அனுமதியின்றி கடைகள் கட்டி அமோக விலைக்கு விற்பனை!
அனுமதியின்றி கடைகள் கட்டி அமோக விலைக்கு விற்பனை!
PUBLISHED ON : ஏப் 02, 2026 01:08 AM

பி ல்டர் காபியை பருகியபடியே, ''மாசம், 3 லட்சம் ரூபாய் மாமூல் அள்ளறா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊர் போலீசாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, மேடவாக்கம் மற்றும் சுற்று பகுதிகள்ல, நிறைய கட்டுமான பணிகள் நடக்கறது... இதுக்கு நிறைய செங்கல்கள் தேவைப்படறது ஓய்...
''இதுக்காக, செங்கல் சூளை உரிமையாளர்கள், நிறைய லாரிகள்ல செங்கல்களை ஏத்திண்டு வரா... மேடவாக்கத்தில் இருந்து மடிப்பாக்கம் போற சாலையில், வெள்ளக்கல்னு ஒரு இடம் இருக்கு ஓய்...
''இங்க இருக்கற அரசு மேல்நிலை பள்ளி பக்கத்துல, சாலை ஓரமா லாரிகளை நிறுத்தி, மொத்த விலைக்கு விற்பனை பண்றா... இப்படி, தினமும், 50க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வியாபாரம் பண்றா ஓய்...
''இதனால, அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படறது... ஒரு லாரிக்கு தினமும், 200 ரூபாயை, போக்குவரத்து போலீசார் மாமூலா வாங்கறா ஓய்...
''இப்படி, தினமும் 10,000 ரூபாய் வீதம் மாதம், 3 லட்சம் ரூபாய் வசூலாறது... உயர் அதிகாரிகள், சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாசம் ஒரு முறை பங்கு குடுத்துடறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மேயர் வெற்றிக்காக, தனி டீமே களத்துல இறங்கிட்டு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாநகராட்சி தி.மு.க., மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுதாரு... திருப்பூர்ல, குப்பை விவகாரம் தீராத பிரச்னையா இருந்தாலும், தொகுதியில் இருக்கிற சிறுபான்மையினர் ஓட்டுகள் தனக்கு கைகொடுக்கும்னு நம்பி, களத்துல இறங்கியிருக்காரு வே...
''தன் வெற்றிக்காக, தனியா ஒரு டீமையும் அமைச்சிருக்காரு... இந்த டீம்ல இருக்கிறவங்க, எந்தெந்த பகுதிகள்ல மேயருக்கு ஆதரவு இருக்கு, எதிர்ப்பு இருக்குன்னு கள ஆய்வு நடத்தி, மேயருக்கு தகவல் தர்றாவ... பாதகமான பகுதிகளுக்கு மேயர் உடனே போய், அங்க இருக்கிறவங்களிடம் நைச்சியமா பேசி, ஆதரவு திரட்டிட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''அனுமதியின்றி கடைகள் கட்டி, 1.50 கோடி ரூபாய் சம்பாதிச்சிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த ஊருலப்பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் இருந்த, மகாத்மா காந்தி மார்க்கெட்டை இடிச்சிட்டு, 15 கோடி ரூபாய் செலவுல, புதிய வணிக வளாகம் கட்டி, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் முதல்வர் திறந்து வச்சாரு... இங்க, 440 கடைகளை ஏற்கனவே இருந்த வணிகர்களுக்கு குடுத்தாங்க...
''ஆனா, மாநகராட்சி அனுமதியே இல்லாம, வணிகர் சங்கத்தினரும், ஆளுங்கட்சியினரும் சேர்ந்து, கூடுதலா, 10 கடைகளை கட்டி, ஒரு கடை, 15 லட்சம் ரூபாய்னு, 1.50 கோடிக்கு வித்துட்டாங்க.. .
''வாகன நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் நிற்கிறதுக்காக காலியா விட்டு வச்சிருந்த இடங்கள்ல, இந்த கடைகளை கட்டியிருக்காங்க... இது பத்தி, மாநகராட்சி மண்டல அதிகாரியிடம் கேட்டதுக்கு, 'அப்படியா... எங்களுக்கு எதுவும் தெரியாதே... விதிகளை மீறி கட்டியிருந்தா அவற்றை அகற்றுவோம்'னு பொத்தாம் பொதுவா சொல்றாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''புரந்தரதாஸ், இங்கன உட்காரும்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
