/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு நிலத்தை ' ஆட்டை ' போட்ட ஆளுங்கட்சி புள்ளி!
/
அரசு நிலத்தை ' ஆட்டை ' போட்ட ஆளுங்கட்சி புள்ளி!
PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM

''மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''என்னத்தங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''போன வருஷம், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில கள்ளச்சாராயம் குடிச்சு, 69 பேர் இறந்து போனாங்களே... இந்த சம்பவத்தை அடுத்து, மதுவிலக்கு பிரிவு போலீசார் மாநிலம் முழுக்க அதிரடி சோதனை நடத்தி, கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தினாங்க பா...
''இப்ப, மறுபடியும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்குது... காவிரி, கல்லணை கால்வாய் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் ஆற்றங்கரைகள்ல ஊறல் போட்டு, பாக்கெட்டுகள்ல அடைச்சு விற்பனை பண்றாங்க பா...
''தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்ல சாயந்தரமானா கள்ளச்சாராய விற்பனை களைகட்டுது... ஒரு பாக்கெட், 50 ரூபாய்னு விற்குறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''புது அதிகாரியை மாட்டிவிட பார்த்திருக்காரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்ட வன அதிகாரியா, நேரடி ஐ.எப்.எஸ்., அல்லாத ராஜேஷ் நியமிக்கப்பட்டாரு... 'இவர் சரியா ஆபீஸ் வர்றது இல்ல' என்பது உள்ளிட்ட புகார்கள், மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்புல உயர் அதிகாரிகளுக்கு போச்சு வே...
''இந்த புகாரின் பின்னணியில், உடுமலையில ஏற்கனவே இருந்து இடமாறுதல் செய்யப்பட்ட அதிகாரி ஒருத்தர் தான் இருந்திருக்காரு... அந்த அதிகாரி, 2022 - 2024ல உடுமலை ரேஞ்சரா இருந்திருக்காரு வே...
''வனப்பகுதியில் விதிமீறி கட்டுமானங்களை அனுமதிச்ச புகார்ல சிக்கி, திண்டுக்கல் வன ஆராய்ச்சி மையத்துக்கு துாக்கி அடிக்கப்பட்டாரு... அங்க பணியில் சேராம லீவ்ல போன அதிகாரி, தன் இடமாறுதலை எதிர்த்து கோர்ட்ல வழக்கு போட்டு, இடைக்கால தடை வாங்கிட்டாரு வே...
''கிட்டத்தட்ட ஒரு வருஷம் லீவ்ல இருந்தவர், சமீபத்துல கரூர்ல நியமிக்கப்பட்டிருக்காரு... உடுமலை, அமராவதி போன்ற, 'பசை'யான இடங்களுக்கு இடமாறுதல் வாங்க காய் நகர்த்திட்டு இருக்காரு... புதுசா வந்த ராஜேஷ், தான் அங்க வர தடையா இருப்பார்னு நினைச்சு, அவர் மேல புகார்களை தட்டிவிட சொல்லியிருக்காரு வே...'' என்ற அண்ணாச்சியே, ''சிவகுமார் இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தார்.
''அரசு நிலத்தை, 'ஆட்டை' போட்டவர் கதையை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி யூனியன், திம்மராஜபுரம் பஞ்சாயத்து, பேரூரணி கிராமத்தை சேர்ந்த ரெண்டு பேர், தங்களுக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தை, 1990ல் அரசுக்கு தானமா குடுத்துட்டா... சும்மா கிடந்த அந்த நிலத்தை, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தர் ஆக்கிரமித்து, முள்வேலி அமைச்சிட்டார் ஓய்...
''அந்த பிரமுகர், பஞ்சாயத்துல பதவியில இருந்தப்ப, அந்த நிலத்துக்கு தன் மனைவி பெயர்ல வரி கட்டி, ரசீதும் குடுத்துட்டார்... அந்த ரசீதை காட்டி மின்வாரிய அதிகாரிகளை, 'கவனிச்சு' வணிக நோக்கத்துக்கான மின் இணைப்பையும் வாங்கிட்டார் ஓய்...
''அரசுக்கு தானமா வந்த நிலத்தை அபகரித்த அவர் மீதும், ஒத்தாசையா இருந்த வி.ஏ.ஓ., மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கணும்னு கலெக்டரிடம், சிலர் புகார் குடுத்திருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''வாங்க சித்திரை செல்வன்... ஊர்ல எல்லாரும் சவுக்கியமா...'' என, நண்பரிடம் அந்தோணிசாமி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.