PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, ''எல்லாருக்கும் ஏத்திட்டு, நம்மை மறந்துட்டாங்கன்னு புலம்புறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
''என்ன விவகாரமுங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
''சட்டசபையில், சமீபத்துல, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானிய கோரிக்கை விவாதம் முடிஞ்சு, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாங்க... இதுல, தமிழ் அறிஞர்கள் ஓய்வூதியத்தை, 4,500ல இருந்து, 7,500 ரூபாயாகவும், மூத்த தமிழ் அறிஞர்களுக்கான ஓய்வூதியத்தை, 3,500ல இருந்து, 7,500 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிச்சாங்க பா...
''ஆனா, அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ள பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மட்டும் உயர்த்தி அறிவிக்கல... இதனால, ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் வருத்தத்துல இருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
''ஊராட்சி செயலர்கள் திணறுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டத்தில், 385 கிராம ஊராட்சிகள் இருக்கு... கடைசியா, 1990, 1991ம் வருஷங்கள்ல தண்ணீர் டேங்க் ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்களை நியமிச்சாவ வே...
''இவங்கள்ல முக்கால்வாசி பேர் ஓய்வு பெற்று போயிட்டாவ... இந்த காலியிடங்களை நிரப்பவே இல்ல... சில பஞ்சாயத்துகள்ல மட்டும் ஓரிரு ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள் இருக்காவ வே...
''ஊராட்சிகள்ல பஞ்., தலைவர்கள் பதவியில இருந்தப்ப, தற்காலிக பணியாளர்களை நியமிச்சு, குடிநீர் வினியோகம், துாய்மை பணிகளை செஞ்சாவ... இந்த பணியாளர்களுக்கு, 'வவுச்சர்' போட்டு சம்பளமும் குடுத்தாவ வே...
''பஞ்., தலைவர்கள் பதவிக்காலம் முடிஞ்சு, இப்ப தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டுல நிர்வாகம் நடக்கு... பஞ்சாயத்து வரவு, செலவு எல்லாம் ஆன்லைனுக்கு மாறிட்டதால, வவுச்சர் எழுதி பணம் எடுக்க முடியல வே...
''இதனால, தற்காலிக பணியாளர்கள் பலரும் நின்னுட்டாவ... ஆட்கள் பற்றாக்குறையால குடிநீர் சப்ளையில குளறுபடி, சாக்கடை, கழிப்பறைகள் துாய்மை, பொது சுகாதார பணிகளை மேற்கொள்ள முடியாமலும், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் தர முடியாமலும், சேலம் மாவட்டத்துல இருக்கிற தனி அலுவலர்கள் தவியா தவிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''போன வேகத்துல திரும்பி வந்துட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில், 22 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... இதுல, 40க்கும் மேற்பட்ட உளவுத்துறை போலீசார் இருக்காங்க...
''இதுல இருந்த ஒன்பது எஸ்.எஸ்.ஐ.,க்கள் போன வருஷ கடைசியில, சர்வீஸ் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று, போலீஸ் ஸ்டேஷன் பணிக்கு போனாங்க... மூணு மாச பயிற்சிக்கு பிறகு, வேற வேற ஸ்டேஷன் பணிக்கு போறது வழக்கமுங்க...
''ஆனா, இப்படி போன ஒன்பது பேர்ல, ஆறு பேர் மறுபடியும் உளவுத்துறைக்கே திரும்பி வந்துட்டாங்க... இவங்க, நீண்டகாலம் உளவுத்துறையில் இருந்ததால, வசூல் வேட்டையில் அனுபவம் மிக்கவங்களாம்...
''அதிகாரிகளுக்கும் கரெக்டா பங்கு குடுத்துட்டு இருந்ததால, அவங்களை திரும்பவும் இங்கயே வரவழைச்சுட்டாங்க... இதுக்கு இடையில, தனக்கு சரியானபடி உளவு தகவல்கள் வரணும்னு தாம்பரம் கமிஷனரக அதிகாரி, இன்ஜினியரிங் படிச்சிருக்கிற, 10 போலீசாரை தனியா உளவு பணிக்கு நியமிச்சிருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.
