/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சவுக்கு சங்கர் தாயாரிடம் மன்னிப்பு முன்ஜாமின் கேட்டவர்களுக்கு வாய்ப்பு
/
சவுக்கு சங்கர் தாயாரிடம் மன்னிப்பு முன்ஜாமின் கேட்டவர்களுக்கு வாய்ப்பு
சவுக்கு சங்கர் தாயாரிடம் மன்னிப்பு முன்ஜாமின் கேட்டவர்களுக்கு வாய்ப்பு
சவுக்கு சங்கர் தாயாரிடம் மன்னிப்பு முன்ஜாமின் கேட்டவர்களுக்கு வாய்ப்பு
PUBLISHED ON : ஜூலை 11, 2025 12:00 AM
சென்னை:'சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை கொட்டிய வழக்கில், முன்ஜாமின் கோரி மனு செய்தவர்கள் விருப்பப்பட்டால், அவரது தாயாரை சந்தித்து, மன்னிப்பு கேட்கலாம்' என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் தெரிவித்தார்.
துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதன் பின்னணியில், காங்கிரஸ் மாநில தலைவர் உள்ளார் என, 'யுடியூபர்' சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, கடந்த மார்ச் 24ல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, சவுக்கு சங்கரின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த கும்பல், வீட்டில் இருந்த சவுக்கு சங்கரின் தாயார் கமலாவை மிரட்டியதுடன், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.
வீட்டுக்குள் சாக்கடை, மனிதக்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றனர். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில், தங்களுக்கு முன்ஜாமின் கோரி, சீனிவாசன், ஜெயக்குமார், மணிமாறன், திருமாறன், பிரியதர்ஷினி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் புலன் விசாரணையில் உள்ளது.
'முக்கிய குற்றவாளிகள் பலர் தலைமறைவாக உள்ளதால், மனுதாரர்களுக்கு முன்ஜாமின் அளிக்கக்கூடாது' என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர்கள் தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து, தேடிச்சென்ற நபர் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது தாயாரை மிரட்டி, பொருட்களை சேதப்படுத்தி, வீட்டுக்குள் சாக்கடை, மனிதக்கழிவுகளை வீசிச் செல்வது அநாகரிகத்தின் உச்சம். இந்த சம்பவத்தால், வீட்டில் தனியாக இருந்த பெண், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்.
'மனுதாரர்கள் விருப்பப்பட்டால், அவரிடம் சென்று மன்னிப்பு கேட்கலாம். உங்களின் மன்னிப்பை அவர் ஏற்றால், அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்' எனக் கூறி, விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.