தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அதிகாரியை மிரட்டி த.வெ.க.,வினர் அடாவடி!

 அதிகாரியை மிரட்டி த.வெ.க.,வினர் அடாவடி!

 அதிகாரியை மிரட்டி த.வெ.க.,வினர் அடாவடி!

2


PUBLISHED ON : செப் 28, 2026 01:22 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2026 01:22 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாளிதழை மடித்தபடியே, “மரியாதை குறைவா பேசி மிரட்டுதாரு வே...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“யார் ஓய் அது...” என கேட்டார் குப்பண்ணா.

“பிரபல முருகன் கோவில் ஊர்ல இருக்கிற அரசு போக்குவரத்து கழக டிப்போ அதிகாரியை தான் சொல்லுதேன்... டிரைவர், கண்டக்டர், டிக்கெட் பரிசோதகர்னு, எல்லாரையும் ஒருமையில தாறுமாறா பேசி திட்டுதாரு வே...

“அவங்க விடுப்பு அல்லது, 'பர்மிஷன்' கேட்டா, 'வேலைக்கு வராட்டி, உன்னை தொலைச்சிடுவேன்'னு மிரட்டுதாரு... இவரது அடாவடியால பாதிக்கப்பட்ட நாலு ஊழியர்கள் தற்கொலை முயற்சியில இறங்கி, உயிர் பிழைச்சிருக்காவ வே...

“இதெல்லாம் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கு தெரிஞ்சிருந்தாலும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காம இருக்காவ... இதனால, டிப்போவுல இருக்கிற 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடும் மன உளைச்சல்ல இருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“ஞானசேகரன், இப்படி உட்காரும்... திருத்தணியில் முருகன் தரிசனம் எல்லாம் முடிஞ்சதா...” என விசாரித்த குப்பண்ணாவே, “புகார்களை மறைக்க பார்க்கறா ஓய்...” என, அடுத்த மேட்டருக்கு மாறினார்.

“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.

“இலங்கையில் இருந்து கடல் வழியா கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரையோர கிராமங்கள்ல விக்கறா... சில நாட்களுக்கு முன்னாடி, ஏர்வாடி பக்கத்துல ரெண்டு ஆண்கள், கண் மற்றும் மூக்குல ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தா ஓய்...

“இதை, 'சந்தேக மரணம்'னு போலீசார் வழக்கு பதிவு பண்ணா... ஆனா, ஏர்வாடி, கீழக்கரை பகுதிகள்ல போதைப் பொருள் நடமாட்டம் அதிகமா இருக்கு... போதைப் பொருளை நிறைய எடுத்து தான், ரெண்டு பேரும் இறந்து போயிட்டதா அப்பகுதி மக்கள் சொல்றா ஓய்...

“அதாவது, 'போதைப் பொருள் தடுப்பில் சிறப்பா பணியாற்றியதா, ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷுக்கு, சுதந்திர தின விழாவுல விருது வழங்கி, முதல்வர் விஜய் கவுரவிச்சார்...

'அதனால, போதைப் பொருளால ரெண்டு பேர் இறந்து போயிட்டதா சொன்னா, போலீஸ் துறைக்கு கெட்ட பெயர் வரும்னு நினைச்சு, போதை உயிரிழப்புகளை போலீசார் மூடி மறைக்கறா'ன்னு, இந்த பகுதி மக்கள் புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“த.வெ.க.,வினர் அடாவடியை கேளுங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் த.வெ.க., கவுன்சிலர் ஒருத்தர் இருக்காரு... இவர், காங்கிரசில் இருந்து த.வெ.க.,வுக்கு வந்தவரு பா...

“இவர், நகராட்சி சுகாதார அலுவலர் முத்து கணேஷை மிரட்டி மாமூல் கேட்டிருக்காரு... தன்னோட உறவினருக்கு ஏன் டெண்டர் தரலன்னு கேட்டும் மிரட்டியிருக்காரு பா...

“அதுவும் இல்லாம, அலுவலகத்துக்கு வந்து ஊழியர்களை மொபைல் போன்ல வீடியோ எடுக்கிறதும் இல்லாம, ஊழியர்கள் வருகை பதிவேட்டையும் அத்துமீறி பார்க்கிறதுன்னு அராஜகம் பண்றாரு பா...

“அதேபோல, மணப்பாறை தொகுதி த.வெ.க., முக்கிய புள்ளியின் மச்சான் ஒருத்தரும், தனக்கு ஏன் டெண்டர் தரலன்னு முத்து கணேஷை மிரட்டியிருக்காரு... இதனால, வெறுத்து போன முத்து கணேஷ், இவங்க ரெண்டு பேர் மீதும் மணப்பாறை போலீஸ்ல புகாரே குடுத்துட்டாரு... போலீசார் விசாரணை நடத்திட்டு இருக்காங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.

“செல்வா, இளம்பரிதி இங்கன உட்காருங்க... நாங்க கிளம்புதோம்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us