/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
டெண்டர்களை வளைக்கும் முக்கிய புள்ளியின் உறவினர்!
/
டெண்டர்களை வளைக்கும் முக்கிய புள்ளியின் உறவினர்!
PUBLISHED ON : மார் 04, 2024 12:00 AM

''குடிநீர் குளம் கழிவு நீர் குட்டையா மாறிடுச்சு பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், சிறுசேரி கிராம ஊராட்சியில துக்கானி என்ற குளம் இருந்துச்சு... பல வருஷங்களா, இந்த குளம் அந்த பகுதி மக்களின் குடிநீருக்கு பயன்பட்டது பா...
''இப்ப, கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 18 லட்சம் ரூபாய் செலவுல குளத்தை புனரமைக்கும் பணிகளை செய்தாங்க... ஆனா, உருப்படியா சீர் செய்யாம, குளத்துல மண்ணை மட்டும் போட்டு நிரப்பிட்டு போயிட்டாங்க பா...
''இதுக்கு கல்வெட்டு எல்லாம் பதிச்சிட்டும் போயிட்டாங்க... இப்ப, இந்த குளம் ஊர்ல இருக்கிற கழிவுநீர் எல்லாம் சேகரமாகும் குட்டையா மாறிடுச்சு... 'நல்லா இருந்த குளத்தை நாசமாக்கிட்டாங்களே'ன்னு ஊர் மக்கள் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பணத்தை வெட்டுனா பட்டா பறந்து வரது ஓய்...'' என்றபடியே, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''எங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை செங்குன்றம், புழல் சுற்றுவட்டாரங்களில், அஞ்சு வருஷமா வீட்டு மனை பட்டாவே தர மாட்டேங்கறா... இதனால, அடித்தட்டு, நடுத்தர மக்கள், தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக, தங்களது சொத்துக்களை விற்க முடியாம தவிக்கறா ஓய்...
''மாதவரம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., சுதர்சனம், திருவள்ளூர் காங்., - எம்.பி., ஜெயகுமார் எல்லாம், தேர்த லின் போது, 'வீட்டு மனை பட்டாக்கள் மற்றும் இலவச பட்டாக்கள் விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்போம்'னு மூச்சுக்கு முன்னுாறு முறை வாக்குறுதி தந்தா ஓய்...
''ஆனா, ஜெயிச்சதும் அதை மறந்துட்டா... பொன்னேரி, மாதவரம் தாலுகா ஆபீஸ்கள்ல, வீட்டுமனை பட்டாவுக்கு விண்ணப்பிச்சிட்டு, மூணு வருஷமா பலரும் காத்துண்டு இருக்கா ஓய்...
''அதே நேரம், புரோக்கர்கள் மூலமா, 'அப்ரோச்' பண்ணி, சொத்து மதிப்புக்கு ஏற்ற மாதிரி, 20,000 ரூபாய் வரை, 'மொய்' வச்சா பட்டா வீடி தேடி வந்துடறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முக்கிய புள்ளியின் உறவினருக்கு, நகராட்சி டெண்டர்களை மொத்தமா அள்ளி குடுத்துடுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மாவட்டத் தில், குன்றத்துார், மாங்காடு ஆகிய நகராட்சிகள்ல சாலை, பூங்கா, மேல்நிலைத் தொட்டி, பள்ளி, அங்கன்வாடின்னு பல வளர்ச்சி பணிகளை செய்யுதாவ... இதுக்கான டெண்டர் எல்லாத்தையும், ஒரே ஒருத்தருக்கு மட்டுமே குடுக்காவ வே...
''சமீபத்துல, குன்றத்துார் நகர்மன்ற கூட்டம் நடந்துச்சு... இதுல, 3.94 கோடி ரூபாய்க்கான வளர்ச்சி பணிகளை, அதே நபருக்கு வழங்க தீர்மானம் நிறைவேத்தினாவ வே...
''குன்றத்துாரை சேர்ந்த ஒருத்தர், கோட்டையில முக்கிய புள்ளியா இருக்காரு... அவரது தங்கையின் வீட்டுக்காரர் தான் அந்த நபர்... அதனால, மாங்காடு, குன்றத்துார் நகராட்சியில எந்த பணிகளா இருந்தாலும், அவரிடம் தான் தரணும்கிறது எழுதப்படாத விதியாவே மாறிட்டு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''ராமச்சந்திரன் இப்படி உட்காருங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

