PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “போலீஸ்காரர் அலப்பறைக்கு அளவே இல்லாம போயிடுச்சு பா...” என்றார், அன்வர்பாய்.
“எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ராமநாதபுரத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருத்தர், 'நீச்சல் பயிற்சி எடுத்துக்கப் போறேன்'னு சொல்லி, மதுரைக்கு மாற்றுப்பணியா வந்துட்டாரு பா...
''வந்தவர், மதுரையில இருக்கிற சில நீச்சல் குளங்களை தன் கட்டுப்பாட்டுல கொண்டு வந்துட்டாரு... உள்ளூர் அமைச்சரின் சமுதாய ரீதியிலான ஆதரவும் அவருக்கு இருக்கிறதால, நீச்சல் குளங்கள்ல அவர் வைக்கிறது தான் சட்டம்னு ஆகிடுச்சு பா...
''நீச்சல் குளங்களுக்கு உரிமையாளர் போல நடந்துக்கிறதும் இல்லாம, பயிற்சிக்கான கட்டணத்தையும் இஷ்டத்துக்கு வசூலிக்கிறாரு... சாதாரண ஆளா மதுரைக்கு வந்தவர், இப்ப செல்வச் செழிப்புல கொழிக்கிறாரு...
''இவர் மேல ஏகப்பட்ட புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு போனாலும், அமைச்சரின் ஆசி இருக்கிறதால, அவர் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அடிக்கடி ஆய்வு பண்றதால, வெறுத்து போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள்ல, 274 ஊராட்சிகள் இருக்கு... இங்க மத்திய, மாநில அரசு நிதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தறா ஓய்...
''இந்த பணிகளை ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசின் உயர் அதிகாரிகள் குழுவினர் அடிக்கடி வரா... இவா எளிதா வந்துட்டு போறதுக்கு வசதியா, சென்னை புறநகர்ல இருக்கற குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு மட்டும், அவாளை காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் அழைச்சுண்டு போறா ஓய்...
''குறிப்பா, குன்றத்துார் அருகே கரசங்கால் ஊராட்சியில் இருக்கிற பசுமை பூங்காவை அடிக்கடி வந்து ஆய்வு பண்றா... ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் குழு ஆய்வுக்கு வர்றச்சே, 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாறது ஓய்...
''இதை, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் தான் செய்ய வேண்டியிருக்கு... இந்த செலவுகளுக்காக, அரசு தரப்புல இருந்து 1 பைசா கூட தர மாட்டேங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஆதரவை வாபஸ் வாங்கிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வைப்பாற்றுல, அப்பகுதியைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சட்டவிரோதமா மணல் அள்ளிட்டு இருந்தாங்க... கடந்த நாலு வருஷமா அவங்களுக்கு தொகுதி ஆளுங்கட்சி புள்ளி, ஆதரவு தந்தாருங்க...
''இப்ப, மாட்டு வண்டிகள்ல மணல் அள்ளுறவங்க மீது போலீசார் கெடுபிடியா வழக்கு போடுறாங்க... ஏன்னா, முக்கிய புள்ளி புதுசா ரெண்டு இடங்கள்ல, 'எம் - சாண்ட்' குவாரி திறந்திருக்காருங்க...
''இதனால, 'எம் - சாண்ட் விற்பனை பாதிக்கப்படுறதால, அவரது உத்தரவுப்படியே போலீசார் வழக்கு போடுறாங்க'ன்னு மாட்டு வண்டிக்காரங்க புலம்புறாங்க... 'தேர்தல் நெருங்குற நேரத்துல, மாட்டு வண்டி தொழிலாளர்களை பகைச்சுக்க வேண்டாம்'னு மேலிடமே உத்தரவு போட்டும், போலீசாரை விட்டு வழக்கு போடுறதால, முக்கிய புள்ளி மீது மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''மார்கண்டேயன் இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
