PUBLISHED ON : செப் 14, 2011 12:00 AM

மாஜி மந்திரியின், 'உள்ளே - வெளியே' ஆட்டம்...!
''கைதிகள் எல்லாம் புலம்பறாங்க வே...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, விடுதலை செய்யலைன்னு வருத்தமா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''அதில்லை வே...
தமிழகத்துல இருக்கற பெரிய ஜெயில், சென்னையில இருக்கற புழல் ஜெயில் தான்... அதனால என்னவோ, எங்கெங்கேயோ இருக்கற கைதிகளையும், இங்க கொண்டு வந்து அடைச்சிடறாவ... கைதிகள் எண்ணிக்கை குறைய மாட்டேங்குது... ஜெயில் திறந்தப்ப வாங்கிய சமையல் பாத்திரங்கள் எல்லாம் ஓட்டை உடைசலாகி, பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்காம்... உடைஞ்ச தட்டுல சாப்பிட முடியாம, கைதிகள் எல்லாம் தவிக்கறாவ...
''இந்த விஷயத்தை, ஜெயில் அதிகாரிகள்ட்ட சொல்லிருக்காவ... அதுக்கு, 'ஒருத்தர், ரெண்டு பேருக்குன்னா, நாங்களே புதுசா வாங்கிடுவோம்... இவ்வளவு பேருக்கு சமையல் பாத்திரங்கள் வாங்க நாங்க எங்க போறது... அரசு தான், தேவையான வசதிகளை செய்து தரணும்'னு, சொல்லுதாங்க வே...'' என விளக்கினார் அண்ணாச்சி.
''முன்னாள் அமைச்சரின், 'உள்ளே - வெளியே' ஆட்டம் தூள் பறக்குதுங்க...'' என்றபடி, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
''புரியற மாதிரி சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''விழுப்புரம் மாவட்ட தி.மு.க., செயலர் பொன்முடி, நில மோசடி வழக்குல சிக்கி, ஜெயில்ல இருக்காருங்க... இதனால, அவரால உள்ளாட்சித் தேர்தல் வேலைகளை பார்க்க முடியாதுன்னு, கட்சித் தலைமை முடிவு செஞ்சு, வேறு சிலரிடம் பணிகளை ஒப்படைக்க இருந்ததுங்க...
''இந்த விஷயம் பொன்முடிக்கு தெரிஞ்சதும், 'உள்ளே இருந்தாலும், நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்'னு சொல்லி, விருப்ப மனுக்கள் கிடைக்கற இடம், பூர்த்தி செய்த மனுக்களை எங்கெங்கே, யார், யார்கிட்ட கொடுக்கணும்னு, விவரமா பட்டியல் தயாரிச்சு தலைமைக்கு அனுப்பி, அதுக்கு, 'ஓகே'வும் வாங்கிட்டாருங்க...
''தேர்தல் வேலைகளும் சுறுசுறுப்பா நடந்துட்டு இருக்கு... மாவட்ட செயலரின், 'உள்ளே - வெளியே' பராக்கிரம செயலைப் பார்த்து உடன்பிறப்புகள் அசந்துட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''கோர்ட் உத்தரவை ஓரங்கட்டிட்டு, வேலையை தீவிரப்படுத்தியிருக்காங்க பா...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.
''நீலகிரி மாவட்ட கலெக்டரா ஆனந்த் பாட்டில் இருந்தப்ப, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, அனுமதியில்லாத மற்றும் விதிமுறைகளை மீறிய பல கட்டடங்களை இடிச்சு தள்ளினாரு பா... இது சம்பந்தமா, இப்ப சுப்ரீம் கோர்ட்டுல வழக்கு நடந்துட்டு இருக்கு...''பாட்டிலுக்கு அப்பறம் வந்த பெண் கலெக்டர் எதையும் கண்டுக்கலை... அதனால, இடிக்கப்பட்ட கட்டடங்களை திரும்பவும் கட்டிட்டு இருக்காங்க... இதுக்கு, மேலிட அதிகாரிகள்ல இருந்து, உள்ளாட்சி நிர்வாகிகள் வரை, 'கவனிப்பு' நடந்திருக் குபா...'' எனக் கூறிவிட்டு, அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்; பெஞ்சில் அமைதி திரும்பியது.