/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
6 மாதமாக நிலுவை தொகைக்கு ஏங்கும் போலீசார்!
/
6 மாதமாக நிலுவை தொகைக்கு ஏங்கும் போலீசார்!
PUBLISHED ON : ஜன 02, 2024 12:00 AM

''பாக்ஸ் ஆபீஸ் கிங் பட்டத்தை வாங்கிட்டாரு வே...'' என்ற படியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த நடிகருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பாலிவுட்ல ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்ற நடிகர்களின் படங்கள், 500 கோடியை தாண்டி வசூல் பண்றதால, 'பாக்ஸ் ஆபீஸ் கிங்' பட்டத்துக்கு சொந்தக்காரங்களா இருக்காவ... நம்ம ஊர் கோலிவுட்ல, விஜய் நடிச்ச படங்கள் பெரும்பாலும், 200ல இருந்து, 300 கோடி ரூபாய் வரைக்கும் தான் வசூல் தந்துட்டு இருந்துச்சு வே...
''சமீபத்துல வெளியான அவரது, லியோ படம், 604 கோடி ரூபாய் வசூல் பண்ணிட்டாம்... அதனால, 'பாக்ஸ் ஆபீஸ் கிங்ல எங்க தளபதியும் சேர்ந்துட்டார்'னு, அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் மகிழ்ச்சியில கூத்தாடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''இதை காரணம் காட்டியே, அடுத்த படத்துக்கு சம்பளத்தை, 'கிடுகிடு'ன்னு ஏத்திடுவாரே...'' என்ற அந்தோணிசாமியே, ''விடுமுறை நாட்கள்ல, செமத்தியா வாரி குவிச்சிட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனச் சரகத்துல, வனவிலங்கு வேட்டையை தடுக்கிறது, காட்டு மரங்களை பாதுகாக்கிற பணிகளை வனத்துறை ஊழியர்கள் செய்யணும்... ஆனா, இதை ஓரங்கட்டி வச்சுட்டு, சுற்றுலா பயணியரிடம் வசூல் பண்றதுல தான், அவங்க குறியா இருக்காங்க...
''பெங்களூரு, மைசூரு, ஓசூர் பகுதியில் இருந்து, ஒகேனக்கல் வர்ற சுற்றுலா பயணியர், ஆலம்பாடி வழியா வர்றாங்க... இங்க, வனத்துறை செக்போஸ்ட்ல பணியில இருக்கிற வன காப்பாளர்கள், சுற்றுலா பயணியரின் வாகனங்களுக்கு, வன வரின்னு தனியா வசூல் பண்றாங்க...
''இந்த பணத்துக்கு ரசீது எதுவும் தர மாட்டேங்கிறாங்க... சமீபத்துல, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையில நிறைய பயணியர், ஒகேனக்கல் வந்தாங்க... இவங்களிடம், 50 முதல், 500 ரூபாய் வரை கட்டாய வசூல் செஞ்சிட்டாங்க...
''இதே மாதிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த பூமரத்து பள்ளத்துலயும், அந்த மாவட்ட வனத்துறையினரின் வசூல் வேட்டை நடக்கு... இதெல்லாம், துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிஞ்சும், கண்டும் காணாம இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தீபாவளிக்கு கிடைக்காதது, பொங்கலுக்காவது கிடைக்குமான்னு காத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஏதாவது போனஸ் விவகாரமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''இல்ல... சென்னை, ஆவடி போலீஸ் கமிஷனரகத்துல இருக்கற, 25 ஸ்டேஷன்கள்ல, 2,500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் டூட்டி பார்க்கறா... இவாளுக்கு, 'பீடிங், டி.ஏ., பியூயல், நைட் ரவுண்ட்ஸ்' அலவன்ஸ் தொகை, ஆறு மாசமா பெண்டிங்குல கிடக்கறது ஓய்...
''இதை குடுத்தா, ஒவ்வொருவருக்கும், 57,285 ரூபாய் கிடைக்குமாம்... இந்த தொகை, தீபாவளிக்கு கிடைக்கும்னு எதிர்பார்த்து ஏமாந்த போலீசார், பொங்கலுக்காவது கிடைக்குமான்னு ஏங்கிண்டு இருக்கா...
''மற்ற எங்கயும் பிரச்னை இல்ல... ஆவடி கமிஷனரகத்துல மட்டும் தான் இந்த பிரச்னையாம்... இதனால, சென்னை, தாம்பரம் கமிஷனரகத்துல இருந்து ஆவடிக்கு டிரான்ஸ்பர்னு சொன்னாலே, போலீசார், 'ஆளை விடுங்கோ'ன்னு ஓட்டம் பிடிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

