/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
லட்சங்களில் மாமூல் வாங்கும் அதிகாரியின் டிரைவர்!
/
லட்சங்களில் மாமூல் வாங்கும் அதிகாரியின் டிரைவர்!
PUBLISHED ON : ஏப் 22, 2025 12:00 AM

நண்பர்கள் நடுவில் அமர்ந்தபடியே, ''உதவியாளர் சொல்றது தான் நடக்கறது ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''விழுப்புரம் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கற உயர் அதிகாரியின் உதவியாளர், மாவட்ட நிர்வாகத்துல நடக்கற பல விஷயங்களை, அதிகாரி கவனத்துக்கே கொண்டு போறது இல்ல...
''உதவியாளர், தன்னையே உயர் அதிகாரி மாதிரி நினைச்சுக்கறார்... உயர் அதிகாரியை பார்க்கறதை விட, 'உதவி'யை பார்த்துட்டாலே பல காரியங்கள் முடிஞ்சுடும் ஓய்...
''இதனால, 'உதவியாளரை உயர் அதிகாரி கண்காணிச்சு கண்டிச்சு வைக்கணும்... இல்லேன்னா, உயர் அதிகாரியை ஏதாவது வம்புல சிக்க வச்சிடுவார்'னு கலெக்டர் ஆபீஸ் ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''லட்சாதிபதிக்கு ஒரு டீ குடுங்க...'' என, நண்பரை உபசரித்த அந்தோணிசாமியே, ''இருக்கும் இடம் தெரியாம இருக்காங்க...'' என, அடுத்த மேட்டரை தொடர்ந்தார்...
''கோவை லஞ்ச ஒழிப்பு துறையில் மூணு பெண் அதிகாரிகள், பல வருஷமா பணியில இருக்காங்க... இவங்க, எந்த புகார்கள் மீதும் நடவடிக்கையே எடுக்க மாட்டேங்கிறாங்க... சில வழக்குகள்ல மேல்நடவடிக்கையும் எடுக்கிறது இல்லைங்க...
''துறையின் உயர் பெண் அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், அவங்களையும் குழப்பி, 'ஆப்' பண்ணிடுறாங்க... உயர் அதிகாரியும் இங்க வந்து நாலு வருஷமாகிடுச்சுங்க...
''மாவட்டத்துல பல துறைகள்லயும் லஞ்சம், ஊழல் தலைவிரிச்சு ஆடுதுங்க... ஆனா, கோவையில் லஞ்ச ஒழிப்பு துறைன்னு ஒண்ணு இருக்கான்னே தெரியல... 'நம்மை எல்லாம், மூணு வருஷத்துக்கு ஒருமுறை மாத்திடுறாங்களே... இவங்களுக்கு எல்லாம் டிரான்ஸ்பரே போட மாட்டாங்களா'ன்னு போலீஸ் துறையிலயே பலரும் ஆச்சரியப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''லதா, விஜயலட்சுமி, எழிலரசி சொல்றது தான் திவ்யாவுக்கு வேதவாக்கு... மத்தவங்க பேச்சை காதுலயே போட்டுக்க மாட்டாங்க வே...'' என, மொபைல் போனில் யாரிடமோ புலம்பிவிட்டு, 'கட்' செய்த பெரியசாமி அண்ணாச்சி, ''மாசம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்காருல்லா...'' என்றார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வருவாய் துறை அதிகாரியின் அரசு கார் டிரைவரை தான் சொல்றேன்... இந்த அதிகாரியின் கட்டுப்பாட்டுல வர்ற ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி தாலுகாக்கள்ல மணல் கொள்ளை மானாவாரியா நடக்கு வே...
''தகவல் கிடைச்சு, அதிகாரி சோதனைக்கு கிளம்பினார்னா, அவரது டிரைவர், மணல் கடத்தல் கும்பலுக்கு போன் அடிச்சு, எச்சரிக்கை பண்ணிடுதாரு... அவங்களும் தப்பிச்சு ஓடிடுதாவ வே...
''இதுக்காக, டிரைவருக்கு மணல் கடத்தல் கும்பல் மாசம், 2 லட்சம் ரூபாய் வெட்டுது... இது போக, தாசில்தார்களுக்கு போனை போட்டு, பல காரியங்களை முடிச்சு குடுத்து, டிரைவர் ஆயிரங்களை அசால்டா சம்பாதிக்காரு வே...
''தான் பணிபுரியும் அதிகாரியின் ஆபீசுக்கு வர்ற மக்களிடமும், 'உங்க காரியத்தை முடிச்சு தர்றேன்'னு சொல்லி, வசூல் வேட்டை நடத்துதாரு... 'இந்த பூனைக்கு யார் மணி கட்டுறது'ன்னு தெரியாம, அந்த ஆபீஸ் ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என முடித்த அண்ணாச்சியே, ''குமரன் இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்றபடியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.