PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM

''வேலியே பயிரை மேய பார்த்த கதையை கேளுங்க...'' என, 'லீடு' தந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்ட ஆயுதப்படை ஏட்டு ஒருத்தர், போலீஸ் குடியிருப்புல இருக்காரு... சமீபத்துல, இவரது மனைவி, வீட்டு வராண்டாவுல நின்னு, உறவினரிடம் மொபைல் போன்ல பேசிட்டு இருந்தாங்க...
''அதே குடியிருப்புல வசிக்கிற போலீஸ்காரர் ஒருத்தர், புல் மப்புல அங்க வந்து, அந்த பெண்ணின் வாயை துணியால அமுக்கி, மாடிக்கு துாக்கிட்டு போக பார்த்திருக்காரு... அந்தம்மா, அவரை தள்ளிட்டு தப்பிச்சிட்டாங்க...
''இது சம்பந்தமா, பெரம்பலுார் போலீஸ்ல ஏட்டு மனைவி புகார் குடுத்தாங்க... ஆனா, உள்ளூர் ஆளுங்கட்சியினர் சிபாரிசால, காமுக போலீஸ்காரர் மேல வழக்கு பதியாம இன்ஸ்பெக்டர் இழுத்தடிச்சாருங்க...
''ஏட்டு தரப்பு, சென்னையில டி.ஜி.பி., அந்தஸ்துல இருக்கிற பெண் அதிகாரியிடம் விஷயத்தை எடுத்துட்டு போயிடுச்சு... அவங்க, இன்ஸ்பெக்டரை போன்ல பிடிச்சு, 'நடவடிக்கை எடுக்கலன்னா உங்களை சஸ்பெண்ட் பண்ணிடுவேன்'னு மிரட்டியதும் தான், காமுக போலீஸ் மேல எப்.ஐ.ஆர்., போட்டு, 'உள்ள' தள்ளினாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''என்கிட்டயும் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சீக்கிரம் சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மதுரை நகர் ஆயுதப்படை போலீசாருக்கு தினமும் ஏதாவது ஒரு பாதுகாப்பு பணி இருக்கும்... இதனால, வார விடுமுறை, அவசர லீவ் எல்லாம் அவாளுக்கு எட்டாக்கனி தான் ஓய்...
''இந்தச் சூழல்ல, சமீபத்துல பொறுப்புக்கு வந்த பெண் அதிகாரி, 'இனி லீவ் வேணும்னா, நாலு நாளைக்கு முன்னாடியே விண்ணப்பிக்கணும்... கார்த்தால வந்து, லீவ் கேட்டு தலையை சொறியப்டாது'ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க...
''அதே நேரம், மருத்துவ சிகிச்சை, உறவினர் இறப்புன்னா மட்டும் தான் அவசர விடுப்புக்கு அனுமதின்னும் சொல்லிட்டாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இது நியாயம் தானே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சி, ''அதிகாரியை கண்டிச்சு, பெண் தலைவர் வெளிநடப்பு செஞ்ச கதையை கேளுங்க வே...'' என்றார்.
''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரா, அ.தி.மு.க.,வை சேர்ந்த சத்தியபாமா இருக்காங்க... இவங்க தன்னோட வார்டுல, சிமென்ட் பெஞ்ச் அமைக்க, 42 லட்சம் ரூபாய் ஒதுக்கும்படி கேட்டாங்க வே...
''அதுக்கு ஊராட்சிக்குழு செயலர் முரளிக்கண்ணன், 'மாநில நிதிக்குழு மானியத்துல அந்த பணியை செய்ய முடியாது'ன்னு மறுத்துட்டாராம்... இந்த மாதிரி தலைவர் கேட்ட பல விஷயங்களை செயலர் மறுத்துட்டாரு வே...
''அதுவும் இல்லாம, தலைவர் அரசு வாகனத்தை இஷ்டம் போல சொந்த விஷயங்களுக்கு உபயோகப்படுத்துறாங்கன்னு, அதன் டிரைவரை கூப்பிட்டும் செயலர் கண்டிச்சிருக்காரு...
''இந்த கடுப்புல தான், சமீபத்துல நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்துல, 'செயலர் தன்னிச்சையா செயல்படுதாரு... வளர்ச்சி பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்குறது இல்ல'ன்னு சரமாரியா குற்றம்சாட்டி சத்தியபாமா, வெளிநடப்பு பண்ணிட்டாங்க வே...
''மாவட்ட ஊராட்சிக் குழுவுல அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மெஜாரிட்டியா இருந்தும், செயலர் பக்கம் நியாயம் இருந்ததால, கவுன்சிலர்களே போய் தலைவரை சமாதானப்படுத்தி, மறுபடியும் கூட்டத்தை தொடர்ந்து நடத்துனாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
