/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மகளை மீட்டு தரக்கோரி ஐகோர்ட்டில் தாய் மனு
/
மகளை மீட்டு தரக்கோரி ஐகோர்ட்டில் தாய் மனு
PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமியின் பெற்றோர், வாலிபருக்கு எதிராக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர்.
அப்போது, தங்களை இன்ஸ்பெக்டர் தாக்கியதாகவும், வாலிபரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பேசியதாக வீடியோ வெளியானது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தன் மகளை, சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு தரக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'உரிய இழப்பீடும், தங்களுக்கு போதிய பாதுகாப்பும் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' எனவும் கோரிஉள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, ''பாதிக்கப்பட்ட சிறுமி, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை. தற்போது அவர் பெற்றோருடன் உள்ளதால், மனு விசாரணைக்கு உகந்ததல்ல,'' என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''பாலியல் புகாரளிக்க சென்ற சிறுமியின் பெற்றோர், போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதற்கு யார் பொறுப்பு?'' என்றார்.
இதையடுத்து, இந்த மனு தொடர்பாக, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 24ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

