/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.1.50 கோடி பாக்கி வைத்தவருக்கே மீண்டும் கடை!
/
ரூ.1.50 கோடி பாக்கி வைத்தவருக்கே மீண்டும் கடை!
PUBLISHED ON : நவ 01, 2024 12:00 AM

''தீபாவளி பலகாரம் சாப்பிட்டது சரியா ஜீரணமாகல... சுக்கு காபி குடும்நாயரே...'' என்றபடியேவந்த பெரியசாமி அண்ணாச்சி, ''மாவட்டத்தை பிரிக்காம பதவி கேட்காரு வே...'' என்றார்.
''எந்த கட்சியில பா...''என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக காங்., தலைவராஅழகிரி இருந்தப்ப, சென்னையில அமைப்புரீதியாக பிரிக்கப்பட்ட ஏழுமாவட்டங்கள்ல, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் ஒருத்தருக்கு கூட மாவட்ட தலைவர் பதவி தரல...
''சிதம்பரத்தின் ஆதரவாளரான முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீராம், இந்த முறை தென்சென்னை மாவட்ட தலைவர் பதவியை பிடிக்க களம் இறங்கிஇருக்காரு வே...
''அதே நேரம், 'ரெண்டுசட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட தலைவர்னுபிரிக்காதீங்க... நாலு தொகுதியோட எனக்கு பதவி தரணும்... இல்லாட்டி, மாநில துணைதலைவர் அல்லது பொதுச்செயலர் பதவி தாங்க'ன்னுதலைமையிடம் கறாரா கேட்டிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''நுாதனமா மோசடி பண்றா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்த துறையிலங்க...''என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை, பொள்ளாச்சிபக்கம் பிரபல சுற்றுலா தலமான வால்பாறை இருக்கோல்லியோ... இதுக்கான சாலை, ஆழியாறு பகுதியில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிவழியா போறது ஓய்...
''ஆழியாறில் வனத்துறை சோதனைச்சாவடி இருக்கு... இங்க, பாஸ்டேக், யு.பி.ஐ.,வாயிலா வாகனத்துக்கு,50 ரூபாய், தனி நபருக்குதலா, 30 ரூபாய்னு கட்டணம் வாங்கறா ஓய்...
''யு.பி.ஐ., மெஷின்ல பணம் வசூலிக்கறச்சே, மூணு பிரின்ட்கள் எடுக்கறா... ஒரு நகல் வனத்துறைக்கு, இன்னொரு நகல் வாகனஉரிமையாளருக்கு ஓய்...
''மீதம் இருக்கற மூணாவது நகலை, அடுத்ததா வர வாகன ஓட்டுநரிடம் குடுத்துட்டு,பணத்தை மட்டும் வனத்துறை அதிகாரியின்மொபைல் போன்ல இருக்கற க்யூ.ஆர்., கோடை காட்டி, வசூல் பண்ணிடறா... இந்த பணம், அதிகாரியின் வங்கி கணக்குக்கு போயிடறது ஓய்...
''இந்த வகையில, சுற்றுலா பயணியர் அதிகம் வரும் வார இறுதி நாட்கள்ல, ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கறா... இதை கண்டுக்காமஇருக்க, உயர் அதிகாரிகளுக்கும், 'கட்டிங்' போயிடறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கோவையில இந்த கூத்தையும் கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கோவை ஆர்.எஸ்.புரம் ஏரியாவுல பூ மார்க்கெட் செயல்படுது...இங்க ரெண்டு கடைகளைநடத்திய பெண் வியாபாரி,மாநகராட்சிக்கு வாடகையே கட்டாம, கோடிக்கணக்குலபாக்கி வச்சுட்டாங்க...இதனால, மார்க்கெட்டைபுதுப்பிச்சு கட்டினப்ப, அவங்களை, 'பிளாக் லிஸ்ட்'ல சேர்த்தாங்க...
''இதனால, உஷாரான பெண் வியாபாரி, சமீபத்துல உக்கடம் மேம்பாலம் திறப்பு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தப்ப, அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில, தன் மாற்றுத் திறனாளி உறவினர் பெண்ணை முன்வரிசையில நிறுத்தி வச்சாங்க...
''அந்த பெண்ணிடம் முதல்வர் பரிவா நலம் விசாரிக்கவும், பூ மார்க்கெட்டுல கடை ஒதுக்கி தரணும்னு மனு குடுத்திருக்காங்க... முதல்வரும்,கடை ஒதுக்கச் சொல்லி, அதிகாரிகளுக்கு உத்தரவுபோட்டுட்டு போயிட்டாரு...முதல்வரே சொல்லிட்டதால, கிட்டத்தட்ட 1.50கோடி ரூபாய் வாடகை பாக்கி வச்சிருந்தும், அவங்களுக்கே மறுபடியும் ரெண்டு கடைகளைஅதிகாரிகள் ஒதுக்கிட்டாங்க...'' என முடித்தார்,அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.