/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சீனியருக்கு வந்த சிக்கலால் ஜூனியர் உற்சாகம்!
/
சீனியருக்கு வந்த சிக்கலால் ஜூனியர் உற்சாகம்!
PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''கமல் பாணியில விஜயும் வந்துடுவார்னு, 'கமென்ட்' அடிச்சிட்டு இருக்காங்க...'' என்றபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''புரியிற மாதிரி சொல்லும் வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கடந்த, 2019ல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரா, தி.மு.க., நடத்திய பேரணியில் பங்கேற்க, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுக்கு தி.மு.க., அழைப்பு விடுத்துச்சு... குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறதா சொன்ன கமல், கடைசியில தி.மு.க., பேரணியில் பங்கேற்காம நழுவிட்டாருங்க...
''இப்ப, வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரா, சமீபத்துல தி.மு.க., கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்துல நடுநாயகமா கமல் உட்கார்ந்திருந்தார்... 2019ல் கமலை நேர்ல சந்திச்சு, அவருக்கு கைகுலுக்கி அழைப்பு விடுத்தது, தி.மு.க., தலைமை நிலையச் செயலரான பூச்சி முருகன் தான்...
''இப்ப, தி.மு.க., நடத்திய அனைத்து கட்சி கூட்டத்துக்கு, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலர் ஆனந்தை நேர்ல பார்த்து, கைகுலுக்கி அழைப்பு விடுத்ததும் பூச்சி முருகன் தான்... ஆனாலும், அனைத்து கட்சி கூட்டத்தை த.வெ.க., புறக் கணிச்சிடுச்சு...
''இது பத்தி அறிவாலய நிர்வாகிகள் சிலர், 'பூச்சி முருகன் கைராசிப்படி, எதிர்காலத்துல த.வெ.க., வும் நம்ம கூட்டணிக்கு வந்துடும்'னு பேசிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''உதயநிதி கையில பொறுப்பை ஒப்படைச்சிட்டார் ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''என்ன விஷயம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிர்ணயத்துல, 150 கோடி ரூபாய் முறைகேடு நடந்துட்டதால, தி.மு.க.,வை சேர்ந்த மேயர் இந்திராணி ராஜினாமா பண்ணிட்டாங்கல்லியோ... இதுபோக அஞ்சு மண்டல தலைவர்கள், இரண்டு நிலைக்குழு தலைவர்களும் ராஜினாமா பண்ணியிருக்கா ஓய்...
''புது மேயர் தேர்வுல, மாவட்ட அமைச்சர் களான மூர்த்தி, தியாக ராஜன் இடையே பனிப்போர் நடக்கறது... இதனால, மேயர் தேர்வு பொறுப்பை மகன் உதயநிதியிடம் முதல்வர் ஒப்படைச்சுட்டார் ஓய்...
''உலக ஹாக்கி போட்டிகள் மதுரையில நடக்க இருக்கறதால, அது சம்பந்தமான பணிகளை பார்வையிட உதயநிதி, இன்னைக்கு அல்லது நாளை மதுரை வரார்... அப்ப, 'நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, மதுரை மேயரை தேர்வு செய்வார்... இதுல, மூர்த்தி தரப்புக்கே வாய்ப்பு அதிகம்'னு அந்த கட்சிக்காரா சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சிக்கல்ல சீனியர் மாட்டிக்கிட்டதுல, ஜூனியர் தரப்புக்கு கொண்டாட்டமா இருக்குது பா...'' என்ற அன்வர் பாயே தொடர்ந்தார்...
''தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வுல மண்டல வாரியா பொறுப்பாளர்களை நியமிச்சிருக்காங்களே... இதுல, டெல்டா மாவட்டங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட தொகுதிகளின் பொறுப்பாளரா, மூத்த அமைச்சர் நேரு இருக்காரு பா...
''இதுல, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள், அமைச்சர் மகேஷ் கட்டுப்பாட்டில் வரும்னு அவரது ஆதரவாளர்கள் நினைச்சிருந்தாங்க... ஆனா, ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களையும் நேருவிடம் முதல்வர் குடுத்துட்டாரு பா...
''இதனால, சட்டசபை தேர்தல்ல சீட் தர்றதுல நேரு கையே ஓங்கிடும் என்பதால, மகேஷ் தரப்பு விரக்தியில இருந்துச்சு... 'இப்ப, பணி நியமன முறைகேடு புகார்ல நேரு சிக்கிட்டதால, இனி அடக்கி வாசிப்பார்'னு மகேஷ் தரப்பு உற்சாகத்துல இருக்குது பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

