/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கட்டப்பஞ்சாயத்தில் கலக்கும் போலீஸ் அதிகாரி!
/
கட்டப்பஞ்சாயத்தில் கலக்கும் போலீஸ் அதிகாரி!
PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

''சை க்கோன்னு பட்டப்பெயர் வச்சிருக்காங்க பா...'' என, ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு ஸ்டேஷன்ல அதிகாரியா இருக்கிறவர் மேல, ஸ்டேஷன் போலீசார் ரொம்ப அதிருப்தியில் இருக்காங்க... ஏன்னா, போலீசாருக்கு டூட்டி போடுறதுல இருந்து, லீவு தர்றது வரைக்கும், எல்லா விஷயத்துலயும் ரொம்ப, 'டார்ச்சர்' பண்றாரு பா...
''அவசர லீவு கேட்டாலும் தர்றதில்ல... அதையும் மீறி போலீசார் லீவு கேட்டா, 'ஆப்சென்ட் போட்டுருவேன்'னு மிரட்டுறாரு... இவரோட செயல்பாடுகள் சரியில்லாம உயரதிகாரிகள் பலமுறை கண்டிச்சும், திருந்தல பா...
''தன்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாதுன்னும் மிரட்டுறாரு... இதனால தான், சக போலீசார், இவருக்கு, 'சைக்கோ'ன்னு பட்டப்பெயர் வைச்சு தங்களுக்குள்ள பேசிக்கிறாங்க...
''அதோட, வேற ஸ்டேஷன்களுக்கு டிரான்ஸ்பர் கேட்டு, கமிஷனர்கிட்ட மனுவும் குடுத்திருக்காங்க பா...'' என்ற அன்வர்பாய், 'வாட்ஸாப்'பில் நண்பர் ரஞ்சித்திடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்க்க துவங்கினார்.
''மொத்தம், 1 கோடி தேறாதாம்... 25 லட்சம் தான் தேறும்னு சொல்றாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தமிழக காங்கிரஸ் சார்புல, 'ஓட்டு திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை' கடந்த செப்., 15ல ஆரம்பிச்சு, வர்ற, 15ல முடிக்க இருக்காங்க... 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க இலக்கு நிர்ணயம் பண்ணியிருந்தாங்க...
''ஆனாலும், தற்போதைய நிலவரப்படி, 234 சட்டசபை தொகுதி வாரியா கணக்கெடுப்பு நடத்தியதுல, 15 லட்சம் பேர்கிட்ட தான் கையெழுத்து வாங்கியிருக்காங்க... 'இன்னும் அஞ்சு நாள்ல, மொத்தமாவே, 25 லட்சம் கையெழுத்துகள் தேறினாலே பெரிய விஷயம்'னு, மாநில நிர்வாகிகள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கட்டப்பஞ்சாயத்து செஞ்சு பாக்கெட்டை நிரப்பிக்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாரை சொல்லுதீரு...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருச்சி மாவட்டம், முசிறி பக்கத்துல இருக்கிற துலையாநத்தம் பகுதியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியா பத்திரப்பதிவு செஞ்சு, துறையூரை சேர்ந்த அரிசி மில் உரிமையாளர்கள் ரெண்டு பேர் வாங்கியிருக்கா... இவா மேல, சம்பந்தப்பட்ட இடத்தோட உரிமையாளர்கள் புகார் குடுத்திருக்கா ஓய்...
''புகாரை விசாரிச்ச போலீஸ் அதிகாரி ஒருத்தர், மோசடி நபர்களுக்கு ஆதரவா கட்டப்பஞ்சாயத்து செஞ்சிருக்கார்... இதுக்கு லட்சக்கணக்குல கமிஷனும் வாங்கி, புகாரையும் வாபஸ் வாங்க வச்சிருக்கார் ஓய்...
''அரிசி ஆலையில கட்டப்பஞ்சாயத்து நடந்த வீடியோ, இப்ப சமூக வலைதளங்கள்ல பரவிண்டு இருக்கு... இந்த போலீஸ் அதிகாரி ஏற்கனவே, துறையூர்ல வேலை செஞ்சப்பவும் வசூல் மன்னனா தான் வலம் வந்தார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
உடனே அந்தோணிசாமி, ''ராஜேஷ்குமார் நாவல் ஒண்ணு வேணும்னு ரவிகிட்டயும், ராஜ்மோகன்கிட்டயும் கேட்டிருந்தேன்... என்னாச்சுன்னு கேக்கணும்...'' என்றபடியே, மொபைல் போனை எடுக்க, மற்றவர்கள் கிளம்பினர்.