/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மோசடி வழக்கை மூடி மறைக்கும் போலீசார்!
/
மோசடி வழக்கை மூடி மறைக்கும் போலீசார்!
PUBLISHED ON : அக் 13, 2024 12:00 AM

''முன்னாள் அமைச்சரை வச்சுக்கிட்டே, ஆளுங்கட்சியை விமர்சனம் பண்ணியிருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சிறுபான்மையினர் நடத்தும் உயர்கல்வி நிலையங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தற்போதைய நிலவரம் மற்றும் வாய்ப்புகள்குறித்து, திருச்சி செயின்ட்ஜோசப் கல்லுாரியில், சமீபத்துல கருத்தரங்கம் நடத்தி இருக்காங்க... 'சிறுபான்மையினர் உயர் கல்வி நிலையங்களின்கூட்டு சங்கம்' சார்பில் தான் இந்த கருத்தரங்கம் நடந்துச்சுங்க...
''இதுல, சமீபத்துல அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் கலந்துக்கிட்டாரு... அப்ப, 'தி.மு.க., ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி, நமக்கான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர்றதா வாக்குறுதி தந்திருந்தாங்க... ஆனா, ஆட்சிக்கு வந்து, 40 மாசமாகியும், வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஆட்சியாளர்கள் சிறு துரும்பைக்கூட கிள்ளி போடல'ன்னு பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் ரொம்ப வருத்தப்பட்டு பேசியிருக்காங்க...
''இதனால, மேடையிலஇருந்த மனோ தங்கராஜுக்கு தர்மசங்கடமாகிடுச்சு... அவர் பேசுறப்ப, 'உங்க கோரிக்கைகளை நிறைவேற்ற, தி.மு.க., ஆட்சி எப்போதும் உறுதுணையா இருக்கும்'னு பேசி சமாளிச்சிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வழக்கு தகவல்களைதர மாட்டேங்காவ வே...''என, அடுத்த தகவலுக்குமாறிய பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''மதுரை சிட்டியில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்கள்ல பதிவாகும் வழக்குகள்பற்றிய தகவல்களை, கமிஷனர் ஆபீஸ்ல இருந்து, 'இ - மெயில்'லபத்திரிகையாளர்களுக்கு அனுப்புவாவ... இதுல, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுக்குள் வச்சிருக்கிறதை காட்டிக்கிறதுக்காக, அது தொடர்பான வழக்கு தகவல்களை உடனுக்குடன் அனுப்பிடுதாவ வே...
''அதே நேரம், முக்கிய பிரமுகர்கள், பிரச்னைக்குரிய விவகாரங்கள் குறித்த வழக்குகள் பற்றிய தகவலை தராம மறைச்சிடுதாவ... குறிப்பா, மூதாட்டியை தாக்கியதா, துணை மேயரான மார்க்சிஸ்ட் கட்சியின் நாகராஜன் மீது வழக்கு போட்டது, பள்ளி, ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போன்ற விபரங்களை பத்திரிகைக்கு தெரிவிக்கல...
''நகரில் குற்றங்கள் குறைவா நடக்குதுன்னு காட்டிக்கவே, இதுபோன்ற வழக்குகளை மறைச்சிடுதாவன்னு போலீசாரே சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''இதே மாதிரி தகவல் என்கிட்டயும் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில்ல, ரியல் எஸ்டேட் தொழில் நடத்தறஒருத்தர், பல கோடி ரூபாய்மதிப்பிலான இடத்துக்குபோலி ஆவணம் தயாரிச்சு, பத்திரப்பதிவு செய்து, வங்கி கடன் வாங்கி மோசடி பண்ணிட்டார்... வங்கி தந்த புகாரின்படி, வழக்கு பதிவு பண்ணி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினா ஓய்...
''இதுல, இந்த மோசடியில, 20க்கும் மேற்பட்டவா இருந்ததுதெரிய வந்துது... இது சம்பந்தமா, ஓய்வு பெற்ற தாசில்தார், இப்ப பணியில இருக்கற வருவாய்த் துறை ஊழியர்கள் உட்பட ஏழு பேரை கைது செய்தா ஓய்...
''ஆனா, இந்த கைது விபரங்களை பத்திரிகைகளுக்கு தராம மறைச்சுட்டா... இந்த வழக்கு பத்தி கேட்டாலே, எல்லாரும் பூசி மெழுகறா மாதிரி பேசறா... இதனால, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேலயும் சந்தேகம் வரது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் புறப்பட்டனர்.