PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM

முதல்வருக்கு நிகராக உதயநிதிக்கும் மரியாதை!
ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, “மாதாந்திர கூட்டத்தை நடத்தாம, 40 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்திடுறாரு பா...” என, விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய்.
“என்ன கூட்டத்தை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“மாநகராட்சிகள்ல, கவுன்சிலர்கள் கலந்துக்கிற மன்றக் கூட்டத்தை, மாசத்துல ஒரு நாளாவது நடத்தணும்... இதுல, முக்கிய திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி, செயல்படுத்துவாங்க பா...
“ஆனா, திருநெல்வேலி மாநகராட்சியில், மாதாந்திர கூட்டத்தை ஆளுங்கட்சி முக்கிய புள்ளி நடத்தவே மாட்டேங்கிறாரு... ஒரு மாசம் விட்டு ஒரு மாசம்தான் நடத்துறாரு பா...
“மாநகராட்சியில் மொத்தம், 55 கவுன்சிலர்கள் இருக்காங்க... கூட்டம் நடத்தினா, தீர்மானங்களை நிறைவேற்றி தரக்கூடிய கவுன்சிலர்களுக்கு கணிசமா, 'கவனிப்பு' செய்யணும் பா...
“இதனால, ஒரு முறை கூட்டம் நடத்த, மாநகராட்சியின் முக்கிய புள்ளிக்கு, தனிப்பட்ட முறையில், 40 லட்சம் ரூபாய் செலவாகுதாம்... 'இந்த செலவை மிச்சப்படுத்தவே, மாதாந்திர கூட்டத்தை நடத்த மாட்டேங்கிறாரு'ன்னு கவுன்சிலர்கள் புலம்புறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“ராமகிருஷ்ணன், தள்ளி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “போலீஸ் ஸ்டேஷனையே கட்டுப்பாட்டில் வச்சிருக்காங்க...” என்றார்.
“யாருவே அது...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“துாத்துக்குடியில், வடக்கு பக்கமா இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல, ஒரு பெண் போலீஸ் இருக்காங்க... ஸ்டேஷன் அதிகாரிகள் ரெண்டு பேரிடமும் பயங்கர செல்வாக்கா இருக்காங்க...
“இதனால, ஸ்டேஷன்ல அவங்க வச்சது தான் சட்டம்... யார் புகார் அளிக்க வந்தாலும், முதல்ல பெண் போலீசை பார்த்துட்டு தான், அதிகாரிகளை பார்க்க முடியும்... எந்த புகாரை விசாரணைக்கு எடுக்கணும், எதை நிராகரிக்கணும் என்பதை எல்லாம் இவங்க தான் முடிவு பண்றாங்க... சக போலீசார் மற்றும் அதிகாரிகளை, ஒருமையில் தான் பேசுறாங்க...
“இவங்களை பத்தி ஸ்டேஷன் அதிகாரிகளிடம் போலீசார் புகார் பண்ணியும், அவங்க கண்டுக்கல... இதனால, எஸ்.பி., ஆபீஸ்ல புகார் அளிக்க முடிவு பண்ணியிருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“பானு, பத்து நிமிஷம் கழிச்சு நானே பேசுதேன்...” என, மொபைல் போனை, 'கட்' செய்த அண்ணாச்சி, “முதல்வருக்கு இணையா இருக்கணும்னு உத்தரவு போட்டிருக்காவ வே...” என்றபடியே தொடர்ந்தார்...
“தி.மு.க.,வில், இளைஞர் அணியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கான பேனர், போஸ்டர்கள்ல துணை முதல்வர் உதயநிதி படத்தை பெருசா போடுதாவ... அதே நேரம், கட்சியின் மாவட்ட செயலர்கள் அடிக்கிற பேனர், போஸ்டர்கள்ல சீனியர் அமைச்சர்கள் படத்தை விட, சின்னதா போடுதாவளாம்...
“இதை, உதயநிதி காதுல சிலர் ஓதிட்டாவ... உதயநிதிக்கு நெருக்கமான சிலர், பல மாவட்ட செயலர்களுக்கும் போன் போட்டு, 'இனி எந்த பேனர், போஸ்டர், பேப்பர் விளம்பரம், துண்டு பிரசுரமா இருந்தாலும் சரி... அதுல, முதல்வரின் படத்துக்கு இணையா உதயநிதி படத்தையும் போடணும்... முதல்வர் படத்தை விட பெருசா போட்டா கூட பிரச்னையில்லை... சின்னதா மட்டும் போடக் கூடாது'ன்னு உத்தரவு போட்டிருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.