வெளியூரில் ஓடும் லாரிகளுக்கும் மாமூல் வாங்கும் போலீஸ்!
வெளியூரில் ஓடும் லாரிகளுக்கும் மாமூல் வாங்கும் போலீஸ்!
PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

''ஜி. கே.மணியிடம் சண்டை போட்டிருக்காங்க பா...'' என்ற பரபரப்பான தகவலுடன், பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சசிகலா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, பல தொகுதிகள்ல வேட்பாளர்களை நிறுத்தியிருக்காரே... நாலு நாளைக்கு முன்னாடி, சேலம் பிரசார கூட்டத்துல பேசிய ராமதாஸ் திடீர்னு மயங்கி விழுந்துட்டதால, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில சேர்த்தாங்க பா...
''ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, அப்பாவை கூட இருந்து பார்த்துக்கிட்டாங்க... ராமதாசை பார்க்க, கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி வந்திருக்காரு பா...
''அவர்கிட்ட, 'அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு தெரிஞ்சும், அவரை ஏன் பிரசாரத்துக்கு கூப்பிட்டீங்க... உங்க மகனை, புத்திசாலித்தனமா காங்கிரசுக்கு அனுப்பி, பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வச்சுட்டீங்க... உங்க சுயநலத்துக்காக, எங்க குடும்பத்தை பிரிச்சுட்டீங்களே... இது நியாயமா'ன்னு கேள்வி மேல கேள்வி கேட்க, எதுவும் சொல்ல முடியாம, ஜி.கே.மணி திரும்பி போயிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''கட்டிங் வாங்கிட்டு, வழக்கு போடாம விட்டுட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''செங்கல்பட்டு மாவட்டம், நாவலுார்ல இருக்கற, 'எலைட் டாஸ்மாக்' மதுபான கடையில் நாலு ஊழியர்கள், 1.41 கோடி ரூபாயை கையாடல் பண்ணிட்டாங்க... இந்த சம்பவம் போன வருஷம் நடந்து, நாலு பேரையும், 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க.. .
''ஆனா, இந்த சம்பவத்துல, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யல... ஏன்னா, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரியின் மனைவி, மாவட்ட நிர்வாகத்துல அதிகாரியா இருக்காங்க... அவங்களிடம், டாஸ்மாக், 'மாஜி' மண்டல அதிகாரி ஒருத்தர், சில லட்சங்களை குடுத்து வழக்கு பதிவு செய்யாம, 'ஆப்' பண்ணிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வாரும் பன்னீர்செல்வம்... உம்ம தங்கை மாலதியும், அவரது வீட்டுக்காரர் கலைச் செல்வனும் ஊருக்கு போயிட்டாளா...'' என விசாரித்த குப்பண்ணாவே, ''வெளியூர்ல ஓடற லாரிக்கு, மாமூல் வாங்கறார் ஓய்...'' என்றார்.
''யாருவே அந்த கில்லாடி...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''பெரம்பலுார் போக்குவரத்து போலீஸ்ல ஒரு அதிகாரி இருக்கார்... இவரது வாகன ஓட்டுநரும் போலீஸ்காரர் தான்... இவர், பெரம்பலுார்ல ஓடற, கிராவல் மண் லாரிகளின் உரிமையாளர்களிடம் மாசம், 2,500 ரூபாய் மாமூல் வாங்கறார் ஓய்...
''மாமூல் தர மறுத்தா, அவா மீது வழக்கு போடும்படி, சக போலீசாருக்கு நெருக்கடி தரார்... பெரம்பலுார் உரிமையாளர்களுக்கு சொந்தமான லாரிகள், வெளிமாவட்டங்கள்ல ஓடினாலும், மாசம், 2,500 ரூபாய் மாமூல் வெட்டணும் ஓய்...
''இவர் வாங்கற மாமூல்ல, தான் கார் ஓட்டுற அதிகாரி மட்டுமல்லாம, அவருக்கு மேல இருக்கற அதிகாரிகளுக்கும் முறையா பங்கு குடுத்துடறார்... இதனால, இவர் மீது எத்தனை புகார்கள் போனாலும், யாரும் கண்டுக்க மாட்டேங்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''கிள்ளிவளவன், பிரவீன் இங்கன உட்காருங்க... நாங்க கிளம்புதோம்...'' என்றபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
