PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM

பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி: லோக்சபா
தேர்தலில், எத்தனை முனை போட்டி என்பது தேர்தல் களம் சூடுபிடிக்கும் போது
தான் தெரியும். யார் எந்த அணியில் இருப்பர் என்பதை சொல்ல முடியவில்லை.
பா.ம.க., கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. எந்த கட்சிகளுடன் கூட்டணி
என்பதை, ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்.
தி.மு.க., கூட்டணியில்,
‛ஹவுஸ் புல்' போர்டு போட்டாச்சு... அ.தி.மு.க., - பா.ஜ., ரெண்டு
கூட்டணியில் எது பெஸ்ட்டுனு டாக்டர் ரூம் போட்டு யோசிச்சிட்டு இருப்பதை
தான் இவர் இப்படி சொல்றாரோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: வெளிப்படையான அரசு, ஒளிவு மறைவற்ற அரசு என்று வாயளவில் சொல்லிக் கொள்ளும் தி.மு.க., அரசு, தனியார் மதுபான ஆலைகளில் இருந்து, 'டாஸ்மாக்' நிர்வாகத்துக்கு, விலைக்கு வாங்கப்படும் மதுபான வகைகளின் கொள்முதல் விலையை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தெரிவிக்க மறுப்பது ஏன்? அதற்கு ஏதாவது சொல்லக்கூடாத ரகசிய காரணம் உண்டா?
கொள்முதல் விலையை வெளியிட்டால், நிறுவனங்களின் கொள்ளை லாபம் வெளியில் தெரிஞ்சிடுமே... அதனால தான் பூசி மெழுகுறாங்களோ என்னமோ?
பாரத் ஹிந்து முன்னணி தலைவர் பிரபு அறிக்கை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளே, சமபந்தி விருந்து என்ற பெயரில், முதல்வர் படத்துடன் பேனர் வைத்துள்ளனர். முதல்வர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். சமீபத்தில் பழனி கோவிலில் கடவுள் நம்பிக்கை அல்லாதவர்களை, அனுமதிக்கக் கூடாது என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே, முதல்வர் படத்துடன்பேனர் வைக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதெல்லாம் ரொம்ப ஓவர்... கடவுள் நம்பிக்கை இருப்பவர், இல்லாதவர்னு எல்லாருக்கும் அவர் தான் முதல்வர் என்பதை மறக்கக் கூடாது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: எங்களை விட்டால், உங்களுக்கு வேறு வழியில்லை என்னும் இறுமாப்பு அரசியலுக்கு, புதிய கட்சிகளின் புறப்பாடு மாற்றாகவும், விருப்பங்களுக்கு ஏற்ற வாய்ப்பாகவும் அமையக்கூடும்.
அப்படியா... இதுக்கு முன்னாடி யும் வருஷத்துக்கு அஞ்சாறு புது கட்சிகள் உருவாகி, வந்த வேகத்துல இழுத்து மூடிட்டு போனதையும் ஞாபகப்படுத்தி பார்க்கணும்!

