/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அறநிலைய அதிகாரிக்கு குடைச்சல் தரும் அறங்காவலர்!
/
அறநிலைய அதிகாரிக்கு குடைச்சல் தரும் அறங்காவலர்!
PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''எல்லா கோஷ்டியும் கலந்துக்குமான்னு தெரியல பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''காங்கிரஸ் மேட்டராங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஆமா... பாகிஸ்தான் பயங்கரவாதிகளை துவம்சம் செய்த நம்ம ராணுவ வீரர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் விதமா காங்கிரஸ் சார்பில், மாவட்ட வாரியா, 'ஜெய்ஹிந்த் சபா' என்ற தலைப்புல பொதுக் கூட்டங்கள் நடத்தும்படி மேலிடம் உத்தரவு போட்டிருக்குது பா...
''அந்த வகையில, திருச்சியில் இன்னைக்கு காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பொதுக் கூட்டம் நடக்கு... இதுக்கு, எல்லா கோஷ்டி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்காங்க பா...
''ஏற்கனவே, சென்னை தேனாம்பேட்டை காங்., மைதானத்துல நடந்த அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டுல, சிதம்பரம் கலந்துக்கல... இந்த கூட்டத்துக்காவது அவர் வருவாரான்னு கட்சியினர் எதிர்பார்த்துட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மாறி மாறி கோஷம் போட்டு ரகளையில இறங்கிட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அம்ரித் பாரத் என்ற திட்டத்தில், நாடு முழுக்க 103 ரயில்வே ஸ்டேஷன்கள் புனரமைக்கப்பட்டு, சமீபத்துல பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமா திறந்து வச்சாரே... இதுல, கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனையும், 8 கோடி ரூபாய்ல புனரமைச்சு திறந்தாவ வே...
''திறப்பு விழாவுல பா.ஜ., நிர்வாகிகள், ஊத்தங்கரை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் உட்பட பலரும் கலந்துக்கிட்டாவ... கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத் வந்ததும், அவரை அதிகாரிகள் மேடைக்கு கூப்பிட்டாவ...
''அதுக்கு, பா.ஜ., நிர்வாகிகள் பலரும், 'பா.ஜ., அரசு செய்த பணிகளுக்கு எங்க கட்சி நிர்வாகிகளை மேடைக்கு கூப்பிடாம, காங்., - எம்.பி.,யை மட்டும் எப்படி கூப்பிடலாம்'னு வாக்குவாதத்துல இறங்கிட்டாவ வே...
''அதுவும் இல்லாம, 'தமிழகத்துக்கு திட்டங்களை அள்ளி தந்த பிரதமர் மோடி வாழ்க'ன்னு கோஷம் எழுப்ப, எம்.பி.,யுடன் வந்திருந்த காங்கிரசார், 'ராகுல் வாழ்க'ன்னு பதிலடி தர, அதிகாரிகள் பாடு திண்டாட்டமாயிட்டு...
''அப்புறமா, பா.ஜ., நிர்வாகிகளுக்கு முன்வரிசையில இருக்கை போட்டு, ஒருவழியா விழாவை நடத்தி முடிச்சாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அதிகாரிக்கு குடைச்சல் தரார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு, புதுசா அறநிலையத் துறை அதிகாரி ஒருத்தர் வந்திருக்கார்... அவர், வெட்டி செலவுகளை குறைச்சு, கோவில் வருவாயை பெருக்குறதுல ஆர்வமா இருக்கார் ஓய்...
''ஆனா, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அறங்காவலரோ, நிர்வாக விஷயங்கள்ல மூக்கை நுழைக்கறார்... அதிகாரி ஊர்ல இல்லாதப்ப, அறங்காவலரே ஒரு பெண்ணை துாய்மை பணியாளரா நியமிச்சிருக்கார் ஓய்...
''அந்தம்மா, துப்புரவு பணி செய்யாம, அர்ச்சனை சீட்டு வித்தாங்க... வேலைக்கும் அடிக்கடி, 'மட்டம்' போட்டாங்க ஓய்...
''இதை அதிகாரி தட்டிக் கேட்க, வேலையை விட்டு நின்னுட்ட அந்த பெண், அறங்காவலர் யோசனைப்படி, அதிகாரி மீது அறநிலையத் துறையின் உயர் அதிகாரிகளுக்கு பொய் புகார்களை அனுப்பியிருக்காங்க...
''அறங்காவலர் டார்ச்சரால, ராஜினாமா பண்ணிட்டு போயிடலாமாங்கற அளவுக்கு, அதிகாரி நொந்து போயிருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
டீ கடை ரேடியோவில், 'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சவுக்கியமா...' என்ற பாடல் ஒலிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.