தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ குற்றங்களை மறைக்க உத்தரவிட்டுள்ள போலீஸ் அதிகாரி!

 குற்றங்களை மறைக்க உத்தரவிட்டுள்ள போலீஸ் அதிகாரி!

 குற்றங்களை மறைக்க உத்தரவிட்டுள்ள போலீஸ் அதிகாரி!

1


PUBLISHED ON : செப் 03, 2026 01:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2026 01:02 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெது வடையை கடித்தபடியே, “மண் கடத்தல் அமோகமா நடக்குல்லா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“மலை மாவட்டமான நீலகிரியில், அரசு மற்றும் தனியார் இடங்கள்ல மண்ணை வெட்டி எடுக்கணும்னா, மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி வாங்கணும்... ஆனா, அனுமதியை லேசுல தர மாட்டாவ வே...

“அதேநேரம், மண்ணை வெட்டி எடுத்து விற்பனை பண்றதையே தொழிலா வச்சிருக்கிற சிலர், அரசு அதிகாரிகளை, 'கவனிச்சு' ராத்திரி நேரங்கள்ல, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் மண்ணை வெட்டி கடத்துதாவ... தி.மு.க., ஆட்சியில நடந்த இந்த விதிமீறல், ஆட்சி மாறியும் முடிவுக்கு வரல வே...

“இது சம்பந்தமா, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புகார் குடுத்தா, அதிகாரிகள் பெயருக்கு ஆய்வு நடத்திட்டு போயிடுதாவ... இப்ப, இந்த மண் கடத்தல் சம்பந்தமா சிலர், 'போட்டோ' ஆதாரங்களுடன், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியிருக்காவ... இதனால, இதுல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலக்கத்துல இருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“கலெக்டர் மீது அதிருப்தியில இருக்கா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் கிராமத்தில் இருக்கும் முத்துக்கொளக்கியம்மன் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வர்றது... இந்த கோவிலுக்கு புதுசா தேர் செய்திருக்கா ஓய்...

“இந்த தேர், அதே கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் வரணும்னு கேட்டு, வி.சி.க., சார்பில் சென்னை ஐகோர்ட்ல வழக்கு போட்டா... ஐகோர்ட்டும், அந்த பகுதிக்கு தேர் போகணும்னு உத்தரவு போட்டு, 10 மாசம் ஆயிடுத்து ஓய்...

“ஆனா, இதுவரை தேர் திருவிழாவை நடத்தாம, மாவட்ட நிர்வாகம் சாக்கு போக்கு சொல்றது... 'ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் எங்க கோரிக்கையை, கலெக்டர் சினேகா உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் கண்டுக்கல'ன்னு, வி.சி.,க்கள் புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“செய்திகள் வராம பார்த்துக்கிடுங்கன்னு சொல்றாரு பா...” என்றார் அன்வர்பாய்.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருத்தர், சமீபத்துல, முதல்வர் விஜயிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கினாரு... அதுல இருந்து, அதிகாரி ரொம்பவே உற்சாகமா இருக்காரு பா...

“இதனால, 'மாவட்டத்துல நடக்கிற சைபர் மோசடிகள், திருட்டுகள், பாலியல் குற்றங்கள், 'போக்சோ' வழக்கு விபரங்கள் எல்லாம் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் நிருபர்களுக்கு தெரியாம பார்த்துக்கணும்... வழக்கின் முதல் தகவல் அறிக்கை விபரங்களை யாருக்கும் அனுப்ப வேண்டாம்'னு, போலீசாருக்கு வாய்மொழியா உத்தரவு போட்டிருக்காரு பா...

“போலீசாரின் வீட்டு நிகழ்ச்சிகள்ல தவறாம கலந்துக்கிட்டு, வாழ்த்து சொல்ற அதிகாரியை வரவேற்று பெரிய அளவுல, 'பிளக்ஸ் பேனர்'கள் வைக்கிறதும் அதிகமாகிடுச்சு... மாவட்ட பொறுப்பு அமைச்சர் மதன்ராஜ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் ராஜிவ் ஆகியோருடனும் அதிகாரி நெருக்கமாகிட்டாரு பா...

“இதனால, 'இந்த ஆட்சி முடியும் வரை, உங்களை இந்த மாவட்டத்துல இருந்து மாத்தவே முடியாது'ன்னு அதிகாரிக்கு, 'ஜால்ரா' தட்டி தனிப்பிரிவு போலீசார் மாமூல் மழையில் குளிக்கிறாங்க... புகழ் போதையில் மிதக்கிற அதிகாரியும், அவங்களை கண்டுக்கிறது இல்ல பா...” என முடித்தார் அன்வர்பாய்.

“சந்தீஷ், இங்கன உட்காரும்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us