/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
செம்மண் கடத்தலில் போலீசார் வசூல் வேட்டை!
/
செம்மண் கடத்தலில் போலீசார் வசூல் வேட்டை!
PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை ருசித்தபடியே, ''விண்ணப்பிச்சவங்களிடம் வசூல் நடத்துறாங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எதுக்கு, யாருவே விண்ணப்பிச்சிருக்கா...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழகம் முழுக்க, தனியார் சார்புல மினி பஸ்கள் இயக்குதாங்கல்லா... மினி பஸ்கள் இயக்குறதுக்கு, வருவாய்த் துறையிடமும் ஒப்புதல் வாங்கணும் பா...
''திருப்பூர் மாவட்டத்துல, இப்படி விண்ணப்பிச்சவங்களிடம் வி.ஏ.ஓ.,க்கள் துவங்கி ஆர்.ஐ., வரைக்கும் குறிப்பிட்ட தொகையை, 'கட்டிங்'கா வசூலிக்கிறாங்க... ஏற்கனவே, 'பர்மிட்' வாங்குறதுக்கு கலெக்டர் ஆபீஸ், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நடையா நடந்த உரிமையாளர்கள், வருவாய்த் துறையினரின் வசூல் தொல்லையால கடும் மன உளைச்சல்ல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பாராட்டுக்கு ரெண்டு வருஷமா காத்துண்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னையில், 2023ல் நடந்த பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசார் சிறப்பா விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பிடிச்சு, கோர்ட்ல நிறுத்தி அதிகபட்ச சிறை தண்டனை வாங்கிக் குடுத்தா...
''இப்படி சிறப்பா பணியாற்றிய, பெண் காவலர் உட்பட 25க்கும் மேற்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழும், குடும்பத்துடன் கமிஷனருடன் சேர்ந்து விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செஞ்சா ஓய்...
''இதுக்காக, அப்ப கமிஷனரா இருந்த சங்கர் ஜிவால், 30 லட்சம் ரூபாய் வரை நிதியும் ஒதுக்கியிருந்தார்... விழாவுல கலந்துக்க, போலீசாரும் ஆர்வமா இருந்தா ஓய்...
''விழாவுக்கான அழைப்பிதழ் தயாரான நிலையில், கமிஷனரா இருந்த சங்கர் ஜிவால், 'புரமோஷன்'ல டி.ஜி.பி.,யாகி போயிட்டார்... அப்பறமா ரெண்டு வருஷம் ஆகியும், சாதனை போலீசாருக்கு பாராட்டு விழாவும், விருந்தும் ஏற்பாடு பண்ணவே இல்ல... இதை யாரிடம் போய் கேக்கறதுன்னு தெரியாம, அந்த போலீசார் எல்லாம் மனம் புழுங்கிண்டு இருக்கா ஓய்...'' என்றார்,குப்பண்ணா.
''நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேங்க...'' என, கடைசி மேட்டரைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''சொல்லும் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''சேலம் மாவட்டம், பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல, பக்கநாடு, ஆடையூர் கிராமங்கள் இருக்குங்க... இங்கேல்லாம், அரசு புறம்போக்கு நிலமும், தனியார் நிலங்களும் ஏராளமா இருக்குது...
''அவ்வளவும் செம்மண் பூமி... இடைப்பாடி, ஓமலுார் பகுதிகள்ல இருக்கிற செங்கல் சூளைகளுக்கு, இங்கேர்ந்து தான் செம்மண் கடத்தப்படுது...
''பூலாம்பட்டியைத் தாண்டி தான், செம்மண் கடத்தும் லாரி, மாட்டு வண்டிங்க நகரணும்... அப்பகுதி போலீஸ்காரங்க, சும்மா பூந்து விளையாடுறாங்க... பகல், ராத்திரின்னு பார்க்காம, வசூல் வேட்டை, 'துாள்' பறக்குது... வருவாய் துறைக்காரங்களுக்கு மேலே, இவங்களுக்கு தான் கொழிப்பு...'' எனக் கூறி, கிண்டலாகச் சிரித்தார் அந்தோணிசாமி.
நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, 'உஸ்...' எனக் கூறி விசனப்பட்டனர். ''என்ன செய்யிறது... கிளம்புவோம்...'' என,அந்தோணிசாமியே அனைவரையும் கிளப்பி நடையைக் கட்டினார்.

