/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
உதயநிதியை வாழ்த்த வராத சீனியர் அமைச்சர்!
/
உதயநிதியை வாழ்த்த வராத சீனியர் அமைச்சர்!
PUBLISHED ON : டிச 02, 2024 12:00 AM

“பொறுப்பேற்க வந்தவரை திருப்பி அனுப்பிட்டாரு வே...” என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனரா இருந்தவர், ஜஹாங்கீர் பாஷா... சில மாசத்துக்கு முன்னாடி, ஊட்டி நகராட்சி கமிஷனரா, இவருக்கு, 'டிரான்ஸ்பர்' போட்டாவ வே...
“போன மாசம் 9ம் தேதி, ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பு பகுதி யில், இவரது காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மறிச்சு சோதனை போட்டு,11.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செஞ்சாவ... இது சம்பந்தமா, அவர் மேல வழக்கும் பதிவு பண்ணியிருக்காவ வே...
“இதனால, கட்டாய காத்திருப்பு பட்டியல்ல வைக்கப்பட்ட ஜஹாங்கீர் பாஷாவை, சமீபத்துல, திருநெல்வேலிக்கே உதவி கமிஷனரா நியமிச்சாவ... இதுக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் கடும் கண்டனம் தெரிவிச்சது வே...
“இந்த சூழல்ல, ஜஹாங்கீர் பாஷா நாலு நாளைக்கு முன்னாடி, திருநெல்வேலி மாநகராட்சி ஆபீசுக்கு பொறுப்பேற்க போயிருக்காரு... ஆனா, கமிஷனர் சுகபுத்திரா, 'சென்னையில, நகராட்சி ஆணையரிடம் இருந்து ஒப்புதல் வாங்கிட்டு வந்தால் தான், 'சார்ஜ்' எடுத்துக்க முடியும்'னு சொல்லி, திருப்பி அனுப்பிட்டாரு வே...” என்றார், அண்ணாச்சி.
“அரண்மனைக்குள்ள புதையல் இருக்குன்னு கிளப்பி விடுறாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்துல, எட்டப்ப நாயக்க மன்னரின் அரண்மனை இருக்கு... அவரது வாரிசுகளுக்குள்ள ஏற்பட்ட பிரச்னையால, அரண்மனை எந்த பராமரிப்பும் இல்லாம சிதிலமடைஞ்சு கிடக்குதுங்க...
“அந்த இடத்தை சீரமைத்து, சுற்றுலா தலமாக்கலாம்னு வாரிசுகள்ல ஒரு தரப்பினர் வலியுறுத்துறாங்க... இன்னொரு தரப்போ, 'அரண்மனைக்குள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் இருக்கு... சீரமைக்கிறோம்னு சொல்லி, அதிகாரிகள் உதவியுடன் அதை எடுக்க பிளான் பண்ணி தான் இப்படி கோரிக்கை வைக்கிறாங்க'ன்னு புலம்புறாங்க...' என்றார், அந்தோணிசாமி.
“துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளுக்கு வராம மூத்த அமைச்சர் புறக்கணிச்சுட்டாரு பா...” என்றார், அன்வர்பாய்.
“அடடே... யார் ஓய் அது...” என கேட்டார், குப்பண்ணா.
“தென் மாவட்டத்தை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருத்தர், தன் துறையில் இருக்கிற அதிகாரி ஒருத்தருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கணும்னு, தலைமையிடம் பரிந்துரை பண்ணியிருக்காரு பா...
“இதை, ஆட்சி மேலிடம் கண்டுக்கல... இதுக்கு மத்தியில, கோட்டையில் கோலோச்சும் மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், வேறொரு பெண் அதிகாரியை அந்த பதவிக்கு பரிந்துரை பண்ணிட்டாரு பா...
“இதனால, சீனியர் கடுப்பாகிட்டாராம்... 'அதிகாரிகள் பேச்சை கேட்டு ஆட்சி நடத்துனா என்ன அர்த்தம்... கட்சிக்காக கடுமையா உழைச்ச என்னை மாதிரி சீனியர்களை மதிக்காம இப்படி செய்றாங்களே'ன்னு தனக்கு நெருக்கமானவங்களிடம் புலம்பியிருக்காரு பா...
“அந்த கோபத்தை வெளிக்காட்டுற விதமா தான், உதயநிதி பிறந்த நாள் விழாவுக்கு வராம, புறக்கணிச்சுட்டாரு... அன்னைக்கு, அவரது ஊர்ல நடந்த பிறந்த நாள் விழாவுல, பேருக்கு கலந்துக்கிட்டு புறப்பட்டு போயிட்டாருப்பா...” என, முடித்தார் அன்வர்பாய்.
அரட்டை முடிய, வழக்கத்துக்கு மாறாக, “பெரியசாமி அண்ணாச்சி கிளம்பறேன்...” என, பெயர் சொல்லி, அந்தோணிசாமி விடைபெற, ஏதோ புரிந்தது போல மற்றவர்களும் கிளம்பினர்.