/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'ஓசி' சாப்பாட்டுக்கு போலீசை ஏவும் அதிகாரி!
/
'ஓசி' சாப்பாட்டுக்கு போலீசை ஏவும் அதிகாரி!
PUBLISHED ON : ஜன 13, 2024 12:00 AM

''ஆளாளுக்கு பட்டியலை நீட்டறதால, நியமனம் தள்ளி போறது ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலுக்கு, அறங்காவலர் குழு நியமனம் செய்றதை தான் சொல்றேன்... தொகுதி அமைச்சர் என்ற முறையில, சாமிநாதன் ஒரு பட்டியலையும், மாவட்ட அமைச்சர் என்ற முறையில, முத்துசாமி ஒரு பட்டியலையும் அதிகாரிகளிடம் குடுக்கறா ஓய்...
''யார் பரிந்துரையை ஏத்துக்கறதுன்னு தெரியாம, அறங்காவலரை நியமிக்காம அதிகாரிகள், 'கம்'முன்னு இருக்கா... 'அவா ரெண்டு பேருமே உட்கார்ந்து பேசி, ஒரு பட்டியலை குடுத்தா, அறங்காவலரை நியமிச்சுடலாம்... ஆனா, அவா, 'ஈகோ' பார்த்துண்டு, அதிகாரிகளை படுத்தி எடுக்கறா'ன்னு, கோவில் ஊழியர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வட சென்னை தொகுதியில, தேர்தல் பணிகளை ஆரம்பிச்சிட்டாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சியில, யாருப்பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க., சார்புல, வடசென்னையில களம் இறங்க, அமைப்பு செயலர் ராயபுரம் மனோ, முன்னாள் எம்.எல்.ஏ.,வான வி.எஸ்.பாபு, மாவட்டச் செயலர் வெங்கடேஷ் ஆகியோர் ஆர்வமா இருக்காவ...
''இதுல, மனோவிடம், 'உங்களுக்கு போட்டியிட விருப்பமா'ன்னு பழனிசாமி கேட்டிருக்காரு... அவரும், 'நீங்க உத்தரவு போட்டா, களம் இறங்குதேன்'னு பவ்யமா சொல்லியிருக்காரு வே...
''இதனால, சீட் தனக்கு தான் என்ற நம்பிக்கையில, தொகுதியில பூர்வாங்க பணிகளை துவங்கிட்டாரு... குறிப்பா, பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள்ல தீவிரமா இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கிட்டயும் ஒரு வடசென்னை தகவல் இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி
''சீக்கிரம் சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''வடசென்னை போக்குவரத்து போலீஸ்ல ஒரு அதிகாரி இருக்காருங்க... இவரது வீடு, திருவேற்காட்டுல இருக்குதுங்க... அதிகாரியின் கட்டுப்பாட்டுல ஐந்து போலீஸ் ஸ்டேஷன்கள் வருதுங்க...
''இந்த ஸ்டேஷன் எல்லைகள்ல எந்தெந்த ஹோட்டல்ல, என்னென்ன ஐட்டங்கள் ஸ்பெஷல் என்பது இவருக்கு அத்துப்படிங்க...
''இதனால, தனக்கு கீழ பணியாற்றும் போலீசாரை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அனுப்பி வைக்கிறதை விட, கடை கடையா போய், பிரியாணி, மட்டன், சிக்கன், நண்டு, இறால்னு அசைவ உணவு ஐட்டங்களை, 'ஓசி' பார்சல் வாங்கி, திருவேற்காட்டுல இருக்கிற வீட்டுல கொண்டு போய் கொடுக்க சொல்றாருங்க...
''அதுவும், மதியம் 2:00 மணிக்குள்ள இந்த சாப்பாடு ஐட்டங்கள் வீட்டுக்கு போயிடணும்... இல்லன்னா, அதிகாரி கோபத்துக்கு போலீசார் ஆளாகணும்...
''அதே நேரம், இப்படி அடிக்கடி ஓசி சாப்பாடு வாங்க வர்ற போலீசாரை, ஹோட்டல் ஊழியர்கள் மட்டமா பார்க்கிறாங்க... இதனால, போலீசார் ரொம்பவே வேதனைப்படுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''சீனிவாசன், உம்ம டீக்கும், வடைக்கும் சேர்த்து காசு கொடுத்தாச்சு வே...'' என, நண்பரிடம் கூறியபடியே அண்ணாச்சி எழ, மற்ற வர்களும் நடையை கட்டினர்.