/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'ரெய்டில்' சிக்கிய அதிகாரிக்கு பதவி உயர்வு!
/
'ரெய்டில்' சிக்கிய அதிகாரிக்கு பதவி உயர்வு!
PUBLISHED ON : ஜன 17, 2024 12:00 AM

''இடமாறுதல் குடுத்தும், போவாம அடம் பிடிக்காரு வே...'' என, மெதுவடையை கடித்த படியே, மேட்டரை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊர் அதிகாரியை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''நாமக்கல் மாவட்டம், பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் அதிகாரியை தான் சொல்லுதேன்... கூடுதல் பொறுப்பா, ஜேடர்பாளையம் ஸ்டேஷனையும் கவனிச்சிட்டு இருக்காரு வே...
''இந்த சூழல்ல, போன மாசம், அவரை கோவை டவுன் ஸ்டேஷனுக்கு இடமாறுதல் செஞ்சு உத்தரவு வந்துச்சு... ஆனாலும், அங்க போகாம, பழைய இடத்துலயே டூட்டி பார்த்துட்டு இருக்காரு வே...
''ஏன்னா, 'ரெண்டு ஸ்டேஷன்கள் இவரது கட்டுப்பாட்டுல இருக்கிறதால, 'வரும்படி'யும் ரெண்டு மடங்கு அதிகமா வருதாம்... அதை இழக்க மனசில்லாம தான், லோக்கல் ஆளுங்கட்சியினர் ஆதரவோட கோவைக்கு போகாம, இங்கனயே சுத்தி சுத்தி வர்றாரு'ன்னு சக போலீசாரே சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆளாளுக்கு, 'டார்ச்சர்' பண்ணியும், பெருசா எந்த நடவடிக்கையும் எடுக்கல பா...'' என்றார், அன்வர்பாய்.
''பாலியல் தொல்லையா ஓய்...'' என, பட்டென கேட்டார் குப்பண்ணா.
''ஆமாம்... கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருத்தர், கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியா வசிக்கிறாங்க... அங்க பணிபுரியும் நாலு எஸ்.ஐ.,க்கள் மற்றும் ஒரு டிரைவர், அவரை கல்யாணம் செய்துக்கிறதா சொல்லி, தனித்தனியா பாலியல் தொல்லை குடுத்திருக்காங்க பா...
''இது பத்தி, தன் உயர் அதிகாரிகளிடம் அந்த பெண் புகார் குடுத்தாங்க... அஞ்சு பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்துனாங்க... இதுல, பாலியல் தொல்லை தந்தது உறுதியானது பா...
''ஆனாலும், அவங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல... ஒருத்தரை மட்டும், 'சஸ்பெண்ட்' பண்ணிட்டு, நாலு பேரை பணியிட மாற்றம் பண்ணி கதையை முடிச்சிட்டாங்க... சஸ்பெண்ட்ல சிக்கியவர் மீது கூட, பொது இடத்துல ஆபாசமா நடந்துக்கிட்டாருங்கிற காரணத்துக்கு தான், அந்த நடவடிக்கையை எடுத்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ரெய்டுல சிக்கியவருக்காக, பெண் அதிகாரியை, 'டம்மி' ஆக்கிட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை மண்டல நீர்வளத் துறையில், கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி செயற்பொறியாளரா இருந்தவர் பொதுப்பணி திலகம்... மணல் குவாரி முறைகேடு தொடர்பா, இவரது வீடு மற்றும் அலுவலகங்கள்ல, அமலாக்கத்துறை ரெய்டு நடந்துச்சுங்க...
''அவரை அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு அழைச்சு, விசாரணையும் நடத்துனாங்க... இவருக்கு இப்ப, இணை தலைமை பொறியாளர் பதவி உயர்வு குடுத்திருக்காங்க...
''முதல்ல, கண்காணிப்பு பொறியாளரா அவரை கொஞ்ச காலம் பணிபுரிய விட்டு, அப்புறமா தான், இணை தலைமை பதவி உயர்வு தரணும்... ஆனா, இவருக்கு நேரடியா இணை தலைமை பதவியை துாக்கி குடுத்துட்டாங்க...
''இதுக்காகவே, இணை தலைமை பொறியாளரா இருந்த ராணி என்ற பெண் அதிகாரியை, தரமணியில் உள்ள நீர்வளத் துறை அலுவலகத்துக்கு, 'டம்மி' பதவிக்கு மாத்திட்டாங்க... 'இன்னும் மூணு மாசத்துல ராணி ஓய்வு பெற இருக்கிற சூழல்ல, அவங்களை அங்க மாத்தியிருக்கிறது, பொறியாளர்கள் மத்தியில புகைச்சலை ஏற்படுத்தி இருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

