PUBLISHED ON : ஏப் 05, 2026 02:47 AM

''எ னக்கு போட்டியா யாராவது, 'சீட்' கேளுங்கன்னு துாண்டி விட்டாராம் பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''ஆச்சரியமா இருக்கே... யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, தி.மு.க., வேட்பாளரா, அமைச்சர் சாமிநாதனே மீண்டும் போட்டியிடுறாரு... இவருக்கு தான் சீட்னு உறுதியா தெரிஞ்சிட்டதால, இந்த தொகுதிக்கு யாரும் விருப்ப மனு போடல பா...
''இதை பார்த்த அமைச்சர், 'நான் தான் மிரட்டி, யாரையும் மனு போட விடாம தடுத்துட்டதா தலைமை நினைச்சிடும்... அதனால, யாராவது மனு போடுங்க... நேர்காணலுக்கும் வாங்க'ன்னு சொல்லியிருக்காரு பா...
''அப்புறமா, காங்கேயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் உட்பட ஆறு பேர், விருப்ப மனுக்கள் போட்டு, நேர்காணல்லயும் கலந்துக்கிட்டாங்க... இதுக்கு இடையில், கார்த்திகேய சிவசேனாபதி என்பவர், 2021 தேர்தல்லயே காங்கேயத்தை கேட்டாரு பா...
''ஆனா அவருக்கு, கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் தொகுதியை கொடுத்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து, தோத்தும் போயிட்டாரு... அவர் இந்த முறை உஷாராகி, 'தந்தா காங்கேயம் தாங்க, இல்லாட்டி சீட்டே வேண்டாம்'னு ஒதுங்கிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்கிட்டயும் சீட் சம்பந்தமா ஒரு தகவல் இருக்குல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில், தற்போதைய தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசனுக்கு மீண்டும் சீட் கிடைக்கும்னு எல்லாரும் எதிர்பார்த்தாவ... ஆனா, கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர், சுகுமாரின் மனைவி நித்யாவுக்கு சீட் குடுத்துட்டாவ வே...
''இதனால, எழிலரசன் தரப்பு அதிர்ச்சியாயிட்டு... அவரது ஆதரவாளரான, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலர் பி.எம்.குமார், தன் முகநுால் பக்கத்துல, 'உண்மைக்கும், உழைப்புக்கும் மரியாதை இல்லை... நடிப்புக்கும், பொய்க்கும் தான் காலமா இருக்கு... இதை தலைமையும் நம்புது'ன்னு பதிவு போட்டுட்டாரு...
''இதை பார்த்துட்டு, 'தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல் உச்சத்துல இருக்கு'ன்னு, அ.தி.மு.க.,வினர் கிண்டல் அடிக்க, உடனே அந்த பதிவை அழிச்சிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''இருந்த இடத்துக்கே திரும்பி வந்துட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை மாநகர போலீசில், காவலர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்றது உள்ளிட்ட பணிகளை கவனிக்க, 'எஸ்டேட் வெல்பேர்'னு ஒரு பிரிவு இயங்குது... இதுல அதிகாரியா இருந்தவரை, தேர்தலை முன்னிட்டு, போன பிப்ரவரி மாசம், ஈரோடு சிறப்பு காவல் படைக்கு மாத்தினாங்க...
''ஆனாலும், உயர் அதிகாரிகளிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, அயல் பணியா, சென்னை மயிலாப்பூர்ல வேலை பார்த்துட்டு இருந்தாரு... இப்ப, மீண்டும் எஸ்டேட் வெல்பேர் பிரிவுக்கே அதிகாரியா வந்துட்டாருங்க...
''இந்த பணி மாற்றங்கள் எல்லாமே அடுத்தடுத்து நடந்திருக்கு... 'எத்தனையோ அதிகாரிகள் வெவ்வேற இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும் சூழல்ல, இவர் மட்டும் போன வேகத்துல, அதே இடத்துக்கு திரும்பி வந்துட்டாரே'ன்னு, சக அதிகாரிகள் எல்லாம் மூக்கு மேல விரலை வச்சிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''வல்லவன், இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
