PUBLISHED ON : ஜூன் 30, 2026 12:00 AM

“அடம் பிடிச்சு கார் வாங்கியிருக்காங்க...” என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
“யாருவே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழக பால்வளத் துறையில், கமிஷனருக்கு அடுத்து துணை கமிஷனருக்கு தான் அதிகாரம்... ஆனா, இதை மீறி கடந்த தி.மு.க., ஆட்சியில், கூட்டுறவு துறையில் கூடுதல் பதிவாளரா இருந்த ஒரு பெண் அதிகாரியை, பால்வளத் துறைக்கு கூடுதல் கமிஷனரா நியமிச்சாங்க...
''இவங்க அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் இருக்குது... ஆனா இவங்க, தனக்கு வேண்டிய ரெண்டு அதிகாரிகளை, சென்னை, நந்தனம் அலுவலகத்துக்கு மாத்தி பல, 'டீலிங்'குகளை பேசி முடிக்கிறாங்க...
“ஆவின் கமிஷனர் அலுவலகத்துல நிறைய கார்கள் இருந்தும், தனக்கு புது கார் தான் வேணும்னு அடம் பிடிச்சு, 8.36 லட்சம் ரூபாய்க்கு, 'மாருதி டிசையர்' காரை சமீபத்துல வாங்கிட்டாங்க...
“இந்த பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையிலும், இவங்களுக்கு மாசம் 3 லட்சம் ரூபாய் சம்பளம், கார், டிரைவர், அலுவலக உதவியாளர்னு அரசு பணம் வெட்டியா செலவாகுதுங்க...” என்றார் அந்தோணிசாமி.
“பிரமிளா, 10 நிமிஷம் கழிச்சு பேசறேன்...” என, மொபைல் போனை ஆப் செய்தபடியே வந்த குப்பண்ணா, “வசூல்ல புகுந்து விளையாடறா ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“ஆட்சி மாறியதும், கோவை மாநகராட்சியில் 150 அலுவலர்களை இடமாறுதல் செய்தா... ஆனா, 16 வருஷங்களா பொதுப்பிரிவில் இளநிலை உதவியாளரா இருக்கறவரை மட்டும் மாத்தல ஓய்...
“இவர், எந்த ஆட்சி வந்தாலும், உயர் அதிகாரிகளையே மிரட்டற அளவுக்கு, 'பவர்புல்'லா வலம் வரார்... இவருக்கு மாநகராட்சியின், 'துணை' அதிகாரி ஒருத்தரும் ஒத்தாசையா இருக்கார் ஓய்...
“இவா ரெண்டு பேரும் சேர்ந்து, ஊழியர்கள் இடமாறுதலுக்கு வசூல் வேட்டை நடத்தறா... அதோட, மாநகராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள்ல, அவாளுக்கு தேவையான ஆவணங்களை திருட்டுத்தனமா எடுத்து கொடுத்தும் சம்பாதிக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“நாகராஜ், குமரேசன் இதையும் கேட்டுட்டு கிளம்புங்க...” என நண்பர்களை இழுத்து பிடித்த அன்வர்பாயே, “அமைச்சரை கண்காணிக்கிறாங்க பா...” என்றார்.
“எதுக்கு வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலரான ஷாஜகான், த.வெ.க., அரசில் சிறுபான்மை நலத்துறை அமைச்சரா இருக்காரே... தொழிலதிபர், கல்வியாளர்னு இவருக்கு பல முகங்கள் இருக்குது பா...
“கடந்த காலங்கள்ல இவர் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், சிங்கப்பூர், மலேஷியா, இலங்கைன்னு பல நாடுகளுக்கு போயிட்டு வந்திருக்காரு... இந்த பயணங்கள்ல மத்திய, மாநில உளவுத்துறையினருக்கு பல சந்தேகங்கள் இருக்குது பா...
“கடந்த 2019ல், இலங்கையை சேர்ந்த சர்ச்சைக்குரிய முக்கிய புள்ளியை, சென்னையில் ஒரு ஹோட்டல்ல ஷாஜகான் சந்திச்சு பேசியிருக்காரு... மத்திய, மாநில உளவுத்துறையினர் சந்தேக நபர்களா வச்சிருக்கிறவங்களுடன் ஷாஜகான் தொடர்பில் இருக்காராம்...
“இதனால, அவரது செயல்பாடுகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் தீவிரமா கண்காணிச்சிட்டு இருக்காங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
பேச்சு முடியவும் பெரியவர்கள் கிளம்பினர்.
