உயர் பதவிக்கு குறுக்கு வழியில் காய் நகர்த்தும் அதிகாரிகள்!
உயர் பதவிக்கு குறுக்கு வழியில் காய் நகர்த்தும் அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜூலை 11, 2026 12:24 AM

நா ட்டு சர்க்கரை டீயை பருகியபடியே, “மலை போல மனுக்கள் குவிஞ்சிட்டுல்லா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த துறையிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“த.வெ.க., அரசுல, காங்கிரஸ் சார்பில் ரெண்டு அமைச்சர்கள் இருக்காங்கல்லா... 'ரெண்டு பேரும், கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வாரம் ஒரு நாள் வரணும்'னு மேலிடம் உத்தரவு போட்டிருக்கு வே...
“அதோட, 'கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை பார்த்து குறைகள் கேட்டு, கட்சி வளர்ச்சிக்கு உதவணும்'னு தலைமை சொல்லியிருக்கு... இதன்படி, அமைச்சர்களும் வாரம் ஒரு நாள் சத்தியமூர்த்தி பவன் வர்றாவ வே...
“இதுல, உயர்கல்வித் துறை அமைச்சரா இருக்கிற விஸ்வநாதனிடம், கல்லுாரிகள்ல மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு கேட்டு நிறைய பேர் மனுக்கள் குடுக்காவ... இதுல பல மனுக்களுக்கு உடனுக்குடன் போன்ல பேசி, 'அட்மிஷன்' வாங்கி குடுத்துடுதாரு...
“வேற கோரிக்கை சம்பந்தமா மனுக்கள் தர்ற தொண்டர்களை தனித்தனியே கூப்பிட்டு குறைகளை கேட்டு, 'சரி பண்ணி தர்றேன்'னு வாக்குறுதி குடுத்து அனுப்புதாரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“கட்டிங்கை கறாரா கேட்டு வாங்குறாரு பா...” என்றார் அன்வர்பாய்.
“யார் ஓய் அது...” என கேட்டார் குப்பண்ணா.
“காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி மின் வாரிய அலுவலகத்துக்கு, சமீபத்துல ஒரு அதிகாரி இடமாறுதல்ல வந்தாரு... மின் வாரிய ஊழியர்களுக்கு தினசரி பணி ஒதுக்கீடு, புதிய மின் வழித்தடம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் பண்றது, மின் மீட்டர் அமைக்க அனுமதி வழங்குறது உள்ளிட்ட வேலைகளை செய்றாரு பா....
“ஆனா, எல்லா வேலைகளுக்கும் கறாரா, 'கட்டிங்' கேட்கிறாரு... பணம் வராட்டி, வேலைகளை துவங்காம இழுத்தடிக்கிறாரு பா...
“அதையும் மீறி, 'பணிகளை முடிங்க'ன்னு உயர் அதிகாரிகள் நெருக்கடி தந்தா, மின் கம்பத்தை மட்டும் நட்டுட்டு, கம்பி கட்டும் வேலைகளை பாக்கி வச்சிடுறாரு... அதே நேரம், கட்டிங் வந்துட்டா, மின்னல் வேகத்துல பணிகளை முடிச்சு குடுத்துடுறாரு பா...” என்றார் அன்வர்பாய்.
“சார்லஸ், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...” என்ற குப்பண்ணாவே, “தலைவர் பதவிக்கு கடும் போட்டி நடக்கறது ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“வனத்துறையில், 'சீனியாரிட்டி' அடிப்படையில் உயர் பதவிகள்ல ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை நியமிப்பா... சீனியாரிட்டியில் முதல் இடத்துல இருக்கறவர், வனத்துறை தலைவர் பதவிக்கு வரலாம் ஓய்...
“சில சமயங்கள்ல சீனியாரிட்டி இல்லாதவா கூட, ஆளுங்கட்சி மேலிடத்தை பார்த்து இந்த பதவியை பிடிச்சிடுவா... இப்ப, வனத்துறை தலைவர் பதவியில் இருக்கற ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி சீக்கிரமே, 'ரிட்டயர்' ஆகப் போறார் ஓய்...
“சீனியாரிட்டிப்படி உதயன் என்ற அதிகாரி தான், அடுத்த தலைவர் பதவிக்கு வரணும்... ஆனா இவரை, 'ஓவர்டேக்' பண்ணி அந்த பதவியை பிடிக்க சில அதிகாரிகள் காய் நகர்த்திண்டு இருக்கா ஓய்...
“அதே நேரம், 'இப்படி குறுக்கு வழியில் பதவிக்கு வர துடிக்கறவா நேர்மையா செயல்படுவாளா... அவாளால அரசுக்கு தான் கெட்ட பெயர் வரும்'னு, துறையில் இருக்கற நேர்மையான அதிகாரிகள் புலம்பறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.
