/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆயுதப்படையில் அணிவகுக்கும் பாலியல் புகார்கள்!
/
ஆயுதப்படையில் அணிவகுக்கும் பாலியல் புகார்கள்!
PUBLISHED ON : அக் 11, 2024 12:00 AM

ஆயுத பூஜை கொண்டாடிய நாயர் தந்த அவல், பொரியை சாப்பிட்டபடியே, ''விதிமீறல்களை கண்டுக்க மாட்டேங்கிறாங்க...'' என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''நீலகிரி மாவட்டம், குன்னுார் மார்க்கெட் பக்கம் ஆத்தோரமா, நகராட்சிக்கு சொந்தமானவாடகை கடைகள்இருக்குதுங்க... இங்க கடை வச்சிருக்கிற வியாபாரிகள் சங்கத் தலைவர், லட்சக்கணக்குல வாடகை பாக்கி வச்சிருக்காருங்க...
''இதை வசூலிக்கிறதுலநகராட்சி பெண் அதிகாரிஆர்வம் காட்டலைங்க...அதுவும் இல்லாம, ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகி ஒருவரது சிபாரிசுல, சங்கத் தலைவரின் கடையை இடிச்சு, புனரமைக்க அனுமதி குடுத்திருக்காங்க...
''மார்க்கெட்ல சின்ன வேலையை செய்றதுக்குகூட பெண் அதிகாரி அனுமதிக்கிறது இல்லைங்க... அதே நேரம், ஆத்தோரம் கட்டுமானப் பணிகள் செய்ய கூடாதுங்கிற விதிகளை பார்க்காம, ஆளுங்கட்சியினர் உத்தரவின்படி, இஷ்டத்துக்கு அனுமதியை வாரி வழங்குறாங்க... மற்ற வியாபாரிகள், பெண் அதிகாரிமேல அதிருப்தியில இருக்காங்க...'' என்றார்,அந்தோணிசாமி.
''நிறுவனத்தையே இழுத்து மூடவும் தயங்க மாட்டாங்களாம்...''என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மாவட்டம்,சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொடர்வேலை நிறுத்தத்துல ஈடுபட்டிருக்காங்கல்லா... 5,000 ரூபாய் ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றிய சாம்சங், கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மட்டும் மறுத்துட்டுல்லா வே...
''உலகம் முழுக்கவே சாம்சங் நிறுவனங்கள்லதொழிற்சங்கங்கள் கிடையாதாம்... அதன்படி, 'இங்கயும்சங்கம் அமைக்க முடியாது'ன்னு சொல்லுதாவ வே...
''ஆளுங்கட்சி தரப்புல,மூணு அமைச்சர்கள் குழு பேசியும் தீர்வு கிடைக்கல... தங்களது நிலையில, ரெண்டு தரப்புமே பிடிவாதமா இருக்கு வே...
''தங்களது கொள்கைக்கு பங்கம் வந்தா, 'நிறுவனத்தையே மூடிட்டு போகவும் தயார்' என்ற நிலைக்கு, சாம்சங் நிர்வாகிகள் வந்துட்டாவளாம்... இதனால, 'எப்படியாவது இந்த விவகாரத்தை சுமூகமா முடிச்சு வைக்கணும்'னு, தொழில்துறை அமைச்சர் ராஜா தீவிரமா இறங்கியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''இப்படி இருந்தா, எப்படி தொழில் வளம் பெருகும்...'' என்ற அன்வர்பாயே, ''நட்பு ரீதியா பழகி, வாழ்க்கையை நாசம் ஆக்குறாங்க பா...'' என்றார்.
''யாரை சொல்றீங்க...''என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில், ரெண்டு எஸ்.ஐ.,க்கள் இருக்காங்க... இவங்க, பெண் போலீசாருக்கு நட்பு வலை வீசி நல்லா பழகுறாங்க பா...
''அவங்களுக்கு பிரியாணி விருந்து, பிறந்த நாள் பரிசுன்னு குடுத்து, காதலிக்கிறதா சொல்லி, தங்களது வலையில வீழ்த்திடுறாங்க... கடைசியா கழற்றி விட்டுடுறாங்க பா...
''இவங்களால பல பெண் போலீசார் பாதிக்கப்பட்டிருக்காங்க...இவங்க எல்லாம் சேர்ந்து, 'எஸ்.ஐ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிச்சிருக்காங்க பா...
''பரங்கிமலை மட்டுமில்லாம, பல ஆயுதப்படையிலயும் இந்த மாதிரி பாலியல் தொல்லைகள் அதிகம் இருக்காம்... இதனால, 'விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடணும்'னு பெண் போலீசார் கேட்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.