/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
காங்கிரசார் புகார்களை கண்டுக்காத போலீசார்!
/
காங்கிரசார் புகார்களை கண்டுக்காத போலீசார்!
PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''முதல்வர் படத்தை அகற்றியதால, அதிகாரியை மாத்திட்டாவ வே...'' என, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை பட்டீஸ்வர சுவாமி கோவில் உதவி கமிஷனர் விமலா, ஹிந்து அறநிலைய துறை கமிஷனருக்கு சமீபத்துல ஒரு கடிதம் அனுப்பியிருக்காங்க...
அதுல, 'லோக்சபா தேர்தலை ஒட்டி, பட்டீஸ்வர சுவாமி கோவில் அலுவலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படம் நீக்கப்பட்டது... தேர்தல் முடிவுகள் வெளியானதும், மறுபடியும் முதல்வர் படத்தை வச்சுட்டோம்'னு சொல்லியிருந்தாங்க வே...
''ஆனா, முதல்வர் படத்தை கடந்த செப்., 10ம் தேதி தான் மறுபடியும் வச்சிருக்காவ... இதை, உளவுத்துறை போலீசாரும் உறுதிப்படுத்திட்டாவ வே...
''இந்த பிரச்னையில, இந்த கோவில்ல அயல் பணியில இருந்த ஆய்வாளர் அமுதாவை மாத்திட்டாங்க... படம் விவகாரத்துல, உண்மைக்கு மாறான தகவலை தெரிவிச்சதா உதவி கமிஷனர் மீதும் விசாரணை நடக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''சாதனை பட்டியல் போட்டு, எதிர்ப்பை காட்டியிருக்காரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''பால்வள துறை அமைச்சரா இருந்த மனோ தங்கராஜை வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே... 'கல்தா' கொடுத்த அன்னைக்கே, தன் துறையில தான் செய்த சாதனைகளை, 'எக்ஸ்' தளத்துல மனோ பட்டியல் போட்டிருக்காரு பா...
''அதுவும் இல்லாம, அதுக்கு முன்னாடிதான் இருந்த ஐ.டி., துறையிலயும் பல சாதனைகளை செய்தேன்னு குறிப்பிட்டிருந்தாரு... 'இப்படி திறமையா செயல்பட்டும், என்னை நீக்கியது நியாயமா'ன்னு தலைமையை கேட்கிற விதமா, அந்த பட்டியல் இருந்துச்சு பா...
''அதுவும் இல்லாம, அவரை பதவியில் இருந்து நீக்கிய அன்னைக்கு, மதுரையில ஒரு அமைப்பு சார்புல, 'கொள்கைவாதி களுக்கு தி.மு.க.,வுல இடமில்லை... வசூல் செய்து தர்றவங்களுக்கு தான் மவுசு... மனோவுக்கு மறுபடியும் அமைச்சர் பதவி தரணும்'னு சிலர் பேட்டி தந்த விஷயமும், தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்திடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.
''கூட்டணி கட்சிக்கே இதான் மரியாதையான்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பத்தி அவதுாறா பேசி, கொலை மிரட்டலும் விடுத்ததா, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, உ.பி., மாநில பா.ஜ., அமைச்சர் ரகுராஜ்சிங், மஹாராஷ்டிரா பா.ஜ., - எம்.எல்.ஏ., சஞ்சய் கெய்க்வாட் போன்றவர்கள் மீது தமிழகம் முழுக்க இருக்கிற எல்லா போலீஸ் ஸ்டேஷன்கள்லயும் புகார் குடுக்கணும்னு, காங்கிரசாருக்கு கட்சி மேலிடம் உத்தரவு போட்டிருக்குதுங்க...
''ஆனா, சென்னை மட்டுமல்லாம தமிழகம் முழுக்க எந்த ஸ்டேஷன்லயும் காங்., நிர்வாகிகள் குடுத்த புகார்களை, போலீசார் ஏறிட்டும் பார்க்கல... புகார்களை வாங்கிட்டு, சி.எஸ்.ஆர்., ரசீது கூட குடுக்க மறுத்துட்டாங்க... இதனால, 'ஆளும் கட்சி கூட்டணியில இருக்கிற எங்களுக்கே இந்த கதியா'ன்னு காங்கிரசார் புலம்பிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.