/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முதல்வர் துறையில் நடந்த இடமாறுதல் குளறுபடி!
/
முதல்வர் துறையில் நடந்த இடமாறுதல் குளறுபடி!
PUBLISHED ON : ஜூலை 16, 2025 12:00 AM

''முதல்வரின் மனைவியை கவனிக்காம விட்டுட்டாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு தான் முதல்வர் மனைவி துர்காவின் சொந்த ஊரு... இவங்க வீட்டுக்கு பக்கத்துலயே சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இருக்கு வே...
''இந்த கோவில்ல, போன வாரம் கும்பாபிஷேகம் நடந்துச்சு... இதுல துர்கா, அவங்க குடும்பத்தினர் கலந்துக்கிட்டாவ... பாதுகாப்பு பணிகளை மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் கவனிச்சிருக்காவ... வி.வி.ஐ.பி.,க்கள் தரிசன ஏற்பாடுகளை, டி.எஸ்.பி., கிருஷ்ணனிடம் குடுத்திருந்தாவ வே...
''இவர், துர்கா வந்த காரை விட்டுட்டு, வேற யாரோ வந்த காரை, 'பிக்கப்' பண்ணி தரிசனத்துக்கு அழைச்சிட்டு போயிட்டாரு... துர்கா, அவங்க சொந்தக்காரங்க கார்கள் எல்லாம் கூட்ட நெரிசல்ல சிக்கிட்டு வே...
''ஒருவழியா துர்கா சாமி கும்பிட்டுட்டு தன் வீட்டுக்கு போனதும் தான் விஷயம் தெரிஞ்சு, போலீஸ் அதிகாரிகள் பதறி போயிட்டாங்க... அவங்க வீட்டுக்கு போய் ரெண்டு மணி நேரம் காத்து கிடந்து, மன்னிப்பு கேட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கிட்டயும் ஒரு போலீஸ் மேட்டர் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னை, பரங்கிமலையில் ஒரு போலீஸ் அதிகாரி இருக்கார்... இவர், தனக்கு கீழே இருக்கற அதிகாரிகள் யாரையுமே மதிக்கவே மாட்டேங்கறார் ஓய்...
''ஏதாவது முக்கியமான தகவல்களை தெரிவிக்க, ஏ.சி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் போன் போட்டாலும், எடுக்கறது இல்ல... சில நேரங்கள்ல, 'தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கார்'னு வர்ரது ஓய்...
''சில அதிகாரிகள், இவரை நேர்ல பார்க்க போனாலும், 'வீடியோ கான்பரன்ஸ்ல இருக்கேன்'னு சொல்லி, பார்க்கவும் மாட்டேங்கறார்... அதுவும் இல்லாம, தன்னை பத்தி உயர் அதிகாரிகளிடம் யாரும் புகார் பண்ணாதபடிக்கு எல்லாரையும் மிரட்டியும் வச்சிருக்கார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே, ''சீனிவாசன் இப்படி உட்காரும்...'' என நகர்ந்து நண்பருக்கு இடம் தந்தார்.
''முதல்வர் துறையில நடந்த குளறுபடியை கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தமிழக அரசின் சார்பில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை துவங்கியிருக்காங்க... தமிழகம் முழுக்க சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கி, 45 நாட்கள்ல தீர்வு தரணும்னு இலக்கு நிர்ணயிச்சிருக்காங்க...
''திட்டத்தை ஒருபக்கம் துவங்கிட்டு, இன்னொரு பக்கம் முதல்வரின் வசம் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாவட்ட அதிகாரிகள் பலரையும் அதிரடியா இடம் மாத்திட்டாங்க...
''இடமாறுதலாகி புதுசா வர்ற அதிகாரிகளுக்கு, மாவட்டத்துல இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் விபரங்களை எல்லாம் தெரிஞ்சுக்கவே ரெண்டு மாசம் ஆகும்... 'இப்படிப்பட்ட சூழல்ல முகாம்ல மனுக்களை வாங்கி, 45 நாளைக்குள்ள எப்படி தீர்வு காண முடியும்?'னு மாற்றுத்திறனாளிகள் புலம்புறாங்க...
''பொதுவா, அரசு அதிகாரிகள் குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில ஏப்ரல், மே மாதங்கள்ல தான் இடமாறுதல் போடுவாங்க... ஆனா, இங்க ஜூலையில இடமாறுதலை போட்டும் குளறுபடி பண்ணியிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.