/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரி வந்த பிறகே திறக்கப்படும் கோவில் நடை!
/
அதிகாரி வந்த பிறகே திறக்கப்படும் கோவில் நடை!
PUBLISHED ON : பிப் 19, 2024 12:00 AM

அதிகாலையே பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள் மத்தியில், ''மேலிடத்துக்கு வேண்டியவருங்கிறதால, மூடி மறைக்க பார்க்கிறாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''என்ன விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நிதி தொடர்பான வரவு -- செலவு பணிகளை கவனிக்கிறவர், கல்லுாரி நிதியில பல லட்சம் ரூபாய் முறைகேடு பண்ணி, பணத்தை பாக்கெட்டுல போட்டுக்கிட்டாரு பா...
''இது சம்பந்தமா, உயர்கல்வி துறைக்கு புகார்கள் போகவே, உயர் அதிகாரிகள் நேர்ல வந்து விசாரணை செஞ்சாங்க... வரவு - செலவு சம்பந்தமா தணிக்கையும் நடத்துனாங்க பா...
''இதுல, முறைகேடு நடந்தது உறுதியாகிடுச்சு... ஆனா, இதுல ஈடுபட்டவர், ஆளுங்கட்சி மேலிடத்துக்கு நெருக்கமானவருன்னு கடைசி நேரத்துல தகவல் கிடைக்க, அதிகாரிகள் அதிர்ச்சி ஆகிட்டாங்க... இதனால, அவர் மேல நடவடிக்கை எடுக்கிறதுக்கு பதிலா, முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி நடக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''சண்முகம், கொஞ்சம் தள்ளி உட்காரும்...'' என்றபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''பார்க்கிங் வசூல் வேட்டையில கொழிக்காரு வே...'' என்றார்.
''எந்த ஊருல, யாரு ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டடத்தின் அடித்தளத்துல, 1,000 கார்கள், 2,000 பைக் நிறுத்துற அளவுக்கு பார்க்கிங் வசதிகள் செஞ்சிருக்காவ... பார்க்கிங் கட்டண வசூலுக்கு கான்ட்ராக்ட் எடுத்தவருக்கு இணையா, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவரும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, பார்க்கிங் கட்டண வசூல்ல, கணிசமான தொகையை தனியா கல்லா கட்டிட்டு இருக்காரு வே...
''உயரதிகாரியின் பைபாஸ் ரூட் வசூல் வேட்டையால அரசுக்கும், கான்ட்ராக்ட் எடுத்தவங்களுக்கும் தான் நஷ்டம்னு, பலரும் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''நடை திறக்கறதுக்குள்ள ஆஜராகிடறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த கோவில்ல, யாருவே ஆஜராகுனா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல, அதிகாலை நடை திறக்கும் போதும், நடை அடைக்கும்போது அம்மன், சுவாமியை தரிசிக்க நிறைய பக்தர்கள் வரா... சமீப காலமா, அறநிலையத் துறை ஆபீஸ்ல இருக்கற இன்ஜினியர் ஒருத்தர், புதன்கிழமைகள்ல தவறாம அதிகாலை தரிசனத்துக்கு வந்துடறார் ஓய்...
''இதுல என்ன கூத்துன்னா, கோவில்ல பக்தர்களுக்கு நடை திறக்கறதுக்கு முன்னாடியே, சன்னிதிக்குள்ளே போயிடறார்... சொல்ல போன, அவர் வந்த பிறகு தான், பக்தர்களுக்கு நடையையே திறக்கறா ஓய்...
''நடை திறந்த பிறகே, சன்னிதிக்குள்ள பக்தர்கள் போகணும்கறது ஐதீகம்னு, மற்ற பக்தர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிச்சும், அதிகாரி அசரலை ஓய்...
''அந்த அதிகாரி குறித்து, கோவில் நிர்வாகத்திடம், 'ஆலயம் காப்போம்' உள்ளிட்ட அமைப்புகள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்ல ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''இந்தாங்க சந்திரசேகர்...'' என, நண்பரிடம் நாளிதழை நீட்டிவிட்டு அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

