/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மா.செயலர் சிபாரிசுக்கு மட்டுமே ரேஷன் கடை பணி!
/
மா.செயலர் சிபாரிசுக்கு மட்டுமே ரேஷன் கடை பணி!
PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, ''வெளிமாவட்ட போலீசாரை வச்சு விசாரணை நடத்த சொல்லிட்டாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்தாருல்ல... இந்த ஜோடியைப் பிரிக்க பெண் வீட்டாருக்கு உதவியதா, ஏ.டி.ஜி.பி., ஜெயராமை, 'சஸ்பெண்ட்' பண்ணியிருக்காங்க பா...
''இந்த வழக்குல, ஜெயராமுடன் யார் யார் பேசினாங்க, அவருக்கு யாரெல்லாம் உதவி செய்திருக்காங்கன்னு கண்டுபிடிக்க, அவரது மொபைல் போனுக்கு வந்த, 'கால் ஹிஸ்டரி'யை எடுத்து விசாரிக்கும்படி உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவு போட்டிருக்காங்க...
''அதே நேரம், இந்த விசாரணையை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் மூலமா நடத்தவும் சொல்லியிருக்காங்க பா...
''திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கும், ஜெயராமுக்கும் தொடர்பு இருந்தா, உண்மைகள் வெளிவராதுங்கிறதால, கள்ளக்குறிச்சி போலீசாரை களம் இறக்கியிருக்காங்க... இதனால, திருவள்ளூர் போலீசார், 'நம்ம மேல சந்தேக முத்திரை விழுந்துடுச்சே'ன்னு வருத்தப்படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தண்ணீருக்காக கையேந்துதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அரசு பள்ளிகளுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமா குடிநீர் இணைப்பு குடுத்திருக்காவ... ஆனா, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ச்சியா தண்ணீர் வினியோகம் பண்றது இல்ல வே...
''இதனால, பள்ளிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுது... அதே நேரம், 'போர்வெல்' அமைக்க அரசு எந்த நிதியும் தர்றது இல்ல... இதனால உள்ளூர் பிரமுகர்கள், அரசியல் புள்ளிகளிடம் தலைமை ஆசிரியர்கள் கெஞ்சி கூத்தாடி, நிதி திரட்டி போர்வெல் போட்டுக்கிடுதாவ வே...
''காலப்போக்குல போர்வெல்ல பழுது ஏற்பட்டா, அதை சரி செய்யக்கூட அரசு நிதி ஒதுக்குறது இல்ல... இதுக்கு மத்தியில ஊராட்சிகள்ல இருக்கிற துவக்க, நடுநிலை பள்ளிகள்ல குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது, உள்ளாட்சி பிரதிநிதிகளை கூப்பிட்டு சிறப்பிக்கணும்...
''தண்ணீர் பற்றாக்குறையால, பல பள்ளிகள்ல யாரையும் கூப்பிடாம சிம்பிளா விழாவை நடத்தி முடிச்சிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மாவட்ட செயலர் சிபாரிசு இல்லாம வேலை இல்லைங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்ன வேலைக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகம் முழுக்க ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு, ஆட்கள் தேர்வு செய்யறா... மாவட்ட உயர் அதிகாரிகள் தான் இந்த நியமனங்களை பண்றா ஓய்...
''சென்னையை ஒட்டியுள்ள ரெண்டு மாவட்டங்கள்லயும், இந்த பணிக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பிச்சிருக்கா ஓய்... இந்த மாவட்ட அதிகாரிகள், ஆளுங்கட்சி மாவட்ட செயலர் பரிந்துரை பண்றவாளுக்கு மட்டும் தான் வேலை தரா ஓய்...
''கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிபாரிசுகளை எல்லாம் கண்டுக்க மாட்டேங்கறா... இதனால, அவாள்லாம் கடும் அதிருப்தியில இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''தேர்தல் வருதுல்லா... அந்த செலவுக்கு காசு தேத்துதாங்களோ...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.