/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலீஸ் கமிஷனர் நோக்கத்தை கெடுக்கும் அதிகாரி!
/
போலீஸ் கமிஷனர் நோக்கத்தை கெடுக்கும் அதிகாரி!
PUBLISHED ON : நவ 21, 2025 12:00 AM

''நே ர்மையான அதிகாரியை சிக்க வச்சிருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் குப்பண்ணா.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில், சமீபத்துல, கணக்குல வராத, 2.51 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தா... இது சம்பந்தமா, சரவணபாபு கட்டுப்பாட்டில் இருக்கும் நாலு மாவட்டங்களை சேர்ந்த யாரும் புகார் தரல ஓய்...
''சென்னையில் இருந்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தந்தவா, 'சரவணபாபு அறையில், அவருக்கு எதிர்ல இருக்கற அலமாரியில் பண கவர்கள் இருக்கு'ன்னு சொல்லியிருக்கா... இதன் அடிப்படையில் நடத்திய சோதனையில், ஆறு கவர்கள்ல இருந்த, 2.51 லட்சம் ரூபாயை போலீசார் எடுத்தா ஓய்...
''இது பத்தி தீயணைப்பு துறை ஊழியர்கள் என்ன சொல்றான்னா, 'எங்க துறையில் நேர்மையான அதிகாரிகளால பாதிக்கப்படும் சிலர், அவாளை பழிவாங்க இந்த மாதிரி வேலைகளை செய்யறா... அப்படித்தான், சரவணபாபுவையும் மாட்டி விட்டிருக்கா'ன்னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முதல்வர் வீட்டு பணியாளர்களின் அடாவடி தாங்க முடியலைங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னையில், முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வேலை பார்க்கிற, 20க்கும் மேற்பட்டவங்களுக்கு, சைதாப்பேட்டை தாடண்டர் நகர்ல இருக்கிற வீட்டுவசதி வாரிய குடியிருப்புல, பொது ஒதுக்கீட்டில் வீடுகள் ஒதுக்கி குடுத்திருக்காங்க... இவங்க, மற்ற குடியிருப்புவாசிகளை மிரட்டுற மாதிரி நடந்துக்கிறாங்க...
''பார்க்கிங்ல வண்டியை நிறுத்துறதுல பிரச்னை பண்றது, கண்ட இடங்கள்ல குப்பையை வீசுறதுன்னு அடாவடி பண்றாங்க... யாராவது தட்டிக் கேட்டா, 'நாங்க எங்க வேலை பார்க்கிறோம் தெரியுமா'ன்னு மிரட்டுறாங்க... இவங்க அடாவடி பத்தி, பக்கத்து குடியிருப்புகள்ல வசிக்கிறவங்க, அரசுக்கு புகார் அனுப்பியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''போலீஸ் கமிஷனரின் நல்ல நோக்கத்தை கெடுத்துட்டு இருக்காரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை போலீஸ் கமிஷனர் அருண், பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் மனுக்கள் வாங்கி, நடவடிக்கை எடுத்துட்டு இருக்காரு... இதனால, எல்லாரும் கமிஷனரிடம் மனுக்கள் குடுத்து, தங்களது குறைகளை தீர்க்க ஆர்வமா வர்றாவ வே...
''ஆனா, பொது மக்கள், போலீசாரிடம் மனுக்களை வாங்கி, கமிஷனர் மேஜைக்கு எடுத்துட்டு போகும் பொறுப்புல இருக்கிற அதிகாரி, கமிஷனருக்கு நேர்மாறா இருக்காரு... குறிப்பா, போலீசார் தர்ற மனுக்களை தட்டிக்கழிச்சிடுதாரு வே...
''காவலர் குடியிருப்பு, இடமாறுதல் கேட்கிற மனுக்களை எல்லாம் எடுத்துட்டு யாராவது வந்தா, அவங்களை விரட்டாத குறையா அனுப்பிடுதாரு... இதே மாதிரி, பொதுமக்கள் சிலரது மனுக்களையும் ஏதாவது குற்றம், குறை சொல்லி திருப்பி அனுப்பிடுதாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
எதிரில் வந்தவரை நிறுத்திய அன்வர்பாய், ''என்ன வளவன்... ஒரு வாரமா ஆளையே பார்க்க முடியல... ஊருக்கு போயிருந்தீங்களா பா...'' என விசாரித்து வம்பளக்க, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.

