ரூ.300 கோடி ' டெண்டர் ' பணியில் முறைகேடுக்கு முயற்சி!
ரூ.300 கோடி ' டெண்டர் ' பணியில் முறைகேடுக்கு முயற்சி!
PUBLISHED ON : ஆக 31, 2026 12:27 AM

“குரங்கை பிடிச்சு வம்புல மாட்டிக்கிட்டாவ வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய்.
“பெரம்பலுார் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்துல, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி இருக்கு... இங்க, நிறைய குரங்குகள் தொல்லை இருக்கு வே...
“வனத்துறைக்கு தகவல் தெரிவிச்சா, அவங்க வந்து குரங்கு களை பிடிச்சு, காட்டுக்குள்ள விட்டிருப்பாவ... ஆனா, கல்லுாரி நிர்வாகம் குரங்குகளை பிடிக்க, தனி நபர்கள் ரெண்டு பேரை கூப்பிட்டிருக்கு வே...
“அதுல ஒருத்தர், ஒரு குரங்கின் வாலை பிடிச்சு சரசரன்னு சுத்தி, தரையில போட்டு அமுக்கியதுல, குரங்கு செத்து போயிட்டு... இதை, கல்லுாரி வாட்ச்மேன் வீடியோவும் எடுத்திருக்காரு வே...
“இந்த வீடியோ சமூக வலைதளங்கள்ல பரவ, அதிர்ச்சியான வனத்துறை அதிகாரிகள் வந்து, குரங்குகளை பிடிச்ச ரெண்டு பேருக்கு தலா, 20,000 ரூபாய், வீடியோ எடுத்த வாட்ச்மேனுக்கு, 10,000 ரூபாய் அபராதம் போட்டதும் இல்லாம, கல்லுாரி முதல்வருக்கு எச்சரிக்கையும் விடுத்துட்டு போயிருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“பாலசுப்பிரமணியம் தள்ளி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “தன்னிச்சையா செயல்படுறாங்க...” என்றபடியே தொடர்ந்தார்...
“காரைக்குடியில் விஜய் செய்த பிரசாரத்தால, சிவகங்கை மாவட்டத்துல இருக்கிற நாலு தொகுதிகளையும் த.வெ.க., அள்ளிடுச்சு... காரைக்குடி எம்.எல்.ஏ.,வான கனிமவளத் துறை அமைச்சர் பிரபு தான், மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்காருங்க...
“சிவகங்கை எம்.எல்.ஏ.,வான குழந்தைராணி நாச்சியார், மாவட்ட அமைச்சரை மதிக்கிறதே இல்லை... பிரபு கலந்துக்கிற அரசு நிகழ்ச்சிகளுக்கும் போறது இல்லைங்க...
“தன் தொகுதியில், தன்னை தான் முன்னிலைப்படுத்தணும்னு அதிகாரிகளிடம் சொல்றாங்க... அதிகாரிகளோ, 'தொகுதி வளர்ச்சி பணிகளை, மாவட்ட அமைச்சர் மூலமா தான், மாநில அதிகாரிகளுக்கு எடுத்துட்டு போக முடியும்'னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க... இதனால, 'தொகுதி வளர்ச்சி தான் பாதிக்கப்படும்'னு, த.வெ.க.,வினர் புலம்புறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“டெண்டர்ல முறைகேடு பண்ண முயற்சி நடக்கறது ஓய்...” என்றார் குப்பண்ணா.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தமிழகத்தில் இருக்கிற துணை மின் நிலையங்கள்ல, 'சி.சி.டி.வி.,' கேமரா பொருத்த, கடந்த தி.மு.க., ஆட்சியில முடிவு செய்து, படிப்படியா கேமராக்கள் பொருத்தினா... வழக்கம்போல, 'கமிஷன்' வசூலும் நடந்துது ஓய்...
“புதுசா வந்திருக்கற த.வெ.க., அரசும், துணை மின் நிலையங்கள் மற்றும் அனைத்து மின் வாரிய அலுவலகங்கள்ல, கேமரா பொருத்த முடிவு பண்ணியிருக்கு... இதுக்கு, 300 கோடி ரூபாய் செலவாகும் ஓய்...
“இதை ஒரே டெண்டரா விட்டா, சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் என்பதால செலவும் குறையும்... ஆனா, 300 கோடி ரூபாய் பணிகளை, பல டெண்டர்களா பிரிச்சு விடறதுக்கு சில நிறுவனங்கள் முயற்சி பண்றது ஓய்...
“இதுல பல கோடி ரூபாய் கமிஷன் கிடைக்கும் என்பதால, துறையின் மேலிடமும் இதுக்கு ஒப்புதல் தந்துடுத்து... 'இதுல முதல்வர் விஜய் தலையிட்டா, அரசுக்கு பல கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும்'னு, மின் துறையில் இருக்கற நேர்மையான அதிகாரிகள் சொல்றா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
“நிர்மல்குமார், நாளைக்கு பார்க்கலாம் பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
