தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பறிமுதல் காரில் உல்லாசமாக வலம் வரும் போலீசார்!

 பறிமுதல் காரில் உல்லாசமாக வலம் வரும் போலீசார்!

 பறிமுதல் காரில் உல்லாசமாக வலம் வரும் போலீசார்!


PUBLISHED ON : மார் 22, 2026 02:40 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2026 02:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''வி திமீறல்களுக்கு எதிரான நடவடிக்கையில் வேகம் காட்டுறாரு பா...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், நகர ஊரமைப்பு துறை மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணைய விதிகளை மீறி நிறைய கட்டடங்கள், வணிக வளாகங்கள், சொகுசு விடுதிகளை கட்டியிருக்காங்க... இது சம்பந்தமா, கலெக்டர் அலுவலகத்துக்கு நிறைய புகார்கள் வரவே, வருவாய் துறை சார்பில், விதிமீறல் கட்டடங்களை கணக்கு எடுத்திருக்காங்க பா...

''இப்ப, 'இந்த இடங்கள்ல ஆய்வு நடத்தி, விதிகளை மீறிய கட்டடங்கள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ, அதை உடனே எடுங்க'ன்னு புதுசா வந்திருக்கிற கலெக்டர் பிரதாப் உத்தரவு போட்டிருக்காரு... இந்த பணிகள்ல அதிகாரிகள் தீவிரமா ஈடுபட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''இதுக்கு நேர்மாறான அதிகாரி ஒருத்தர் கதையை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை சைதாப்பேட்டையில், மாநில தகவல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் இருக்குல்லா... சமீபத்துல, இங்க புதுசா மூணு தகவல் கமிஷனர்களை நியமிச்சாவ வே...

''இதுல, அதுல்ய மிஸ்ரா மற்றும் அபய்குமார் சிங் ஆகிய ரெண்டு கமிஷனர்கள், மூணு வாரத்துக்கு முன்னாடி பொறுப்பேற்க அலுவலகத்துக்கு வந்தாங்க... ஆணையத்தின் செயலர் முருகன், அவங்களுக்கு கீழே வந்து வரவேற்பு குடுத்திருக்காரு வே...

''இந்த வரவேற்பை, ஏற்கனவே இருக்கிற கமிஷனர்கள்ல ஒருத்தர் கண்டுக்கல... அதே நேரம், புதுசா நியமிக்கப் பட்ட மூணாவது கமிஷனரான விஜய் ராம் வந்தப்ப, அந்த கமிஷனர் கீழே வந்து, அவருக்கு வரவேற்பு குடுத்திருக்காரு வே...

''ஆனா, செயலர் முருகன் அந்த நிகழ்ச்சிக்கு வரல... இதனால கடுப்பான கமிஷனர், 'என் நண்பரை வரவேற்க நீ வர மாட்டியா'ன்னு கேட்டு, முருகனிடம் சண்டை போட்டிருக்காரு வே... ரெண்டு பேரும் அடிச்சுக்கிற அளவுக்கு போயிட்டாவ...

''மறுநாளே தன் பவரை பயன்படுத்தி, முருகனை பொதுத் துறையின் அதி ரகசிய துறை என்ற, 'டம்மி' யான இடத்துக்கு துாக்கி அடிச்சிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''பிரியகுமார், இப்படி உட்காரும்...'' என்ற குப்பண்ணாவே, ''பறி முதல் செய்த கார்ல உலா வரா ஓய்...'' என்றார்.

''எந்த ஊர் போலீசாரை சொல்றீங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னை ஆவடி கமி ஷனரகத்தின் கீழ் வர்ற ஒரு ஸ்டேஷன் போலீசார், ஒரு மாசத்துக்கு முன்னாடி வாகன சோதனை நடத்தி, முறையான ஆவணங்கள் இல்லாத, சில்வர் கலர் டாடா இண்டிகா காரை பறிமுதல் செய்தா... ஆவணங்களை எடுத்து வந்து காட்டிட்டு, காரை எடுத்துண்டு போக சொல்லிட்டா ஓய்...

''கார்ல இருந்தவாளும், 'இதோ வர்றோம்'னு சொல்லிட்டு, 'எஸ்கேப்' ஆயிட்டா... 'அவா ஏன் வரல, எதுக்கு வரல'ன்னு விசாரிக்கணுமோல்லியோ... ஆனா, அதை பத்தி கவலைப்படாத போலீசார், அந்த காரை தங்களது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்திண்டு இருக்கா ஓய்...

''இதுல ஒரு போலீஸ் அதிகாரி, விழுப்புரத்துல தன் வீட்டு விசேஷத்துக்கு 10 நாளைக்கு முன்னாடி காரை எடுத்துண்டு போனவர், இப்ப வரை அவர் தான் வச்சுண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''தமிழரசு, இப்படி உட்காரும்... பொன்னேரி போயிட்டு எப்ப வந்தீர்...'' என, நண்பரிடம் அண்ணாச்சி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us