/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சேர்மனுக்கு, 'கட்டை' போடும் ஒன்றிய செயலர்கள்!
/
சேர்மனுக்கு, 'கட்டை' போடும் ஒன்றிய செயலர்கள்!
PUBLISHED ON : ஜன 15, 2024 12:00 AM

பொங்கல் வாழ்த்துக் களை பரிமாறிக் கொண்ட பெரியவர்கள், பெரியசாமி அண்ணாச்சி எடுத்து வந்திருந்த சர்க்கரை பொங்கலை ருசித்தனர்.
சில விநாடிகளுக்கு பின், ''பாடம் எடுக்கறதை விட்டுண்டு, ரியல் எஸ்டேட் தொழில் பண்ணிண்டு இருக்கார் ஓய்...'' என்ற குப்பண்ணா வே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டத்துல, பிரபல முருகன் கோவில் ஊர்ல, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கு... இங்க பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் ஒருத்தர், பள்ளி யின், வரவு - செலவு கணக்குகளையும் பார்த்துக்கறதால, வகுப்புக்கு போய் சரியா பாடம் நடத்துறதே இல்ல ஓய்...
''இவர் மேல, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பெற்றோர் புகார் தெரிவிச்சும், தலைமை ஆசிரியை நடவடிக்கை எடுக்கல... இது தவிர, சக ஆசிரியர்களிடம் பணம் வசூல் பண்ணி, மாத ஏலச்சீட்டும் நடத்தறார் ஓய்...
''சமீப காலமா, ரியல் எஸ்டேட் தொழில்லயும் கால் பதிச்சிருக்கார்... இவர், பள்ளியில இருக்கற நேரத்தை விட, தொழில் விஷயமா வெளியில சுத்தற நேரம் தான் அதிகம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பக்கத்துல, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு போயிட்டு வந்தேன்... அதான் லேட்டு...'' என்றபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''உதவியாளரால, 'மாஜி'யின் கனவு பலிப்பது சந்தேகம் தான் வே...'' என்றார்.
''எந்த கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, ஆவடி மாநகராட்சியில அங்கீகாரம் பெற்ற கான்ட்ராக்டர்கள், 108 பேர் இருக்காவ... இவங்கள்ல பலர், செஞ்சு முடிச்ச பணிகளுக்கான பில் தொகை கிடைக்காம, மூணு வருஷமா அலையா அலையுதாவ வே...
''இந்தச் சூழல்ல, புதுசா பணிகள் எடுத்த கான்ட்ராக்டர்களிடம், '10 பர்சன்ட் கமிஷன் தரணும்'னு அந்த பகுதியை சேர்ந்த, 'மாஜி' அமைச்சரின் உதவியாளர் கறார் காட்டுறாரு... தர மறுத்தா, அவங்களை தரக்குறைவான வார்த்தை கள்ல திட்டுதாரு வே...
''அந்த மாஜியோ, பொங்கல் முடிஞ்சு, தனக்கு மறுபடியும் கோட்டையில பதவி கிடைக்கும்னு நம்பிட்டு இருக்காரு... 'அவரது கனவுக்கு இவரே வேட்டு வச்சிடுவார்'னு, மாநகராட்சி ஊழியர்கள் சொல்லுதாவ வே...'' என்ற அண்ணாச்சியே, 'நவ்சத் பாய் வாங்க... சூடா ஏலக்காய் டீ அடிக்கலாம்...'' என, நண்பரை அழைத்தார்.
''ஒன்றிய செயலர்கள் தலையீட்டால, சேர்மன் புலம்புறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மனா, தி.மு.க.,வின் ராமலிங்கம் இருக்காரு... பட்டியல் இனத்தை சேர்ந்தவரான இவரை, ஆளுங்கட்சியின் கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலர்கள் சுதந்திரமா செயல்பட விடாம முட்டுக்கட்டை போடுறாங்க...
''மத்திய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்ட பணிகளுக்கான டெண்டர்களை, பெரம்பலுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரன் சொன்னார்னு, இவங்க ரெண்டு பேருமே எடுத்துக்கிறாங்க... அதே மாதிரி, பொது நிதியில் செய்யப்படும் பணிகளையும் எந்த ஊரில், என்ன பணி செய்யணும், யாருக்கு டெண்டர் தரணும்கிறதை யும் இவங்க தான் முடிவு பண்றாங்க...
''பெரும்பாலும், யூனியன் ஆபீஸ்லயே இருக்கிற இவங்க, 'நிழல்' சேர்மன் மாதிரி தான் நடந்துக்கிறாங்க... அதிகாரிகள், ஊழியர் களையும் மிரட்டி வேலை வாங்குறாங்க... பாவம், சேர்மன் ராமலிங்கம், 'டம்மி பீஸ்' மாதிரி வலம் வர்றா ருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''நல்லதம்பி, ஜெகதீசன் இப்படி உட்காருங்க... நாங்க கிளம்புதோம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.