/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'குட்கா' பொருட்களின் விலை அதிரடி உயர்வு!
/
'குட்கா' பொருட்களின் விலை அதிரடி உயர்வு!
PUBLISHED ON : பிப் 23, 2024 12:00 AM

''கூடுதல் விலைக்கு விக்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், குப்பண்ணா.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''பொதுவா, கல்லுாரி கேன்டீன்கள்ல விக்கற டீ, காபி உள்ளிட்ட தின்பண்டங்களின் விலை, வெளியில இருக்கறதை விட கம்மியா இருக்கணும்... ஆனா, திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் அரசு கல்லுாரி கேன்டீனில், டீ, காபி, வடை உள்ளிட்ட பண்டங்களின் விலை, வெளியில இருக்கறதை விட, ரெண்டு முதல் மூணு ரூபாய் அதிகமா இருக்கு ஓய்...
''இதனால, '10 வருஷத்துக்கும் மேலா, கேன்டீன் நடத்தும் பொறுப்பை ஒருவருக்கே குடுக்கறது தான் இதுக்கு காரணம்'னு மாணவியர் சொல்றா... இந்த மாதிரி, பல அரசு கல்லுாரி கேன்டீன்கள்லயும் கூடுதல் விலைக்கு தான் விக்கறா... இதுல, உயர் கல்வித்துறை அதிகாரிகள் அக்கறை காட்டினா நன்னாயிருக்கும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கிட்டத்தட்ட 5 கி.மீ.,க்கு ஆத்தை சுரண்டி எடுத்துட்டாரு வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''-பெரம்பலுார் மாவட்டம், வயலப்பாடி பஞ்சாயத்துல, 'துணை' பதவியில இருக்கிறவரை தான் சொல்லுதேன்... எந்த அரசு அனுமதியும் இல்லாம, சின்னாற்றுல மணலை அள்ளி வித்துட்டு இருக்காரு வே...
''இந்த ஆத்துல, 5 கி.மீ.,க்கு 2 மீட்டர் உயரத்துக்கு சுரண்டி மணலை அள்ளிட்டாரு... இதுபோக, ஏரிகள்ல வண்டல் மண்ணையும் அள்ளி, லோடு 1,500 ரூபாய்னு வித்துடுதாரு வே...
''இவருக்கு தொழில் பார்ட்னரா, வயலப்பாடி யூனியன் பெண் கவுன்சிலரின் வீட்டுக்காரர் இருக்காரு... வயலப்பாடி பஞ்., 'தலை'யா இருக்கிறவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரு... அவரை டம்மியாக்கிட்டு, 'துணை'தான் ஆதிக்கம் செலுத்துதாரு வே...
''மணல் கடத்த வசதியா, பஞ்சாயத்துநிதி, 16 லட்சம் ரூபாய்ல தனி ரோடே போட்டுட்டாரு... இது போக, இந்திரா ஆவாஸ் யோஜனா, 100 நாள் வேலை திட்டம், பிரதமர்வீடு கட்டும் திட்டம்னு எல்லாத்துலயும் முறைகேடு பண்ணிட்டு இருக்காரு... அதிகாரிகள் தரப்புக்கு கரெக்டா பங்கு குடுத்துடுறதால, இவரையும், இவரது கூட்டாளியையும் அவங்க கண்டுக்க மாட்டேங்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''செந்தில்குமார், வரதராஜன் வராங்க... சுக்கு காபி போடுங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''குட்கா விலையை எல்லாம் ஏத்திட்டாங்க...'' என்றார்.
''அதை தமிழகத்துல விற்கப்டாதுன்னு சட்டம் இருக்கே ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சட்டம் எல்லாம் ஏட்டுல தான் இருக்கு... தமிழகம் முழுக்கவே, பரவலா குட்கா விற்பனை நடந்துட்டு தான் இருக்கு... முதல்ல, ஆந்திராவுல இருந்து கடத்திட்டு வந்தாங்க...
''அந்த மாநில எல்லையில சோதனை தீவிரமானதால, இப்ப கர்நாடகாவுல இருந்து கடத்திட்டு வர்றாங்க... சுகாதாரத் துறையினர், போலீசார் மாமூல் கெடுபிடியால, குட்கா பாக்கு, புகையிலை பொருட்களின் விலையை, சராசரியா 15ல் இருந்து 30 ரூபாய் வரைக்கும் ஏத்திட்டாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''குட்கா விற்பனையை தடுக்கணும்கற எண்ணம் அரசுக்கு நிஜமாவே இருந்தா, அந்த பொருட்கள் பிடிபடுற பகுதி சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசாரை, 'சஸ்பெண்ட்' செய்யணும்... அப்பதான் இதை கட்டுப்படுத்த முடியும் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.