதை கேள்விப்பட்ட டில்லி மேலிடம், அந்த அமைச்சர் மேல ரொம்பவே கோபத்துல இருக்குதுங்க...
''இதனால, சித்தராமையாபதவி விலகினாலும், அந்த அமைச்சருக்கு வாய்ப்பு தராம, இன்னொரு மூத்த அமைச்சரான தினேஷ் குண்டுராவுக்கு தான் தருவாங்களாம்... இவரது அப்பா குண்டுராவும், ஏற்கனவே அந்த மாநில முதல்வரா இருந்திருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஏரியா தாண்டி வந்து திருடுறதான்னு கொந்தளிச்சிட்டாருல்லா...''என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம்,உடுமலை பக்கம் தும்பலப்பட்டி கரடு பகுதியில், எந்த அனுமதியும் இல்லாம சட்டவிரோதமா, 'கிராவல்'மண் திருடுதாங்க... ஆளுங்கட்சியை சேர்ந்த,எலையமுத்துார் ஊராட்சியின் முக்கிய புள்ளி தான் இதுல கோலோச்சுதாரு வே...
''ஆளுங்கட்சியின் மாணவரணி பிரமுகர் ஒருத்தரும், அங்கன மண்அள்ள ஜே.சி.பி., எடுத்துட்டு போயிருக்காரு... ஊராட்சி புள்ளியோ, 'என் ஏரியாவுல மண் திருடுறஉரிமை எனக்கு மட்டும்தான்'னு ஆவேசமாகி, அமராவதி நகர் போலீஸ்ல, 'போட்டு' குடுத்துட்டாரு வே...
''போலீசாரும், மாணவர் அணி பிரமுகரின்ஜே.சி.பி., மற்றும் லாரியைபறிமுதல் பண்ணிட்டாவ...அதே நேரம், ஊராட்சி புள்ளியின் ஜே.சி.பி., மட்டும் தொடர்ந்து மண் திருடி, கரடையே கரைச்சிட்டு இருக்கு வே...''என்றார், அண்ணாச்சி.
''மாரிமுத்து தள்ளி உட்காரும்...'' என்ற குப்பண்ணா, ''கழிவு பொருட்கள்லயும் காசு பார்த்துட்டா ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் இருக்கோல்லியோ... இங்க, ஆறு மாசத்துக்கு ஒரு முறை, பழைய இரும்பு உட்பட கழிவு பொருட்களை ஏலம் விடுவா ஓய்...
''சமீபத்துல, 150 டன்வரை, 'மைல்ட் ஸ்டீல்' கழிவுகளை ஏலம் விட்டா...இதை, எடை போட்டு லாரிகள்ல ஏத்தினா ஓய்...
''அப்ப, 25 டன் பிடிக்கும் ஒரு லாரி முழுக்க பொருட்களைஏத்தியும், எடை மிஷின்ல,18 டன் தான் காட்டுச்சு...சந்தேகமான அதிகாரி ஒருத்தர், வெளியில இருக்கற மிஷினில் எடை போட்டப்ப, 25 டன் காட்டியிருக்கு ஓய்...
''இப்படி ஒரு லாரிக்கு, 7 டன் வரை கம்மியா காட்டியிருக்கா...1 கிலோ மைல்ட் ஸ்டீல் கழிவு, கிட்டத்தட்ட, 40 ரூபாய் வரை போகுமாம் ஓய்...
''அந்த வகையில, ஒரு லாரி லோடுக்கு மட்டும், 2.80 லட்சம் ரூபாய் அடிச்சிருக்கா... மொத்தமா, 12 லட்சம் ரூபாயை கழிவு பொருட்கள்ல பார்த்துட்டா... இந்த மாதிரி நிறைய தில்லுமுல்லுகள் அங்க நடக்கறது ஓய்...'' என முடித்தார்,குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.