/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலி பட்டா வழங்கிய அதிகாரிகளுக்கு சிக்கல்!
/
போலி பட்டா வழங்கிய அதிகாரிகளுக்கு சிக்கல்!
PUBLISHED ON : அக் 24, 2025 12:00 AM

''சு காதாரமே இல்லாம மாட்டிறைச்சி விற்கிறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், குன்னுார்ல தான் இப்படி பண்றாங்க... தீபாவளி சமயத்துல, இங்க இருக்கிற இறைச்சி கூடத்துக்கு வந்த ஒரு மாடு இறந்து போயிடுச்சு பா...
''அந்த மாட்டை புதைக்க ஏற்பாடு செஞ்சாங்க... ஆனா, மாட்டின் உரிமையாளர், 'நானே புதைச்சிடுறேன்'னு எடுத்துட்டு போய், வெட்டி கறியாக்கி வித்துட்டாரு பா...
''இது பத்தி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும், தீபாவளி பரபரப்புல யாரும் கண்டுக்கல... இதனால, ஹிந்து முன்னணி தரப்புல, எஸ்.பி.,யிடம் புகார் குடுத்திருக்காங்க பா...
''இதே பகுதியில், சமீபத்துல வாகனத்தில் திறந்த நிலையில் இறைச்சியை எடுத்துட்டு போய், அதை நாய்கள் கடிச்சு குதறிடுச்சு... நீலகிரி மாவட்டத்துல உணவு பாதுகாப்பு துறைன்னு ஒண்ணு இருக்கா, இல்லையான்னே தெரியல பா...'' என்றார், அன்வர்பாய்.
''இப்பவே தொகுதிக்கு, 'துண்டு' போடறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்காரோல்லியோ...
''இவருக்கு, 76 வயசாகிட்டதால, வர தேர்தல்ல போட்டியிடாம, தன் மகன் அண்ணாமலையை களமிறக்க முடிவு பண்ணியிருக்காராம்... இதுக்காக, இவரது கற்பக விநாயகா மருத்துவக் கல்லுாரி மூலமா, திருமயம் தொகுதி முழுக்க, இப்பவே இலவச மருத்துவ முகாம்களை நடத்தறார் ஓய்...
''எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வில், மாவட்ட செயலர் வைரமுத்து, ரெண்டு முறை திருமயத்துல போட்டியிட்டு, சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்துல தான் ரகுபதியிடம் தோற்று போனார்...
''அதாவது, 2016 தேர்தல்ல, 766 ஓட்டுகள், 2021ல் 1,362 ஓட்டுகள் வித்தியாசத்துல தான் தோத்துருக்கார்... அதனால, இந்த முறை எப்படியும் ஜெயிச்சிடணும்னு, அவரும் களத்துல இறங்கி வேலை பார்த்துண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''போலி பட்டா குடுத்து மாட்டிக்கிட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னையை சேர்ந்தவங்க, 78 வயசான உமையவள்ளி... இவங்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம் கிராமத்தில், 12.5 சென்ட் நிலம் இருக்கு வே...
''அந்த நிலத்துக்கு, வேற சிலரிடம் அதிகாரிகள் பணத்தை வாங்கிட்டு, 'ஆன்லைன்'ல பட்டா குடுத்துட்டாவ... யார் பெயரிலும் நிலம் பதிவாகாம, பட்டா மட்டும் குடுத்தது மூதாட்டி, வில்லங்க சான்றிதழ் வாங்கியதுல, அம்பலமாயிட்டு வே...
''இதை எதிர்த்து மூதாட்டி கோர்ட்டுக்கு போய், போலி பட்டாவை ரத்து பண்ண உத்தரவு வாங்கிட்டாங்க... அதோட, 'போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரும் குடுத்திருக்காங்க வே...
''லஞ்ச ஒழிப்பு துறையும், 'இது சம்பந்தமான ஆவணங்களை குடுங்க'ன்னு, வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பி, அதை அவர் செங்கல்பட்டு கலெக்டருக்கு அனுப்பியிருக்காரு... இதனால, போலி பட்டா குடுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் கலக்கத்துல இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடியவே, பெரியவர்கள் கிளம்பினர்.

