PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM

தமிழக பா.ஜ. துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'தமிழக
மக்கள், அதிகம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், அந்தக் கடவுளை அவரவர்
தான் முடிவு செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு ஒருவர் கூறும் கடவுளையே,
அனைவரும் வழிபட வேண்டும் என்றால், அதை எப்படி ஏற்க முடியும்' என, கனிமொழி
எம்பி. கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக மக்கள் பல கட்சிகளில் இருப்பவர்கள்;
பல கொள்கைகளை கொண்டவர்கள். அவரவர் தான் தலைவர்களை முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் அதை விட்டு பொது இடங்களுக்கு ஈ.வெ.ரா. பெயரையும், கருணாநிதி
பெயரையும் வைக்க வேண்டும் என்றால், அதை எப்படி ஏற்க முடியும்.
இவர் கேட்கிற கேள்விக்கு முதல்ல கனிமொழி பதில் தரலாமே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான மருது அழகுராஜ் அறிக்கை: மசூதி ஆலயமானது என்கிறது ஒரு தரப்பு. இல்லை ஆலயம் தான் அன்று மசூதி ஆக்கப்பட்டது என்கிறது மற்றோர் தரப்பு. எப்படியோ ஹிந்து, முஸ்லிம் இரு தரப்பும், ஒன்றுக்குள் ஒன்று தான் என்பதே இதன் சிறப்பு. ஆம்... ராமரின் பெருமைக்கும், தன் சகோதர மதத்தவரின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த ராவுத்தர்களின் பெருந்தன்மைக்கும், இனி அடையாளம் ஆகட்டும் அயோத்தி.
ராமர் கோவில் விழாவுக்கு வாழ்த்தும், வரவேற்பும் தெரிவித்த எத்தனையோ முஸ்லிம் மக்களே இதற்கு சாட்சி!
தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலர் கோவை செல்வராஜ் பேச்சு: 'நீட்' விலக்கு கோரி, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறுவது இலக்காக இருந்தது. ஆனால், 85 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, சேலம் இளைஞரணி மாநாட்டில் ஒப்படைத்திருப்பது மாநாட்டின் வெற்றியை பறைசாற்றி விட்டது. தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கொடுப்பதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்தும், மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மத்தியில் புதிய எழுச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கருணாநிதி, ஸ்டாலின் காலத்து சீனியர்களை, வீட்டுக்கு அனுப்ப உதயநிதி முடிவு பண்ணிட்டது தெளிவா தெரியுது!
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புள்ளியியல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி.யால் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி ஐந்து மாதங்களாகியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. அரசு வேலை வழங்குவதில், டி.என்.பி.எஸ்.சி. காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
லோக்சபா தேர்தல் தேதியை அறிவிச்சுட்டா, பணி நியமனம் வழங்க முடியாது என்பது, டி.என்.பி.எஸ்.சி.க்கு தெரியாதோ?