PUBLISHED ON : ஜன 14, 2026 05:22 AM
� பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கட்சிக்கு... � தமிழக விவசாயிகள் சங்கம் ஆணித்தரம்
மேட்டுப்பாளையம்: வனவிலங்குகளால் பயிருக்கு ஏற்படும் பிரச்னைக்கு, தீர்வு காண முன்வரும் அரசியல் கட்சிக்கே தேர்தலில் தங்கள் ஆதரவு என்று, தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள், விவசாயத்தையும், விவசாய கூலி வேலையை மட்டுமே நம்பியுள்ளனர். ஆறு, வாய்க்கால் பாசனம் ஏதும் இல்லாததால், கிணற்றுத் தண்ணீரை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, வருமானத்துக்காக விவசாயிகள் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாடுகளுக்கு தேவையான தீவனப் பயிர்களான மசால் புல், சோளத்தட்டு, மக்காச்சோளம் ஆகியவற்றை விவசாயிகள், தங்கள் நிலங்களில் வளர்த்து வருகின்றனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறியதாவது:
விவசாயிகள் பசு மாடுகளுக்கு தேவையான தீவனப் பயிர்களை, தங்கள் நிலங்களில் வளர்த்து வருகின்றனர். காட்டுப்பன்றிகள், தீவனப் பயிர்களை சேதம் செய்வதால், கறவை மாடுகள் பசுந்தீவனப்பயிரை சாப்பிடுவதில்லை. அதனால் மாடுகளுக்கு விலை கொடுத்து, தீவனம் வாங்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விவசாய நிலங்களிலேயே அவை நிரந்தரமாக தங்கி உள்ளன.
பன்றிகளை வேட்டையாட சிறுத்தைகள், வனப்பகுதியில் இருந்து, விவசாய நிலங்களுக்கு வருகின்றன. பன்றிகள் கிடைக்காத போது, தோட்டத்தில் உள்ள நாய்கள், ஆடுகள், கன்றுக்குட்டிகளை பிடித்து செல்கின்றன.
விவசாய நிலங்களில் உள்ள காட்டுப்பன்றிகளையும், சிறுத்தைகளையும் பிடிக்க, வனத்துறை முழுமையான நடவடிக்கை எடுப்பதில்லை.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, பிப்., 6ம் தேதி, வனவிலங்குகளால் பாதித்த விவசாயிகள், பொது மக்கள் கோரிக்கை மாநாடு நடத்த, சங்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற எங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே, தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்கும்.
காட்டுப்பன்றிகளை விவசாயிகளே பிடித்து அழிக்கவும் நடவடிக்கை எடுக்கவும், மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

