/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
குடிநீர் இணைப்புக்கு ' கட்டிங் ' கேட்டு மிரட்டும் ஆளுங்கட்சி புள்ளி!
/
குடிநீர் இணைப்புக்கு ' கட்டிங் ' கேட்டு மிரட்டும் ஆளுங்கட்சி புள்ளி!
குடிநீர் இணைப்புக்கு ' கட்டிங் ' கேட்டு மிரட்டும் ஆளுங்கட்சி புள்ளி!
குடிநீர் இணைப்புக்கு ' கட்டிங் ' கேட்டு மிரட்டும் ஆளுங்கட்சி புள்ளி!
PUBLISHED ON : பிப் 12, 2026 01:20 AM

''மே டைக்கு பின்னாடி இருந்திருக்காருங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தி.மு.க., தென் மண்டல இளைஞரணி மாநாடு, சமீபத்தில் விருதுநகர்ல நடந்துச்சே... இந்த மாநாட்டுக்கு, துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி வருவார்னு, இளைஞர் அணி நிர்வாகிகள் எதிர்பார்த்தாங்க... ஆனா, அவர் வரல...
''அதே நேரம், முதல்வரின் மருமகன் சபரீசன் மாநாட்டுக்கு வந்திருக்காரு... அவர் வருகையை ரகசியமாவே வச்சிருந்தாங்க... அவரும் மேடைக்கு வராம, மேடைக்கு பின்புறம் தனி அறையில இருந்தாரு... அங்க இருந்தபடியே, மாநாட்டுக்கு வந்தவங்க பற்றிய விபரங்களை, தனது சர்வே நிறுவனத்துக்காக சேகரிச்சிட்டு போயிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தலைவர் மகனிடம் பேசுங்கன்னு அனுப்பிடறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு, ஆறு மாசத்துக்கு முன்னாடி, ஒரு பெண் அதிகாரி வந்தாங்க... இவங்க தினமும் சென்னையில இருந்து, பகல் 11:00 மணிக்கு வந்துட்டு, மதியம், 3:00 மணிக்கு, 'டான்'னு கிளம்பி போயிடறாங்க ஓய்...
''அவங்க அறைக்குள்ள அலுவலக ஊழியர்கள், பேரூராட்சி பெண் தலைவரின் மகன் தவிர, வேற யாரும் போக முடியாது... பேரூராட்சியில் நடக்கற வளர்ச்சி பணிகள், சுகாதார பணிகள்னு எதையும் ஆய்வு பண்றதும் இல்ல ஓய்...
''வீடு கட்ட அனுமதி, குடியிருப்பு பணி நிறைவு சான்றுன்னு எதா இருந்தாலும், தலைவரின் மகன் சொன்னா தான், கையெழுத்து போடறாங்க... வார்டு கவுன்சிலர்கள், அதிகாரியிடம் ஏதாவது கோரிக்கை வச்சாலும், 'தலைவர் மகனிடம் பேசுங்க... அவர் சொன்னாதான் செய்ய முடியும்'னு நழுவிடுறாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''யமுனா மேடம்... சுகுமாறன் தம்பிகிட்ட இன்னும் பேசல... பேசிட்டு, நானே கூப்பிடுதேன்...'' எனக் கூறி வைத்தபடியே, ''குடிநீர் இணைப்பு கொடுக்க, 'கட்டிங்' கேட்காரு வே...'' என்றார்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, மாநகராட்சியின் 113வது வார்டுல இருக்கிற நுங்கம் பாக்கம் சுப்புராயன் தெருவில், ஒரு பெண்மணி, தன் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு, குடிநீர் வாரியத்துக்கு பணமும் கட்டியிருக்காங்க... வாரிய ஊழியர்கள் வந்து, குடிநீர் குழாய்கள் அமைக்க பள்ளம் தோண்டியிருக்காவ வே...
''அப்ப, அவங்களுக்கு போன் போட்ட ஆளுங்கட்சி வட்ட நிர்வாகி, தனக்கு கட்டிங் வெட்டுனா தான், பள்ளம் தோண்ட முடியும்னு மிரட்டியிருக்காரு... அவர் லைனுக்கு போன வீட்டு பெண்மணி, 'என் மகனும், துணை முதல்வருக்கு நெருங்கிய அமைச்சரும் பள்ளி நண்பர்கள்... நான், அமைச்சர்கிட்ட பேசிக்கிறேன்'னு சொல்ல, அரண்டு போன வட்ட நிர்வாகி, 'நல்லபடியா குடிநீர் இணைப்பை முடிச்சு குடுக்கிறேன்'னு பம்மிட்டாரு வே...
''ஆனா, யார் குடிநீர் இணைப்பு கேட்டாலும், அவங்களிடம் கட்டிங் கேட்டு மிரட்டுறதை வாடிக்கையாவே வச்சிருக்காரு... இவர், மாவட்ட தி.மு.க., புள்ளிக்கு நெருக்கமானவர் என்பதால, தலைமையும் இவரை கண்டுக்காம இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''மகேஷ், சிற்றரசு வரா... பில்டர் காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

