/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாவட்ட கலெக்டராகும் மாநகராட்சி கமிஷனர்!
/
மாவட்ட கலெக்டராகும் மாநகராட்சி கமிஷனர்!
PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM

''மிரட்டல் காரணமா, கோர்ட்டுக்கு போகாம இருக்காங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''என்ன விவகாரம்ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டங்களின்படி, சென்னை போன்ற பெருநகர மாநகராட்சிகளில் உதவி செயற்பொறியாளர்கள் அஞ்சு வருஷம் வேலை பார்த்திருந்தா, அவங்களுக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு தரணும்... ஆனா, இந்த விதிமுறையில், '395 ஏ'ன்னு புதுசா ஒரு பிரிவை உருவாக்கி, 2023ம் வருஷம் பணியில் சேர்ந்தவங்களுக்கும் பதவி உயர்வு வழங்குறாங்க பா...
''அதுவும் சும்மா இல்ல... 'கவனிப்பு' இருந்தா தான், பதவி உயர்வு வழங்குறாங்க பா... இதனால பாதிக்கப்பட்டவங்க, நீதிமன்றத்தை நாடலாமான்னு ஆலோசனை நடத்தியிருக்காங்க... ஆனா, 'கோர்ட்டுக்கு போனா நடக்கிறதே வேற'ன்னு முக்கிய புள்ளியிடம் இருந்து மிரட்டல் வரவே, பம்மிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரியை கைக்குள்ள போட்டுண்டு, ஆடறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றிய துணை அதிகாரி ஒருத்தர், போதையில தான் ஆபீசுக்கே வரார்... 'டபுள் மீனிங்'லயே பேசறதால, இவரை பார்த்தாலே, பெண் ஊழியர்களும், 100 நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்களும் தெறிச்சு ஓடறா ஓய்...
''கருணாநிதி பெயரிலான வீடு கட்டும் திட்டத்தில், 300 சதுர அடிக்குள்ள தான் வீடு கட்டணும்கறது விதி... ஆனா, அதிகாரியை கவனிச்சுட்டா, எவ்வளவு பெரிய வீடாகவும் கட்டிக்கலாம் ஓய்...
''இந்த அதிகாரியின் மனைவி, ஆந்திராவுல, திருப்பதி ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநரா இருக்காங்க... இதனால, துறையின் அதிகாரிகள் பலருக்கும் ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்காவா ஏற்பாடு பண்ணி குடுத்துடறார் ஓய்...
''திருப்பதி லட்டு பிரசாதத்தை ஆபீஸ்ல எல்லாருக்கும் குடுத்தும், 'ஐஸ்' வச்சிருக்கார்... ஊராட்சி செயலர்களிடம் எல்லாம், 'நான் சொல்றபடி தான் பில் போடணும்... பெரிய அதிகாரி தயவுல இன்னும் கொஞ்ச நாள்ல, இந்த ஒன்றியத்துக்கே தணிக்கை அதிகாரியா வரப்போறேன்'னு மிரட்டியே வசூல் பண்றார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஜெயகுமார் தயவுல பழனிக்கு வாழ்வுதான்...'' என, மொபைல் போனை வைத்தபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''கலெக்டராக போறாரு வே...'' என்றார்.
''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனரா ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுகபுத்ரா இருக்காரு... ஆண் அதிகாரியான இவர் வந்த பிறகு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் துவக்கப்பட்ட பேட்டை லாரிகள் முனையம், காந்தி மார்க்கெட், அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம்னு எதையுமே செயல்பாட்டுக்கு கொண்டு வரல வே...
''தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்றிதழ் வழங்கியதுல, அதிகாரிகள் செய்த முறைகேட்டுலயும் நடவடிக்கை எடுக்கல... ஆனா, நெளிவு சுளிவுகளை கத்துக்கிட்டு, மாவட்ட பொறுப்பு வகிக்கும், தன் துறையின் முக்கியப் புள்ளிக்கு நெருக்கமாகிட்டாரு வே...
''முக்கிய புள்ளி தயவுல, சீக்கிரமே திருச்சிக்கு கலெக்டராக போறாரு... இப்பவே, பெட்டி, படுக்கையை கட்டிட்டு இருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

