தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'இன்னோவா' காரில் வலம் வரும் ஏழை எம்.எல்.ஏ.,

 'இன்னோவா' காரில் வலம் வரும் ஏழை எம்.எல்.ஏ.,

 'இன்னோவா' காரில் வலம் வரும் ஏழை எம்.எல்.ஏ.,


PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, “சனாதனத்தை பத்தி பேசி, அமைச்சர் வாய்ப்பை பறிகொடுத்துட்டாரு பா...” என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.

“மதுரை மத்திய தொகுதியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் தியாகராஜனையும், அ.தி.மு.க., கூட்டணியில், புதிய நீதி கட்சி வேட்பாளரான சினிமா இயக்குநர் சுந்தர்.சி-யையும் தோற்கடிச்சு, த.வெ.க., சார்பில் எம்.எல்.ஏ.,வானவர் முஸ்தபா... த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்தின் தீவிர விசுவாசியான இவருக்கு, முஸ்லிம் கோட்டாவுல அமைச்சர் பதவி தரும் முடிவில் இருந்தாங்க...

“இதுக்கு இடையில் தி.மு.க.,வின் உதயநிதி, 'சனாதனத்தை ஒழிக்கணும்'னு மீண்டும் பேசினாரே... இது பத்தி முஸ்தபாவிடம் நிருபர்கள் கேட்க, 'சனாதனத்தை ஒழிக்கவே நாங்களும் வந்திருக்கோம்'னு சொல்ல, இது பெரும் சர்ச்சையாகிடுச்சு பா...

“முஸ்தபாவை தலைமை கூப்பிட்டு கண்டிக்க, 'நான் அந்த அர்த்தத்துல சொல்லல'ன்னு சமாளிச்சிருக்காரு... ஆனாலும், அமைச்சரவை பட்டியல்ல இருந்த அவர் பெயரை துாக்கிட்டு, அறந்தாங்கி எம்.எல்.ஏ., பர்வேஸ்க்கு அமைச்சர் பதவியை குடுத்துட்டாங்க பா...” என்றார், அன்வர்பாய்.

“சட்டவிரோத மது விற்பனையை தடுக்கணும்னு சொல்லுதாவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.

“சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில், 173 கிராமங்கள் இருக்கு... இதுல, ஆறு கிராமங்கள்ல மட்டும், 'டாஸ்மாக்' மதுபான கடைகள் இருக்கு வே...

“இதனால, பல கிராமங்கள்ல மது பாட்டில்களை சிலர் மொத்தமா வாங்கி, வீடுகள்ல வச்சு கூடுதல் விலைக்கு வித்துட்டு இருக்காவ... இதை கண்டுக்காத போலீசார், அப்பப்ப ஒப்புக்கு சோதனை நடத்தி, வழக்கு போடுதாவ வே...

“அதேநேரம், கிராமங்கள்ல நடக்கிற சட்டவிரோத மது விற்பனை பத்தி போலீசுக்கு யாராவது தகவல் குடுத்தா, அவங்களை போலீசாரே காட்டி குடுத்துடுதாவ... தகவல் தந்தவங்களை மது விற்பனை கும்பல், வீடு தேடி போய் மிரட்டுது வே...

“இதனால, பல கிராமங்கள்ல அடிக்கடி மோதல்கள் நடக்கு... 'பெரிய அளவுல அசம்பாவிதங்கள் நடக்கிறதுக்கு முன்னாடி போலீசார் முழிச்சுக்கணும்'னு கிராம மக்கள் சொல்லுதாவ வே...” என்றார், அண்ணாச்சி.

“இன்னோவா கார்ல வலம் வரார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., ராம்குமார், கோழிக்கறி கடை நடத்திண்டு இருக்கார்... ரொம்பவே எளிமையா இருந்தவர், இப்ப ஜெயிச்சதும், திடீர்னு இன்னோவா கார்ல உலா வரார் ஓய்...

“பல்லடம் பகுதி கல் குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், எம்.எல்.ஏ.,வுக்கு இந்த காரை பரிசா குடுத்திருக்கறதா, த.வெ.க., வட்டாரங்கள்லயே பேசிக்கறா... இதேபோல, வாடகை வீட்டில் குடியிருக்கற இவருக்கு, அனுப்பட்டி இரும்பு உருக்கு ஆலை சார்பில், ஒரு பங்களா பரிசா வழங்க ஏற்பாடு நடக்கறதாகவும், தொகுதிக்குள்ள தகவல்கள் உலா வரது ஓய்...

“இந்த உருக்கு ஆலைக்கு எதிரா, அனுப்பட்டி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திண்டு இருக்கா... இந்த சூழல்ல, எம்.எல்.ஏ., பத்தி இப்படி தகவல்கள் பரவறது, தொகுதி மக்களுக்கு பல சந்தேகங்களை கிளப்பியிருக்கு ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us